இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) ஏகுகின்றது கண்டு -(இங்ஙனம் வீமன்) செல்லுகிறதைப்பார்த்து,-தட சிலை ஆரியன் - பெரிய வில்வித்தையில் ஆசிரியனான துரோணன்,-'பெரு கடல் ஏழ்உம் - பெரிய ஏழு கடல்களையும், மொண்டு விழுங்கி- நிரம்பமுகந்து உட்கொண்டு, அதிர்ந்து-ஆரவாரித்துக்கொண்டு, எழு-(வானத்தில்) எழுகிற, மேகம்-, அம்பு பொழிந்து என- நீரைப்பொழிந்தாற்போல, எங்கண்உம்-எல்லாவிடங்களிலும், வீசும் - வலிவாகப் பிரயோகிக்கிற, அம்பு - பாணங்கள், விரைந்து விரைந்திட - வெகுவேகமாகச் செல்ல, இவன் - இவ்வீமன், இன்று - இப்பொழுது, யூகம் - (நமது) படைவகுப்பை, பிளந்து - பிளந்திட்டு, தனஞ்சயனொடு புகுதந்திடின் - உட்புகுந்து அருச்சுனனுடன் சேர்ந்திட்டால், நம்படை ஆகுலம் படும்-நமதுசேனை கலக்கமடைந்துவிடும்,' என்று- என்றுஎண்ணி, சமரந்தனில் முந்த-போரில் (முன்) வர,-(எ - று.)-"அந்தணன் வந்தது கண்டு" என மேல் தொடரும். எதிர்ப்பவரையெல்லாம் அழித்துக்கொண்டு வீமன் வருதலால் துரோணன், இவன் அம்புசொரிந்து வியூகத்தைப் பேதித்துக்கொண்டு உட்பிரவேசித்து அருச்சுனனோடு சேர்ந்துவிட்டாற் பின்பு எவராலும் வெல்லலாகாதாதலால் நமதுசேனைக்குப் பெருங்கலக்கமுண்டாகுமென்று கருதி அங்ஙனஞ்செல்லாதபடி தடுத்தற்கு இடையில்வந்து எதிரிட்டனன் என்பதாம். இதுமுதல் ஒன்பதுகவிகள் - முதற்சீர் தேமாச்சீரும் மற்றைமுன்றும் கூவிளச்சீர்களுமாய் வந்தது அரையடியாகவும், அஃதிரட்டிகொண்டது ஓரடியாகவும், அவ்வடிநான்குகொண்டு, நேரசை முதலான அரையடிக்கு ஒற்றொழித்துப் பதினோரெழுத்துப் பெற்றுவந்த சந்தக்கலிப்பாக்கள். 'தான தந்தன தந்தன தந்தனதான தந்தன தந்தன தந்தன' என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம்.(518) 122. - வீமன்வணங்கவும் துரோணன் தணியாமற் போர்தொடங்குதல். ஆதியந்தணன் வந்ததுகண்டிகலானிலன்சினமின்றிநலம்பெறு நீதியன்றுனுடன்சமருந்திடனீபெருங்குருநின்கழலென்றலை மீதுகொண்டனனென்றுவணங்கவும்வேதியன்கைமிகுந்துபுகுந்தெதிர் மோதியம்புதெரிந்தனன்வன்றிறன்மூரிவெஞ்சிலையுங்குனிகொண்டதே. |
(இ-ள்.) ஆதி அந்தணன் - பெரிய பிராமணனான துரோணன், வந்தது - (தன்னெதிரில்) வந்ததை, கண்டு - பார்த்து, இகல் ஆனிலன் - வலிமையையுடைய வாயுகுமாரனான வீமன், சினம் இன்றி - கோபமில்லாமல், (அவனைநோக்கி), 'உனுடன் சமர் உந்திடல்-உன்னோடு (நான்) போர்செய்தல், நலம் பெறு நீதி அன்று - நன்மைபெறும்படியான நியாயமன்று; (ஏனெனில்),- நீ பெருங் குரு - நீ (எனக்குச்) சிறந்த ஆசாரியன்; (ஆதலால்), நின் கழல் என் தலைமீது கொண்டனன் - உனது திருவடிகளை எனது தலையின்மேற் கொண்டேன்' என்று - என்றுசொல்லி, |