பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்309

மேற்குத்திக்கிற் சாயலுற்றது: பாஞ்சன்னியம்உம்-(கண்ணனது) சங்கமும், போர்முகத்து-
யுத்தகளத்திலே, அதிர் குரல்-அதிர்ச்சியுண்டாக்குகிற பெருமுழக்கத்தை, பொம்ம
புகலுகின்றது-மிகுதியாக ஒலிக்கின்றது; இகல் வலம் பட-போரில் வெற்றியுண்டாக,
நீஉம் அங்கு ஏகுதி-நீயும் அவ்விடத்திற்குச் செல்வாய்,'என்றான்-என்று
கட்டளையிட்டான்; (எ - று)

     தருமபுத்திரன், சாத்தகியைத் துணையனுப்பினபின்பும், கண்ணனது
பாஞ்சசன்னியமுழக்கம் கேட்கப்பட்டதனால், வீமனையும் அழைத்துத் துணை
செல்லச்சொல்லின னென்பதாம்.

     112.-பாஞ்சஜந்யம் - வடசொல்: பஞ்சஜந னென்னும் அசுரனது எலும்பினா
லாகிய தென்று இதற்குக் காரணப்பொருள்: சங்கினுருவந்தரித்துச் சமுத்திரசலத்திற்
சஞ்சரித்துக்கொண்டிருந்த பஞ்சஜந னென்ற அசுரன், மேல்கடலிற்
பிரபாசதீர்த்தகட்டத்தில் ஒருகால் நீராடப்புக்க சாந்தீபினி முனிபுத்திரனைக்
கவர்ந்துகொண்டுபோய்விட, பின்பு சாந்தீபினிமுனிவனிடம் சகலசாஸ்திரங்களையும்
கற்ற கண்ணன் குருதட்சிணையாக அம்மகனை மீட்டுக்கொடுக்கப்பபுக்கபொழுது
கடலிற் பிரவேசித்து அந்தப்பஞ்சஜநனைக்கொன்று அவனது எலும்பாகிய
சங்கத்தைக்கைக் கொண்டன னென்க.                            (508,509)

113. - அவ்வேவலின்படி வீமன் செல்லுதல்.

சொன்னவார்த்தையும்பிற்படமுற்படத்தொழுது
தன்னொடொத்ததோள்வலியுடைத்தரணிபரநேகர்
மன்னுநால்வகைப்படையொடுந்திரண்டிருமருங்கும்
பின்னுமுன்னுமொய்த்துடன்வரப்போயினன்பெரியோன்.

     (இ-ள்.) சொன்ன வார்த்தைஉம் பின் பட-(இங்ஙனம் தருமபுத்திரன்)
கட்டளைகூறின வார்த்தையும் பின்னாம்படி, முற்பட(-)விரைவாக, பெரியோன்-
வலிமையிற்பெரியவனான வீமன், தொழுது-(தருமபுத்திரனை) வணங்கி
(விடைபெற்று),-தன்னொடு ஒத்த தோள் வலி உடை தரணிபர் அநேகர்-தன்னோடு
மனமொத்தவர்களும் புயபலத்தையுடையவர்களுமான அரசர்கள் பலர், மன்னும்
நால்வகை படையொடுஉம் திரண்டு - மிகுதியான சதுரங்கசேனைகளுடனே, கூடி,
இருமருங்குஉம்-(தனது) இரண்டுபக்கங்களிலும், பின்உம் முன்உம்-(தனக்குப்)
பின்னேயும்முன்னேயும், மொய்த்து-நெருங்கி, உடன் வர-கூடவர, போயினன்-
சென்றான்; (எ - று.)

     'சொன்னவார்த்தையும் பிற்பட முற்படத்தொழுது போயினன்'-
முறையிலுயர்வுநவிற்சியணி. முற்படத் தொழுது - (தருமபுத்திரனது)
முன்னிலையிலே நமஸ்கரித்து என்றுங் கொள்ளலாம்.

114.-வீமன் பல்தேயத்துவீரர்களை வென்றுசெல்லுதல்.

கலிங்கர்மாகதர்மாளவர்கவுசலர்கடாரர்
தெலுங்கர்கன்னடர்யவனர்சோனகரொடுசீனர்
குலிங்கராரியர்பப்பரர்கொப்பளர்முதலோர்
விலங்கினார்களைவிண்ணுறவிலக்கிமேல்விரைந்தான்.