பக்கம் எண் :

266பாரதம்துரோண பருவம்

சுனனுடைய) வில் ஒன்றுதானே, ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற (து) -
வலிமையையுடைய (ஆயிரவாகுவினது) ஐந்நூறு விற்களுடனே எதிர்த்துநின்றது;
(எ -று.) - பி -ம்: இசைந்த.

     ஆயிரவாகு தனது பல கைகளாலும் அளவிறந்த அம்புகளை ஏவுகையில்,
அருச்சுனன் தனது இருகைகளாலேயே அவற்றிற் கெல்லாம்எதிராக
அளவிறந்தஅம்புகளைச் சொரிந்து சலியாது போர்செய்தனனென்பதாம்.
இப்பாட்டின்முன்னிரண்டடி, எய்கிற அம்பு ஒவ்வொன்றே தெய்வத்தன்மையால்
வரவரப் பலவாய் வளர்ந்து சென்று எதிரிடுதலை விளக்கியது. குதை என்னும்
வில்லின் அடியின் பெயர், இங்குவில்லுக்குச் சினையாகுபெயராம்.

41.- அருச்சுனன் ஆயிரவாகுவின் தோள்களையெல்லாந் துணித்தல்.

அலிமுகந்தொழுமிளவல்வாணனைப்புயமழித்தமாமறையொன்று
வலிமுகங்கொடியுயர்த்தவன்செவியினிலுரைக்கமற்றதுபெற்றங்
குலிமுகஞ்செறிவரிசிலைகால்பொரக்குனித்துவன்பொடுதொட்ட
சிலிமுகங்களிற்றுணித்தனனாயிரஞ்சிகரவாகுவுஞ்சேர.

     (இ -ள்.) அலி - (தமையனான) பலராமரன, முகம் தொழும் - முன் நின்று
வணங்குந்தன்மையுள்ள, இளவல் - தம்பியான கண்ணபிரான், வாணனை புயம்
அழித்த மா மறை ஒன்று - (முன்பு தான்) வாணாசுரனை (ஒருங்கே ஆயிரந்)
தோள்துணித்தற்கு உபயோகித்த சிறந்ததொரு மந்திரத்தை, வலிமுகம் கொடி
உயர்த்தவன் செவியினில் உரைக்க - குரங்குவடிவத்தைக் கொடியிலே
உயரஎடுத்துள்ளவனான அருச்சுனனது காதிலே (அப்பொழுது) உபதேசிக்க,
மற்று -பின்பு [உடனே], (அருச்சுனன்), அது பெற்று - அந்த மந்திரத்தைத்
தெரிந்துகொண்டு, அங்குலி முகம் செறி வரி சிலை - கைவிரல்களின் இடையிலே
உறுதியாகப் பிடித்த கட்டமைந்த காண்டீவவில்லை, கால் பொர குனித்து - நுனிகள்
வளைந்து பொருந்தும்படி வளைத்து, வன்பொடு தொட்ட - வலிமையோடு
பிரயோகித்த, சிலிமுகங்களின் - அம்புகளினால், ஆயிரம் சிகரம்  வாகுஉம் -
மலையுச்சிபோலுயர்ந்த வலிய (அவன்) ஆயிரந்தோள்களையும், சேர
துணித்தனன் -ஒருங்கே துணித்திட்டான்; (எ -று.)

     அலி = ஹலீ: வடசொல்: இது, பலராமன்பெயர்; ஹலம் என்னும்
ஆயுதத்தையுடையவன்: ஹலம் - கலப்பை. பலராமன் கண்ணனுக்குத் தமையன்;
திருமாலின் எட்டாம் அவதாரம் :  இவனிடத்து ஆதிசேஷனது அம்சமுங்
கலந்திருந்தது. வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் கர்ப்பத்தில்
(ஏழாவதுகருவாக) ஆறுமாசமும், ரோகிணியின் கர்ப்பத்தில் ஆறுமாசமும் இருந்து
பிறந்தவனிவன். இவனுக்கு கலப்பையும் உலக்கையும் ஆயுதங்கள். தேவகியின்
எட்டாவதுகருப்பத்தில் அவதரித்தவனும் திருமாலின் ஒன்பதாம் அவதாரமுமான
கண்ணனுக்கு இவன் தமையனாதல் காண்க. முகந் தொழும் என்பது - தலையால்
வணங்கு மென்றும் பொருள்படும்.                                (438)