சேனை-பாம்புக்கொடியனான துரியோதனனது பராக்கிரமம் மிக்க சேனை, கெட்டது- நிலைகுலைந்தது;(உடனே) தொட்ட வில் ஆண்மை துரகத்தாமா - (கையிற்) பிடித்த வில்லின் வலிமையையுடைய அசுவத்தாமன், எதிர் ஓடி-முன்னே ஓடிச்சென்று, கட்டு அழல் வேள்வி தாதை இறந்த கனம் கண்டான்-நியமந்தவறாத வைதிகாக்கினியில் யாகஞ்செய்தலையுடைய (தனது) தந்தையான துரோணன் இறந்துகிடந்த போர்க்களத்தைப் பார்த்தான்; (எ - று.) வாசபதி=வாசஸ்பதி; சொல்லுக்கு(கல்விக்கு)த் தலைவனென்பது பொருள். பிருகஸ்பதி தேவர்கட்குக் குருவாதல்பற்றி, கௌரவர்க்குக் குருவான துரோணனுக்கு அவனை உவமைகூறினார்; கல்வித்திறத்தை விளக்குதற்கு உவமைகூறிரென்றுங் கொள்ளலாம். பி-ம்: தந்தை. இதுமுதல் நான்குகவிகள்-முதற்சீர் விளச்சீர் அல்லது மாச்சீரும், இரண்டு நான்காஞ் சீர்கள் மாச்சீர்களும், மூன்றாஞ்சீர் விளச்சீரும், ஐந்தாவது மாங்காய்ச்சீருமாகிய நெடிலடி நான்கு கொண்ட கலிநிலைத்துறைகள். (647) 31.-அசுவத்தாமன் பித்ருசோகத்தால் வருந்துதல். கண்டான்வீழ்ந்தானம்முனிபாதங்கமழ்சென்னி கொண்டான்மோதிக்கண்பொழிநீரிற்குளித்திட்டான் வண்டார்சோரமண்ணுடல்கூரரவன்னஞ்ச முண்டார்போலவெண்ணமழிந்தானுளநொந்தான், |
(இ-ள்.) (அசுவத்தாமன்),-கண்டான் - (தந்தையிறந்து கிடத்தலைப்) பார்த்தான்;வீழ்ந்தான் - கீழேவிழுந்தான்; அ முனி பாதம் கமழ் சென்னி கொண்டான் -அந்தத்துரோணாச்சாரியனது திருவடிகளை ஈறுமணமுள்ள (தனது) சிரசின்மேற்கொண்டான்; மோதி-(தன்னைத் தானே) தாக்கிக்கொண்டு, கண் பொழி நீரில்குளித்திட்டான் - கண்களினின்று பெருகுகிற நீரிலே முழுகினான்; வள் தார் சோர -செழிப்புள்ள (தனது) போர்மாலை கீழேசரியவும், உடல் மண் கூர-உடம்பிற் புழுதிமிகப்படியவும் (பெற்று), வல் நஞ்சம் உண்டார் போல எண்ணம் அழிந்தான் -கொடிய விஷத்தை யுட்கொண்டவர்போல நினைப்பற்றான்; உளம் நொந்தான்-;(எ-று.) தன்மைநவிற்சியணி; 'நஞ்சையுண்டார்போல' என்ற உவமையை அங்காமாகப் பெற்றுவந்தது, 'வண்டார்சோர,'மண்ணுடல்கூர' என்ற அடைமொழிகளை 'வீழ்ந்தான்' என்றதனோடு இயைத்தலும் அமையும், கமழ்சென்னி-போர்ப்பூமாலை சூடியதனால் வாசனைவீசுகிறமுடி யென்க. மோதிக்குளித்திட்டான் என இயையும்; மோதிப் பொழி என்று இயைத்து, அலைமோதிக்கொண்டு கண்களினின்று மிகுதியாகச்சொரிகிற நீரி லெனினுமாம். வல்நஞ்ச முண்டார்போல வென்பதற்கு - சிவபிரான்போல வென்றலுமொன்று; சிவகுமாரனுக்குச் சிவபிரானோடு உவமைஏற்கும். (648) |