164.- கண்ணன் தனது திருவாழியாற் சூரியனை மறைத்தல். பாராழி யவலமறப் பாண்டவர்த மிடர்தீரப் பார்த்தன் வாழப் பேராழி யணைதுயிலும் பெருமிதமு முடன்மறந்து பிறந்த மாயோன் ஓராழி யெழுபரித்தே ருடையானை மாயையினா லொழிக்கத் தன்கைக் கூராழி பணித்தலுமக் களம்போலச் சிவந்தனவக் குடபாலெங்கும். |
(இ-ள்.) ஆழி - கடல்சூழ்ந்த, பார் - பூமியினது, அவலம் - (அதிபாரத்தாலாகிய) துன்பம், அற - நீங்குதற்பொருட்டும், பாண்டவர்தம் இடர்தீர - பஞ்சபாண்டவரது துன்பம் தீர்தற் பொருட்டும், பார்த்தன் வாழ - அருச்சுனன் அழியாது வாழ்தற் பொருட்டும், பேர் ஆழி அணை துயிலும் பெருமிதம்உம் உடன் மறந்து பிறந்த - பெரிய திருப்பாற்கடலிலே ஆதிசேஷசயநத்திலே யோகநித்திரைசெய்தருள்கிற பெருந்தகைமை முழுவதையும் ஒருசேர விரைவிலே மறந்து (இங்குக் கண்ணனாகத்) திருவவதரித்த, மாயோன் - மாயையையுடையவனான திருமால், ஓர் ஆழி எழு பரி தேர் உடையானை - ஒற்றைச்சக்கரத்தையும் ஏழுகுதிரைகளையுங் கொண்ட தேரை யுடையவனான சூரியனை, மாயையினால் ஒழிக்க - வஞ்சனையால் மறைக்க (க் கருதி), தன் கை கூர் ஆழி பணித்தலும் - தனது திருக்கையிலேந்துதற்கு உரிய கூரிய சக்கரா யுதத்துக்குக் கட்டளையிட்டவளவிலே, (அது சென்றுகரியதொரு வடிவு கொண்டு சூரிய மண்டலத்தை மறைத்திட்டதனால்), அ குடபால் எங்கும் அ களம் போல சிவந்தன -மேற்குத்திக்கிடங்களெல்லாம் (செந்நீர் நிறைந்த) அப்போர்க்களம் போலச் செந்நிறமடைந்தன [இயல்பான சூரியாஸ்தமநகாலத்திற்போலச் செவ்வானம் பெற்றன]; (எ-று.) துஷ்டநிக்ரக சிஷ்டபரிபாலநத்திற்காகவே அவதாரங் கொண்ட பேரருளான னென்பது முன்னடிகளின் தேர்ந்த பொருள். அணையிலேதுயிலுதலும் பெருமிதமும் எனவுமாம். பெருமிதம் - பரத்துவம். பி - ம்: அறிதுயிலும். இதுமுதற் பத்தொன்பதுகவிகள் - பெரும்பாலும்முதல்நான்கு சீர் காய்ச்சீர்களும், மற்றையிரண்டும் மாச்சீர்களுமாகிய அறுசீராசிரிய விருத்தங்கள். (561) 165.- கௌரவசேனையார் மகிழ்ச்சியோடு சயத்திரதனை வெளிக்கொணர்தல். அயத்திரதமிடப்பசும்பொனாவதுபோ லருச்சுனனாரறிஞனாக நயத்திரதமொழிக்கீதைநவின்றபிரான்மயக்கறியார்நாள் செய்வான்றன் வயத்திரதமறைந்ததெனவலம்புரித்தர ரவன்சேனைமன்னர்யாருஞ் செயத்திரதன்றனைக்கொண்டுசெருமுனையில்விசயனெதிர் சென்றுசேர்ந்தார். |
(இ-ள்.) அயத்து - இரும்பிலே, இரதம் இட - (ரசவாதத்துக்கு உரிய மகா மூலிகையினது) சாற்றைப் பிழிவதனால், பசும் |