56.- தோற்ற வீரர்கள் துரியோதனனிடம் முறையிடுதல். அப்பாலிவனுடனேபொருதனிலத்தெதிர்சருகோ டொப்பாயுளம்வெருவெய்தியுடைந்தோடியவீரர் தப்பாரொருவருமின்றடுசமரந்தனில்விசயன் கைப்பாய்கணைபொரநேர்ந்தவர்கழன்மன்னவவென்றார். |
(இ-ள்.) இவனுடனே பொருது - இந்த அருச்சுனனோடுபோர் செய்து, அனிலத்து எதிர் சருகோடு ஒப்பு ஆய் - காற்றின்முன் நேர்ந்த சருகோடு சமமாய்[காற்றிலகப்பட்ட சரு்குபோல], உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய - மனத்தில் அச்சமடைந்து உறுதி நிலைகெட்டுப் புறங்கொடுத்தோடின, வீரர் - வீரர்கள்,- அப்பால்- எதிர்ப்பக்கத்தில்,- (துரியோதனனைச் சேர்ந்து அவனை நோக்கி), 'கழல் மன்னவ - வீரக்கழலையணிந்த அரசனே! இன்று-, அடுசமரந்தனில்-(பகைவரை) அழிக்குந்தன்மையதான போரில், விசயன் கை பாய் கணை பொர -அருச்சுனனது கையினின்று விரைந்து வெளிவருகிற அம்புகள் தாக்குதலால்,நேர்ந்தவர் ஒருவர்உம் தப்பார்- (அவனை) எதிர்த்தவருள் ஒருவரும்உயிர்தப்பிப்பிழையார்' என்றார் - என்று சொன்னார்கள்; ( எ -று.) - பி - ம்:பொரநொந்தவர் என்றும் படிக்கலாம். (453) 57.- துரியோதனன் துரோணனை யடுத்துக் குறைகூறுதல். துரியோதனனவர்சொல்லியசொற்றன்செவிசுடவே யரியோடெதிர்பொரவஞ்சியவடல்வாரணமனையா னெரியோடியபுரியென்னவிளைத்தாரணவேள்விப் பொரியோனடியெய்திச்சிறுமையினாலிவைபேசும். |
(இ -ள்.) அவர் - அந்தவீரர்கள், சொல்லிய - அவ்வாறு சொன்ன, சொல் -பேச்சு, தன் செவி சுடஏ - தனது காதுகளை வருத்துதலாலே,- அரியோடு எதிர்பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் - சிங்கத்தோடு எதிர்நின்றுபோர்செய்தற்குப் பயந்த வலிமையையுடைய யானைப் போன்றவனாகிய துரியோதனன்-, எரி ஓடிய புரி என்ன இளைத்து - தீமிகுதியாகப்பற்றிய நகரப்போலச் சோர்ந்து,- ஆரணம் வேள்வி பெரியோன் அடி யெய்தி- வேதவிதிப்படி யாகங்கள் செய்துள்ள பெரியோனான துரோணாசார்யனது பாதங்களைச் சேர்ந்து,- சிறுமையினால்- (தன் சேனையினது) எளிமைகாரணமாக, இவை பேசும் - இவ்வார்த்தைகளைச் சொல்வான்; (எ -று.)- அவற்றை அடுத்த மூன்றுகவிகளிற் காண்க. மிகத்தீப்பற்றிய நகரம், மிகப்பொலிவழிதற்கு உவமம், எரியோடியபுரி - அநுமானால் எங்கும் தீப்பற்றவைக்கப்பட்ட இலங்கை யென்றும், சிவபெருமானாலெரிக்கப்பட்ட திரிபுரமென்றுமாம்; அன்றி, நெருப்புப்பற்றிய வைக்கோற்புரிபோல வெனின், உள்ளீடில்லாமையில் உவமமென்க. (454) |