கசனை இப்பொழுது யாதொன்றுஞ் செய்யமுடியாதென்று கருதித் துரியோதனன் அவனுடன் எவரும் ஒன்றும் பேசவேண்டா என்று கட்டளையிட்டதாகவுங் கொள்ளலாம். (380) 243.- இதுமுதல் மூன்றுகவிகள் - அதுகேட்ட கடோற்கசன் துரியோதனாதியரின் கொடுமைதோன்றக்கூறி, அருச்சுனன் திறமையைச்சொல்லி மீளுதலைத் தெரிவிக்கும். அந்தவுரைமீண்டிவன் கேட்டாங்கவனைநகைத்துரைப்பானரக்க ரேனுஞ், சிந்தனையில்விரகெண்ணார்செருமுகத்தில்வஞ்சகமுஞ்செய் யாரையா, வெந்திறல்கூர்துணைவருக்குவிட மருத்தார்நிரைக்கழுவில் வீழச்செய்யா, ருந்துபுனலிடைப்புதையாரோரூரிலிருப்பகற்றாருரை யுந்தப்பார். |
இதுவும் மேற்கவியும் - ஒருதொடர். (இ -ள்.) அந்த உரை - (இங்ஙனங்கூறிய) அத்துரியோதனன் வார்த்தையை, கேட்டு-, இவன்- இந்தக்கடோற்கசன், ஆங்கு - அப்பொழுது, மீண்டு - மறுபடியும், அவனை நகைத்து உரைப்பான் - அத்துரியோதனனைப் பரிகசித்துப்பேசுவான்;- ஐயா-! அரக்கர்ஏன் ஒம் - (எனதுசாதியார்) இராக்கதரேயானாலும், (உம்மைப்போல), வெம் திறல் கூர் துணைவருக்கு - கொடிய வலிமைமிக்க உடன் பிறந்தவர்களுக்கு, சிந்தனையில் - மனத்தில், விரகு எண்ணார் - வஞ்சனையா நினைக்கமாட்டார்கள்; செரு முகத்தில் - போர்க்களத்தில், வஞ்சகம்உம் செய்யார் - வஞ்சனைசெய்யவும் மாட்டார்கள்; விடம் அருத்தார் - விஷத்தை உண்பிக்கமாட்டார்கள் ; நிரை கழுவில் வீழ செய்யார் - வரிசையான கழுமுனையிலே விழும்படி செய்ய மாட்டார்கள் ; உந்து புனலிடை புதையார் - பாய்கிற நீர்ப் பெருக்கில் அழுத்தமாட்டார்கள்; ஓர் ஊரில் இருப்பு அகற்றார்- (தாம் இருக்கும்) ஓரூரிலே அவர்களிருத்தலை விலக்கமாட்டார்கள்; உரைஉம் - (சொன்ன) வார்த்தையும், தப்பார்-; (எ -று.) இதிற்குறித்த தீங்குகள்யாவும் துரியோதனனிடம் உள்ளன வென்பதை, மேற்பாட்டில் 'இவையெல்லா மடிகளுக்கே ஏற்ப' என்று விளக்குவன். துரியோதனன் சிந்தனையில் விரகெண்ணியது, அநந்தம், செருமுகத்தில் வஞ்சகஞ்செய்ததும், அபிமந்யுவதம் முதலாகப் பலவாம். துரியோதனாதியரும் பாண்டவரும், இளம்பிராயத்தில் ஒருநாள் கங்கையில் நீர்விளையாடி அதன் துறையில் ஒருசார் இன்னுணவுண்டு களித்துக் கண்டுயில, அவ்விரவில் துரியோதனன் வீமனைக் கொல்லும் பொருட்டுச் சகுனிமுதலானாரோடு ஆலோசித்து அவனை வலியகயிறுகளால் கைகால்களைக் கட்டி அப்பெருநதியில் எறிந்து விட, அதில்விழுந்து துயிலுணர்ந்த வீமன் தன் உடல் வலியால் அக்கட்டுக்களைத் துணித்துக்கொண்டு கரையேறிப் பிழைத்தானென்பதும்; மற்றொருநாள் கங்கைத்துறையில் எழுக்களினாலும் இரும்புகளினாலும் செம்மரங்களினாலும் கூரிய கழுக்களை நீரின்மேல் தோன்றாதபடி நாட்டச்செய்து துரியோதனன் வீமனை 'நீரில் விளையாடலாம் வா' என்று வஞ்சனையாக அழைத்துப்போய் 'இங்கிருந்து நீ நீரில் குதிக்கிறாயா, பார்ப்போம், என்ன, அப்பொழுது கண்ணன். |