58.- இதுமுதல் மூன்றுகவிகள் - ஒருதொடர்; துரியோதனன் துரோணனைநோக்கிக் கூறியவார்த்தை. அதிரேகவிறற்பற்குனனம்போடேதிரம்பிட் டெதிரேறியவயமன்னரிலெம்மன்னர்பிழைத்தார் கதிரேகிடுமுன்றுச்சளைகணவன்றலைகடிதிற் பிதிரேறுவதல்லாததுபிழைப்பிப்பவரிலரால். |
(இ-ள்.) அதிரேகம் - மிகமேம்பட்ட, விறல் - பலபராக்கிரமங்களையுடைய, பற்குனன் - அருச்சுனனது, அம்போடு- அம்புகளுடன் மாறாக, எதிர் அம்பு இட்டு - எதிரம்புதொடுத்துக்கொண்டு, எதிர் ஏறிய- அவனெதிரிலே எதிர்த்துச்சென்ற, வய மன்னரில்- வலிமையுடைய அரசர்களில், ஏ மன்னர் பிழைத்தார்- எந்த அரசர் அழியாமற் பிழைத்தார்? (இங்ஙனம் ஆகுதலால்), கதிர் ஏகிடும் முன்- சூரியன் மறைந்துசெல்வதற்கு [அஸ்தமித்தற்கு] முன்னே, துச்சளை கணவன் தலை - (எமது தங்கையான) துச்சளையின் கொழுநனாகிய சயத்திரனது தலை, கடிதின் - விரைவிலே, பிதிர் எறுவது அல்லது- (அருச்சுனன்செய்த சபதத்தின்படி அவனாற்) சிதறிப் பொடிபடுதல்லாமல், அது பிழைப்பிப்பவர் இலர் - அங்ஙனமாகுதலைத் தவறச்செய்ய வல்லவர் எவருமில்லை; (எ -று.) எமது உடன்பிறந்தவளான துச்சளை மங்கலநாணிழவாதபடி அவள் கணவனான சயத்திரதனை உயிர்காத்தல் அதியவசியமென்பது தோன்ற, 'துச்சளைகணவன்'என்றும், இதுவரையிலும் அருச்சனனையெதிர்த்தவர்களில் யாரும்அழியாதுபிழைத்திலராதலால், இனியும் அவ்வாறேயா மென்பது தோன்ற 'பிழைப்பிப்பவரிலர்' என்றுங் கூறினான். (455) 59.- | காணாதவிடத்தாண்மையுறக்கூறுவர்கண்டா லேணாடமர்முனைதன்னிலிமைப்போதெதிர்நில்லார் நாணாதுமுன்வென்னிட்டிடுநஞ்சேனையடங்கச் சேணாடுறுமின்றேயொருசெயல்கண்டிலமையா |
(இ-ள்.) (நம்சேனைவீரர்), காணாதஇடத்து - (அருச்சுனனைக்) காணாத இடத்திலே, ஆண்மை - (அவனைத் தாம் வெல்வதாகப்) பராக்கிரமவார்த்தைகளை, உற கூறுவர் - மிகுதியாகச் சொல்வார்கள்; கண்டால்- (அவனைஎதிர்வரப்) பார்த்தாலோ, ஏண் ஆடு அமர் முனை தன்னில் - வலிமையாற் செய்யும் போர்க்கு உரிய களத்தில், இமை போது எதிர் நில்லார்- ஒருமாத்திரைப் பொழுதேனும் எதிர்த்துநிற்கமாட்டார்கள்; (இங்ஙனம் ஆகுதலால்), நம்சேனை அடங்க - நமது சேனைமுழுவதும், நாணாது - வெட்கமில்லாமல், முன் - (அவனது) முன்னிலையில், வென் இட்டிடும் - முதுகுகொடுத்தோடுகின்றன; (அங்ஙனம் ஓடவே), இன்றுஏ சேண் நாடு உறும் - (சயத்திரதன்) இன்றைக்கே (அருச்சுனனாற் கொல்லப்பட்டுச்) சுவர்க்க லோகஞ் சேர்வான்; ஐயா- ஸ்வாமீ! ஒரு செயல் கண்டிலம் - (இதற்குப்பரிகாரமாக) ஒரு செய்கையையுங் கண்டோமில்லை; ( எ -று.) |