உதைய - விரைந்து செலுத்தவும்,- இரண்டு கார் தம்மில் எதிர்ந்து மலைவுறும் கணக்குஎன - இரண்டுமேகங்கள் தமக்குள்[ஒன்றோடொன்று] எதிர்த்துப் போர்செய்யும்விதம்போல.- இரண்டு வீரருக்குஉம்- (துரோணன் அருச்சுனன் என்ற) இரண்டு வீரர்களுக்கும், போர் ஒத்து நின்ற பொழுதில்ஏ - யுத்தம் ஏற்றத்தாழ்வில்லாமற் சமமாக நடந்துநின்ற பொழுதிலே,- ( எ -று.)-"மால் தேரை உட்செலுத்தினான்" என அடுத்த கவியோடு தொடர்ந்து முடியும். இடசாரி - இடப்பக்கமாகச் செல்லுதல். வலசாரி - வலப்பக்கமாகச் செல்லுதல். மண்டலம் - முழுவதும் சுற்றுதல். விற்கொண்டு இடைவிடாது அம்புமழைபொழிதலில் துரோணார்ச்சுனர்க்குக் காளமேகம் உவமை. காரிரண்டு எதிர்ந்துதம்மில்மலைதல் - இல் பொருளுவமை. பி - ம் : காரிரண்டதிர்ந்து. (411) 15.- அப்போது கண்ணன் துரோணனை விலகித் தேரைஉட்செலுத்தல். இகல்செய்வெஞ்சிலைக்கைவீரவிந்நிலந்தனக்குநின் பகைவனின்றவந்நிலம்பதிற்றிரண்டியோசனை புகலுகின்றபொழுதுசென்றதென்றவட்பொறாமன்மா லுகளுகின்றபரிகொடேரையுள்ளுறச்செலுத்தினான். |
(இ-ள்.) (அப்பொழுது), - மால் - கண்ணபிரான்,- அவண் பொறாமல் - அவ்விடத்து (க் காலதாமதஞ் செய்தலை) ப் பொறாமல்,- (அருச்சுனனை நோக்கி),- 'இகல் செய் - போரைச் செய்கிற, வெம் சிலை - கொடிய (காண்டீவ) வில்லை ஏந்திய, கை - கையையுடைய, வீர- வீரனே! நின் பகைவன் நின்ற அ நிலம் - உனதுபகைவனான சயத்திரதன் நின்றுள்ள அவ்விடம், இ நிலந்தனக்கு - (நாம் நிற்கும்) இவ்விடத்துக்கு, பதிற்றிரண்டுயோசனை - இருபது யோசனை தூரத்திலுள்ளது; புகலுகின்ற பொழுது சென்றது - கணக்கிட்டுச் சொல்லப்படுகிற பொழுது கழிந்திட்டது', என்று - என்றுசொல்லி,- உகளுகின்ற பரி கொள் தேரை- தாவிச்செல்லுகிற குதிரைகளைப் பூண்ட (அருச்சுனனது) தேரை, உள் உற செலுத்தினான்- (துரோணனது வியூகத்தின்) உள்ளே பாய்ந்து செல்லும்படி ஓட்டியருளினான் ; ( எ -று.) கௌரவசேனாமுகத்தில் நின்றுள்ள துரோணானோடு அருச்சுனன்போர்செய்கையில் காலதாமத்தைக்கண்டு பொறாதகிருஷ்ணமூர்த்தி, அருச்சுனனைநோக்கி 'உன்பகைவன் நின்றுள்ள இடம் இவ்விடத்துக்கு இருபது யோசனை தூரமுள்ளது: அங்ஙனிருக்கையில், இவ்வாசிரிய னொருவனுடனே விடாது திறங்காட்டிப் பொருதுகொண்டிருந்தால் சபதத்தை நிறைவேற்றுதல் அரிதாய் விடும்; ஆனதுபற்றி, இப்பயனில்போரை இவ்வளவோடு நிறுத்துவாய்' என்று குறிப்பாகச்சொல்லிக்கொண்டே தந்திரமாகத் தனது தேர்க்குதிரைகளைத் துரோணனைவிலகி அவனதுவியூகத்தினுட் பாய்ந்து சென்றுசேரும்படி விரைவாகச்செலுத்தினனென்பதாம். புகலுகின்ற பொழுது சென்றது என்பதற்கு - நீ சபதங்கூறின காலம்கழிந்திடுகின்றதென இடைநிலை பிரித்துக்கூட்டிப் பொருள் கொள்ளுதல் பொருத்தம். (412) |