வழியுரைப்போர், உத்தம மான பண்புற் றுரைப்பவர் தூதராகும்" என்பது நிகண்டு. (368) 231.- இதுவும், அடுத்தகவியும்- ஒருதொடர்: கடோற்கசன் அருச்சுனனது சபதம் முதலியனதெரிவித்து, தன்னைத்தூதனுப்பினதன் காரணத்தையும் தெரிவித்தமை கூறும். தன்றிருமைந்தனைமௌலிதுணித்தசயத்திரதன்றனைவாள் வென்றிகொள்காவலர்காவன்மிகுப்பினும்வெயிலவன்வீழ்வதன்முன் கொன்றிடுவேனதுதப்பினருங்கனலூடுகுதித்திடுவே னென்றுமொழிந்தரன்வாழ்கயிலாயமுமெய்தினன்வில்விசயன். |
(இ-ள்.) தன் திரு மைந்தனை - தனது சிறந்த புத்திரனான அபிமனை, மௌலிதுணித்த - தலையைத் துண்டித்த, சயத்திரதன்தனை- சயத்திரதனை, வாள் வென்றிகொள் காவலர் - ஆயுதங்களால் வெற்றியைக்கொள்ளும் அரசர்கள், காவல்மிகுப்பின்உம் - காத்திடுதலை மிகுதியாகச்செய்தாலும், வெயிலவன் வீழ்வதன் முன் -(நாளைச்) சூரியன் அஸ்தமித்தற்குமுன்பு, கொன்றிடுவேன்-; அது தப்பின் - அங்ஙனச்செய்தல் தவறினால், அரு கனலூடு குதித்திடுவேன் - (மீளுதற்கு) அரிய அக்கினியிலே பிரவேசித்துவிடுவேன்; என்று மொழிந்து - என்று சபதஞ்செய்து, வில்விசயன் - வில்லில் வல்ல அருச்சுனன், (அதற்குஏற்ற கருவி பெறும்பொருட்டு), அரன்வாழ் கயிலாயம்உம் எய்தினன்- சிவபிரான் வாழ்கிறகைலாசகிரியையடை தலையுஞ் செய்தான்; (எ -று.) - பி - ம்: காவல்வீரர் தடுப்பினும். (369) 232. | வஞ்சனை யாலம ரிற்பகை தன்னைம லைப்பது பாதகமென், றஞ்சின னாதலி னீயறி யும்படி யையன்வி டுத்தனனா, லெஞ்சினனாளையுன் மைத்துன னென்றுகொ ளென்றனன் வன்றிறல்கூர், நெஞ்சினில் வேறொரு சஞ்சல மற்றநி சாசரன் மாமருகன். |
(இ -ள்.) 'வஞ்சனையால்-, அமரில்-போரில், பகைதன்னை - பகைவனை, மலைப்பது-அழிப்பது, பாதகம்-தீவினை,' என்று-என்று எண்ணி, அஞ்சினன் ஆதலின் - பயந்தா னாதலால், நீ அறியும்படி - நீ (இவ்வுண்மையை) உணரும்படி, ஐயன்- (என் தலைவனானதருமன், விடுத்தனன் - (என்னைத்) தூதனுப்பினான்; 'நாளை - நாளைக்கு, உன் மைத்துனன்-உனது உடன்பிறந்தவள் கணவனானசயத்திரதன், எஞ்சினன்- இறந்தொழிந்தான்,' என்று கொள் - என்று நிச்சயித்துக்கொள், என்றனன் - என்றுகூறினான்: (யாவனெனில்),- வல்திறல் கூர் - கொடிய பராக்கிரமம் மிக்க, நெஞ்சினில் - மனத்தில், வேறு ஒரு சஞ்சலம் அற்ற - (அதற்கு) மாறான கவலைசிறிதுமில்லாத, நிசாசரன் மா மருகன் - (இடிம்பனாகிய) அரக்கனது சிறந்த மருமகனான கடோற்கசன்; (எ - று.) இங்கே, 'வஞ்சனை' என்றது - முன்புதெரிவியாமற் பின்பு கொல்வதனையே. நாளை எஞ்சினன் - தெளிவுபற்றிய காலவழுமைதி. நிசாசரன்மாமருகன் - இடிம்பனுடன்பிறந்த இடிம்பியின்மகன். (370) |