மனைவி, அமளி தலத்தின்- படுக்கையிடத்திலே, அழுது இரங்க- புலம்பி வருந்தும்படி, (அவளைவிட்டு), பிறன் இல் தேடும் - அயலான்மனையாளைத் தேடிச்செல்கிற, பெருபாவி - பெரிய தீவினையுடையவன், பெறும் - (மறுமையிற்) பெறுகிற, பேறு - நரககதி, எமக்குஉம் பேறு - எங்களுக்கும் பெறுங்கதியாகுக, ' என்றார் - என்றும் சபதஞ் செய்தார்கள் ; ( எ -று.) பலமிருந்தும் பராக்கிரமமில்லையாயின் சிறப்புறாதாதலால், 'மறனிற்சிறந்த புயவலி' எனப்பட்டது. 'மறனிற்சிறந்த புயவலியால் வரைபோன்று' என்பதனை 'நிற்பான்' என்பதனோடு கூட்டி, வீமனுக்கு விசேடணமாக்குதலும் ஒன்று. கீழ் "வீமன் பின் நிற்க" என்று துரோணன் கூறினதற்கேற்ப, 'புறனிற்பான்' என்றார். வீமனைக்குறித்துச் சபதஞ்செய்ததும், அத்துரோணன்வார்த்தையை யனுசரித்தே. 'அறனிற்கொண்ட தன்மனையா ளமளித்தலத்தி னழுதிரங்கப் பிறனிற்றேடும் பெரும்பாவி’என்றது, தன்மனையாள் வீட்டிலிருந்து வருந்தவிட்டு அயலான்மனையாளிடத்து விரும்பிச்செல்வதன் குற்றங்களை நன்குவிளக்கும் பொருட்டேயன்றி, தன்மனையாளழுதிரங்காவிடின் பிறன்மனையாளிடஞ் செல்லலாமென்று கூறியதன்றெனக் கொள்க; இந்த மகாபாவி பெறும்பயனை "வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரமென்றிவற்றை, நம்பினா ரிறந்தால் நமன்தமர் பற்றி யெற்றிவைத் தெரியெழுகின்ற, செம்பினா லியன்றபாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கஞ்சி, நம்பனே வந்துன் திருவடியடைந்தேன் நைமிசாரணியத்து ளெந்தாய்" என்னுந் திருமங்கையாழ்வார் பாசுரங்கொண்டும்," காதலாள் கரிந்துநையக் கடியவே கனிந்து நன்றி, யேதிலான்தாரம் நம்பி யெளிதெனவிறந்தபாவத், தூதுலை யுருகவெந்த வொள்ளழற் செப்புப் பாவை, ஆதகா தென்னப் புல்லி யலறுமால் யானை வேந்தே" என்னுஞ் சிந்தாமணிச்செய்யுளாலும், "தங்கிருட்போதில் தலைச்சென்றயல்மனை, யங்குமகிழ்ந்தாளவ ளிவள்காணெனச், செங்கனலேயெனவெம்பியசெம்பினிற், பொங்கனற்பாவைகள் புல்லப் புணர்ப்பார்" என்னுஞ் சூளாமணிச்செய்யுளாலும் அறிக. (42) 43. | கன்றால்விளவின்கனியுதிர்த்தோன்கடவுந்திண்டோரவனாக வன்றாட்டடக்கைமாருதியேயாகவமரின்மறித்திலமேல் என்றாநாளைமுனிபோரினெந்நன்றியினுஞ்செய்ந்நன்றி கொன்றார்தமக்குக்குருகுலத்தார்கோவேயாமுங்கூட்டென்[றார் |
(இ-ள்.) 'குரு குலத்தார் கோவே - குருவமிசத்து அரசர்களுக்குத்தலைவனான துரியோதனனே! கன்றால் -ஒரு கன்றைக்கொண்டு, விளவின்கனி - விளாமரத்தின்பழத்தை, உதிர்த்தோன் - உதிரச்செய்தவனான கிருஷ்ணன், கடவும் - செலுத்துகிற, திண் தேரவன் ஆக- வலிய தேரையுடைய அருச்சுனனேயானாலும், வல்தாள் - கொடிய போர்முயற்சியையும், தடகை - பெரியகைகளையு முடைய, மாருதிஏ ஆக - வீமசேனனேயானாலும், (இவர்கள்) அமரின்- (எதிரில்வந்து)அமைந்தால், என்ற ஆம் நாளை- (இவ்விரவு கழிந்து) சூரிய னுதிக் |