தோன்றும்படி நீ துரோணனுக்குக் கூறி அதனால் அவன் மனம் வருந்திப் போரொழிந்து இறக்கும்படி செய்திடவேண்டு மென்று கண்ணன் தருமனுக்குக் கூறினான். (637) 21.-அதற்குத் தருமன் உடன்படாமை. வையினால்விளங்குநேமிவலம்புரிவயங்குசெம்பொற் கையினானந்தணாளன்கையறல்புகன்றகாலை மெய்யினால்வகுத்ததன்னமெய்யுடைவேந்தன்கேட்டுப் பொய்யினாலாள்வதிந்தப்புவிகொலோவென்றுநக்கான். |
(இ-ள்.) வையினால் விளங்கும் நேமி-கூர்மையோடு விளங்குகின்ற சக்கரமும், வலம்புரி - சங்கமும், வயங்கு - விளங்கப்பெற்ற, செம் பொன் கையினான் - சிவந்தஅழகிய திருக்கைகளையுடையவனான கண்ணன், அந்தணாளன் கையறல் புகன்றகாலை - (இங்ஙனம்) துரோணன் செயலற்று ஒழியும்வகையைச் சொன்ன பொழுது,-மெய்யினால் வகுத்தது அன்ன மெய் உடை வேந்தன் - சத்தியத்தினாலமைக்கப்பட்டது போன்ற உடம்பையுடைய தருமராசன், கேட்டு-, பொய்யினால் ஆள்வது இந்த புவி கொல்ஓ என்று-இந்தப்பூமியைப் பொய்கூறி அதனாற் பெற்று ஆளுவது தகுதியோ? என்று கூறி, நக்கான் - சிரித்தான்; (எ - று.)-'மெய்யினால்வகுத்ததன்னமெய்' என்றது, தற்குறிப்பேற்றவணி. (638) 22.-இதுவும், தருமன்வார்த்தை: பொய்ம்மையின் தீப்பயன். அண்ணியகிளையுமில்லுமரும்பெருமகவுமன்புந் திண்ணியசீருமிக்கசெல்வமுந்திறலுந்தேசு மெண்ணியபொருள்கள்யாவுமியற்றியதவமுமேனைப் புண்ணியமனைத்துஞ்சேரப்பொய்ம்மையாற்பொன்றுமன்றே. |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ-ள்.) இல்உம் - மனைவாழ்க்கைத்துணையும் (தாரமும்), அரும்பெரு மக உம் - அரிய பெரிய சந்தாநமும், அண்ணிய கிளைஉம்-நெருங்கிய மற்றைப் பந்துவர்க்கமும், அன்பும்-, திண்ணிய சீர்உம் - உறுதியுள்ள அழியாத புகழும், மிக்கசெல்வமும்-, திறல்உம்-வலிமையும், தேசுஉம்-ஒளியும், எண்ணிய பொருள்கள் யாஉம்-மற்றும் எண்ணப்படும் பொருள்கள் யாவையும், இயற்றிய தவம்உம்-செய்த தவசும், ஏனை புண்ணியம் அனைத்துஉம்-மற்றைப்புண்ணியங்கள் யாவையும், சேர -ஒருசேர, பொய்ம்மையால் - பொய் சொல்லுதலினால், பொன்றும் அன்றே -அழிந்துவிடுமன்றோ! (எ - று.)-அன்றே - தேற்றம்; பொய்கூறிய அப்பொழுதேயெனினுமாம். பி-ம்: மனமுங்கேள்விச்செல்வமுநிதியுந். 23.-அதற்குக் கண்ணன் சமாதானங்கூறத் தொடங்குதல். என்றுகொண்டினங்கொள்கோவினிடர்கெடவெழிலியேழுங் குன்றகொண்டடர்த்தமாயன்கூறவுமறுத்துக்கூறக் |
|