சீர்களு மாகிய எண்சீராசிரியச்சந்தவிருத்தங்கள். ' தான தத்ததன தந்ததன தந்ததன தான தத்ததன தந்ததன தந்ததன' என்பது, இவற்றிற்குச் சந்தக் குழிப்பாம். (473) 77.- அப்போது துரியோதனன் அருச்சுனனை எதிர்த்தல். ஏறியிட்டவன்விரைந்திரதமுங்கடவியேகலுற்றபினியம்பல தழங்கியெழ வேறுபட்டமருடைந்தவர்களுந்திருகிமேலிடச்சகுனியுந் தினகரன்சுதனு மாறியிட்டரதகுஞ்சரதுரங்கமமுமாகவிப்படிபொரும் படையொடன்றுநனி சூறியிட்டனன்வலம்புரியலங்கல்புனைதோளிலெப்புவனமுந்தனி சுமந்தவனே. |
(இ-ள்.) ஏறியிட்டவன் - (இங்ஙனந்தேர்மேல்) ஏறின அருச்சுனன், இரதம்உம் விரைந்து கடவி - அத்தேரையும்(கண்ணபிரானைக்கொண்டு) விரைவாகச்செலுத்தி, ஏகல் உற்ற பின் - மேற்சென்றவுடனே,- வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனம்உம் தனிசுமந்தவன் - நந்தியாவர்த்தப் பூமாலையை (அடையாளமாகத்) தரித்ததோள்களிலே பூமிமுழுவதையுந் தனியேதாங்கிவனாகியதுரியோதனன்,- பல இயம் தழங்கி எழு - பலவகைவாத்தியங்கள் மிக்கு ஒலிக்கவும்,- வேறுபட்டு அமர் உடைந்தவர்கள்உம் திருகி மேல் இட - நிலைகலங்கிப் போரில் (முன்பு அருச்சுனன்முன்) தோற்றோடினவர்க உம் ஆறியிட்ட ரத குஞ்சர துரங்கம்உம் ஆக-(மாமனாகிய) சகுனியும் சூரியபுத்திரனாகிய கர்ணனும் (தெய்வப்பொய்கையில் நீர்பருகி) இளைப்பாறின தேர்யானைகுதிரைகளுமாக, இப்படி பொரும் படையொடு- இவ்வாறு போர்செய்யவல்ல சேனையுடனே, அன்று- அப்பொழுது, நனி சூறியிட்டனன் - மிகவும் கோபாவேசங்கொண்டு வளைத்திட்டான்; (எ-று.) அருச்சுனன் பகையழித்துக் கண்ணனுடன்தேரேறி அப்பாற்செல்லுமளவிலே, முன்பு துரோணனிடம் அழியாக்கவசம் பெற்ற துரியோதனன், அதனாற் செருக்கி, சகுனியையும் கர்ணனையும் சேனைகளையும் உடன்கொண்டு, தோற்று மீள்கிற தன்பக்கத்து வீரர்களையும் தைரியப்படுத்தி உற்சாகமுண்டாக்கி மீளவும் போர்க்கு எழச்செய்துகொண்டு, மிகஉக்கிரமாக அருச்சுனனை யெதிர்த்துவந்தனனென்பதாம். 'சூறியிட்டனன்' என்பதற்கு - சூழல் காற்றுப்போலக்கொடுமையோடு வளைத்திட்டானென்றுபொருள்; சூறையென்பது சுழல்காற்றாதல் காண்க. 'தோளிலெப்புவனமுந் தனிசுமந்தவன்'- தோள்வலியாற் பூலோகமுழுவதையும் பொதுமை நீக்கித் தானே தனியரசாள்கின்றவன் : தேர்செலுத்தியதை 'ஏறியிட்டவன் விரைந் திரத முங்கடவி' என்று அருச்சுனன்மேல் ஏற்றி்க் கூறியது, ஏவுதற்கருத்தாவின் வினை. தேர்க்குதிரைகள் இளைப்பாறியதை 'ஆறியிட்ட ரதம்' எனத் தேர்களின்மேல் ஏற்றிக்கூறினார்; இது, ஒருபொருளின் வினையை மற்றொரு பொருளின்மே லேற்றிக்கூறின உபசாரவழக்கு. (474) |