119.-அவர்களில் மற்றும் முப்பதுபேர் இறத்தல். சேரமுப்பதுகுமாரர்கள்சென்றமர்மலைந்தோ ரோரொருத்தருக்கோரொருசாயகமுடற்றிச் சூரன்மெய்த்துணைநோதகும்படியுடன்றொலைத்தான் மாருதச்சுதன்வல்லவில்லாண்மையார்வல்லார். |
(இ-ள்.) சேர சென்று அமர் மலைந்தோர் - ஒருசேரஎதிர்வந்து போரை மிகுதியாகச்செய்தவர்களான, முப்பது குமாரர்கள்-(திருதராட்டிர)புத்திரர் முப்பதுபேர்களுள், ஓர் ஒருத்தருக்கு- ஒவ்வொருத்தருக்கும், ஓர் ஒரு சாயகம்- ஒவ்வோர் அம்பை, உடற்றி - வலிமையோடு எய்து, சூரன் மெய் துணை நோதகும்படி - சூரனான துரியோதனனது உடற்காவலாகவுள்ள அத்தம்பிமார்கள் வேதனைமிகும்படி, உடன் தொலைத்தான் - (அவர்களை) ஒருசேர அழித்தான்; மாருதன் சுதன் வல்லவில் ஆண்மை வல்லார் யார்-வாயுகுமாரனான வீமன் தேர்ந்தவிற்போர்த்திறத்தைத் தேர்ந்தவர் (வேறு) யார் உள்ளார்? (எ - று.) 'சூரன்மெய்த்துணைநோதகும்படி' என்பதற்கு- (அவர்கள்சூரிய மண்டலத்தைப்பிளந்துகொண்டு வீரசுவர்க்கஞ்செல்லுதலால்) சூரியனுடைய உடம்பாகிய உறுப்புநோவுமிகும்படி யென்றும் உரைக்கலாம். (516) 120. - கௌரவசேனை சிதைத்தல். ஆயு வற்றவர் சுயோதன னிளைஞரே ழைவர் வாயு புத்திரன் வாளியா லாருயிர் மடியச் சாய்த லுற்றது சடக்கெனத் தரணிபன் வியூகந் தேயு வொத்திவன் சேறலுந் திமிரநே ரெனவே. |
(இ-ள்.) (இவ்வாறு), சுயோதனன் இளைஞர் ஏழ்ஐவர் - துரியோதனனது தம்பிமார் முப்பத்தைந்துபேர், வாயுபுத்திரன் வாளியால் - வீமசேனனது பாணங்களால், ஆயு அற்றவர்-ஆயுளொழிந்தவர்களாய், ஆர் உயிர் மடிய - அரியஉயிரிறக்க,- இவன்-வீமன், தேயு ஒத்து - அக்கினிபோன்று, சேறலும் - கொடுமையாகச் சென்றவளவிலே,-தரணிபன் வியூகம் - துரியோதனராசனது படைவகுப்பு, திமிரம் நேர் எனஏ-(அந்நெருப்பினொளியின் முன்பட்ட) இருள் (தனக்கு) உவமை யென்னும்படி, சடக்கென சாய்தல் உற்றது-விரைவாக அழிவடைந்தது; (எ - று.)-துரியோதனன் தம்பியர் முப்பத்தைவர் மடிய, வீமன்முன்பகைவரணி சிதறித் றென்பதாம். 117-ஆம்பாடல் முதல் மூன்று செய்யுளில்முப்பத்தைந்துபேர் கூறப்பட்டிருத்தல் காண்க. (517) வேறு. 121.-அதுகண்டு துரோணன் வீமனெதிரில் வருதல். ஏகு கின்றது கண்டுபெ ருங்கட லேழு மொண்டுவி ழுங்கிய திர்ந்தெழு மேக மம்புபொ ழிந்தென வெங்கணும் வீசு மம்புவி ரைந்துவி ரைந்திட யூக மின்றுபி ளந்துத னஞ்சய னோடி வன்புகு தந்திடி னம்படை யாகு லம்படு மென்றுத டஞ்சிலை யார் யன்சம ரந்தனின் முந்தவே. |
|