பக்கம் எண் :

306பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) யார்உம் போரில் எளிவர-(தன்னையெதிர்ப்பவர்) எல்லாரும்
யுத்தத்தில்எளிமையடையும்படி, வீரம் சாரும் சாபந் தன்னொடு-போர்த்திறம்
பொருந்தியவில்லுடனே, நேமி தேர்உம் தான்உம் சென்றிடுவோனை -
சக்கரவலிமையுள்ளதேரும் தானுமாக (த் தடையறச்) செல்பவனான சாத்தகியை,
கூரும் சாபம் குரு-மிக்கவில்வித்தையில்வல்ல துரோணாசாரியன், எதிர் கண்டான்-;
(எ - று.)-பி-ம்:ஆரும்போரிலழிதர.                                (502)

வேறு.

106.-துரோணன் போர்க்குஅழைக்க, சாத்தகி மறுமொழிகூறல்.

ஏக லேகலென னுடனினி யமர்புரிந் தேகென்
றாகு லம்படத் தகைந்தன னடற்சிலை யாசான்
மேக வண்ணனுக் கிளவலும் வேதிய ருடன்போர்
மோக ரிப்பது தகுதியன் றெனக்கென மொழிந்தான்.

     (இ-ள்.) 'ஏகல் ஏகல்-போகாதே; இனி-இப்பொழுது, என்னுடன் அமர்
புரிந்து-என்னோடு போர் செய்தே, ஏகு-(பின்பு அப்பாற்) செல்,'என்று -
என்றுசொல்லிக்கொண்டு, ஆகுலம்பட-ஆரவாரமுண்டாக, அடல் சிலை ஆசான்-
வலிய வில்லாசிரியனான துரோணன், தகைந்தனன்-(சாத்தகியைத்) தடுத்தான்;
(அப்பொழுது), மேகவண்ணனுக்கு இளவல்உம்-மேகம் போன்ற திருநிறமுடையனான
கண்ணனுக்குத் தம்பியாகியசாத்தகியும், 'வேதியருடன் போர் மோகரிப்பது-
பிராமணருடனே கொடுமையாகப்போர்செய்வது, எனக்கு தகுதி அன்று-,'என
மொழிந்தான்-என்று சொன்னான்; (எ - று.)

     இங்ஙனம் உபசாரமாகக்கூறிய சாத்தகிவார்த்தையில், 'நீ உன்சாதிக்கு
இயல்பில்உரியதல்லாத போர்த்தொழிலை மேற்கொண்டாயாயினும், க்ஷத்திரிய
தருமந்தவறாதவனான யான் துணிவுடையேனல்லேன்' என்ற இகழ்ச்சியுந்தோன்றும்.

     இதுமுதற் பதினைந்து கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றைமூன்றும் விளச்சீர்களு மாகிய கலிநிலைத்துறைகள். (503)

107.- இருவரும் பொருது இளைத்தல்.

இருவருந்தமதிருசிலையெதிரெதிர்குனித்தார்
இருவருங்கொடும்பகழியுமுறைமுறையெய்தார்
இருவருந்தமதேர்சிலையாவையுமிழந்தார்
இருவரும்பெரும்பொழுதமர்திளைத்தனரிளைத்தார்.

     (இ-ள்.) இருவர்உம்-(துரோணன் சாத்தகி யென்ற) இரண்டுபேரும், தமது இரு
சிலை - தம்வில்இரண்டையும், எதிர் எதிர் குனித்தார்-(ஒருவர்க்கொருவர்) எதிரிலே
வளைத்தார்கள்; இருவர்உம்-, கொடும்பகழிஉம்-கொடிய அம்புகளையும், முறை
முறை எய்தார்-(ஒருவர்மேல்ஒருவர்) மாறிமாறிப் பிரயோகித்தார்கள்;