பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்321

உம் - (நெடுந்தூரம்) விளங்குகின்ற பெரிய மலைகள்போன்றதோள்களும், துனித்த
நெஞ்சம்உம்-கோபங்கொண்ட மனமும், முரிந்தன புருவம்உம்-கோபத்தால்)
நெறித்தனவான புருவங்களும், எரிந்த கண்கள்உம்-(கோபாவேசமிகுதியால்)
தீப்பொறிபறக்கப்பெற்ற கண்களும், தோன்ற - காணப்பட, பனித்த தேரொடுஉம் -
அசைந்துசெல்லுகிற தேருடனே, (கர்ணன்), போர் உடன்று எழுதரும் பரிதியின் -
போர்செய்தற்கு உக்கிரங்கொண்டுபுறப்படுகிற சூரியன் போல, விரைந்து எய்தி -
விரைவாக (வீமனை) அடைந்து,-இளவலோடு - (உண்மையில் தனது) தம்பியான
அவனுடனே,-இனி தராதலம் உரககேதனற்கு - இனிமேல் நிலவுலகம்
பாம்புக்கொடியனான துரியோதனனுக்கே (நிலைத்திடும்),'என - என்று (யாவருஞ்)
சொல்ல, இகல் செய்தான்-;

     துரியோதனாதியரைக் கொல்வே னென்று சபதஞ்செய்துள்ளவனும் வலிமையிற்
சிறந்தவனுமான உன்னை இப்பொழுது நான் கொல்வேன்; கொல்லவே, பின்பு
அவர்களை வெல்லவல்லா ரெவரும் இல்லை யாதலால் துரியோதனனுக்கே
இராச்சியம் நிலைபெற்றிடும் என்றபடி, 'போருடன்றெழுதரும் பரிதி'என்றது-
தனக்குப்பகையாகிய இருளையெதிர்த்துத் தாக்கி யழித்தற்கு வெம்மையோடு
உதிக்கிறசூரியனென்றபடி;(மந்தேகரென்னும் அரக்கர்களுடன்) போர்செய்து
அவர்களையழித்துக்கொண்டு உதயஞ்செய்கிற சூரியன்போல வென்றலும்
பொருந்தும். இனி, பனித்த கோளொடும் போருடன்றெழுதரும் என்ற
பாடத்திற்கு -தான் அஞ்சுவதற்குக் காரணமான இராகுவென்னுங் கிரகத்துடனே
உடன்றெழுதரும்என்று இல்பொருளுவமை யாக்குக.                (531)

135.- வீமனும் கர்ணனும் எதிர்த்த நிலைமை.

ஆற்றையொத்தனகால்வழியளைபுகுமாமைதொட்டடன்மள்ளர்
சேற்றையொத்தனநித்திலமெடுத்தெறிசெல்வநீள்குருநாடன்
காற்றையொத்தனன்வலியினாற்சினத்தினாற்கதிரவன்றிருமைந்தன்
கூற்றையொத்தனன்பிறப்பிலேதுவக்குளோர்குணங்களுங்
                                     கொள்ளாரோ.

     (இ-ள்.) ஆற்றை ஒத்தன கால் வழி - (பெருமையினாலும் நீர்மிகுதியினாலும்)
ஆறுபோன்றனவாயுள்ள வாய்க்கால்களின் வழியாய், அளை புகும் - குழைசேற்றுக்
கழனிகளிற் சேர்கிற, ஆமை தொட்டு - ஆமைகளைக்குறித்து, அடல் மள்ளர் -
வலிமையையுடைய உழவர்கள், சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி-
அச்சேற்றைச்சார்ந்துள்ளனவான முத்துக்களை யெடுத்து வீசியடிக்கிற, செல்வம் -
செல்வச்சிறப்பு, நீள் - மிக்க, குருநாடன் - குருநாட்டுக்கு உரியனான வீமன், -
வலியினால் - தேகபலத்தால், காற்றை ஒத்தனன் - காற்றைப்போன்றான்; கதிரவன்
திரு மைந்தன் - சூரியனது சிறந்த குமாரனான கர்ணன் சினத்தினால்-கோபத்தால்,
கூற்றை ஒத்தனன் - யமனைப்போன்றான்; பிறப்பில் துவக்கு உளோர் குணங்கள்உம்
கொள்ளார் ஓ-பிறப்பிலே சம்பந்தமுள்ளவர்கள் (அச்சம்பந்த முடையார்க்கு உரிய
குணங்களையுங் கொள்ளமாட்டார்களோ?  (தவறாமற் கொள்வரென்றபடி); (எ - று.)