பொன் ஆவதுபோல்-(அது) பசும்பொன்னாக மாறுவதுபோல, அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக - (ஸாமாந்யஞானத்தோடு கூடியிருந்த) அருச்சுனன் (எளிதில்) நிறைந்த தத்துவஞான முள்ளவனாம்படி, நயத்து இரதம் மொழி கீதை நவின்ற- இனிமையான சுவையுள்ள சொற்களையுடைய கீதையை உபதேசித்தருளிய, பிரான்- பெருமையையுடைய கண்ணனது, மயக்கு - மாயையை, அறியார் - அறியாதவர்களாய்,-நாள் செய்வான் தன் இரதம் வயத்து மறைந்தது என - தினத்தைச் செய்பவனான சூரியனது தேர் இயல்பில் அஸ்தமித்திட்ட தெனக் கருதி,-வலம்புரி தாரவன் சேனை மன்னர் யார்உம் - நஞ்சாவட்டைப் பூமாலையையுடையவனான துரியோதனனது சேனையிலுள்ள அரசர்களெல்லாரும், செயத்திரதன் தனை கொண்டு செரு முனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார்- சயத்திரதனை வெளிப்படுத்தி உடனழைத்துக்கொண்டு போர்க்களத்தில் அருச்சுன னெதிரிற் போய்ச்சேர்ந்தார் (எ - று.) இரதம் - ரஸகுளிகையுமாம். அருச்சுனனைச் சீர்திருத்தித் தன்வழிப்படுத்தி அவனைக்கொண்டு பகையழித்தலிற் கண்ணபிரானுக்கு உள்ள ஆதரமும், எப்படிப்பட்டதையும் எளிதில்மாற்றவல்ல அப்பெருமானது ஸர்வசக்தியும், எளிதில் மெய்யுணர்வை இனிது புகட்டுகிற கீதையின் சிறப்புந் தோன்ற, ' அருச்சுனனாரறிஞனாக நயத்திரத மொழிக் கீதை நவின்ற பிரான்' என்றார். 166.-கண்ணன் அருச்சுனைநோக்கிச் சயத்திரதனைக் கொல்லச் செல்லுதல். எண்சிறந்தமகன் றலையைநிலத்திட்டான் றலைதுகளாகென்று நாடித் தண்சமந்தபஞ்சகமென்றொருமடுவி லிவன்றாதைதருப் பிக்கின்றான் ஒண்சரங்கொடிவன்றலைமற்றவன்கரத்திற்போய்விழநீயுடற்று கென்று திண்சயங்கொள்விசயனுக்குச்சிந்துபதிதனைக்காட்டித்திருமால் சொன்னான். |
(இ-ள்.) 'எண் சிறந்த மகன் தலையை-வலிமைமிக்க (எனது) புத்திரனான சயத்திரதனது தலையை, நிலத்து இட்டான் - தரையிலே த்ள்ளியவனது, தலை-, துகள் ஆக - பொடியாய்விடக்கடவது,' என்று நாடி-என்று குறித்து வரம்வேண்டிப்பெற்று,(அதன் பின் இப்பொழுது), இவன் தாதை - இச்சயத்திரதனது தந்தையான வ்ருத்தக்ஷத்ரன், தண் சமந்த பஞ்சகம் என்ற ஒரு மடுவில் - குளிர்ந்த ஸ்யமந்தபஞ்சக மென்ற ஒப்பற்ற மடுவிலே, தருப்பிக்கின்றான் - (சந்தியாவந்தனந் தொடங்கி) அருக்கியசல மெடுத்து விடுகிறான்; அவன் கரத்தில் - அத்தந்தையின் கையிலே, இவன் தலை போய் விழ - இம்மைந்தனது தலை போய்விழும்படி, ஓள் சரம் கொண்டு - ஒளிபொருந்திய (சிறந்த) பாணங்களினால், நீ உடற்றுக-நீ பொருதுஅழிப்பாயாக,' என்று-, திண் சயம் கொள் விசயனுக்கு-வலிய வெற்றியைக்கொள்ளும்அருச்சுனனுக்கு, திருமால்- கண்ணபிரான், சிந்துபதிதனை காட்டி - சிந்துநாட்டரசனான அச் சைந்தவனைச் சுட்டிக்காண்பித்து, சொன்னான்-; (எ - று.) |