ஒலிக்கவும், இப துரகம் படை சூழ - யானை குதிரைகளின் சேனைகள் சுற்றிலும் வரவும், குனி சிலையின் குரு - வளைந்த வில்லின் ஆசாரியனான துரோணன், கொடி தலை மான் தட தேரான் - துவசத்தை மேலுடையதும் குதிரைகள் பூட்டியதுமான பெரிய தேரிலேறியவனாய், வந்தான் - (தருமனை எதிர்க்க) வந்தான் ; (எ - று.) கொடிது+அலை =கொடித்தலை; சிறுபான்மை உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தில் தகரவொற்று இரட்டிற்று : எருத்துமாடு என்றார்போல. இனி கொடிதலை வேல் என எடுத்து, காக்கைகள் வட்டமிடும் நுனியையுடைய வே லென்றலும் ஒன்று; "பாற்றினஞ் சுழலும் வைவேல்" என்றார்போல: காக்கைகள், அவ்வேலி லொட்டிய தசையையும் அவ்வேலாற் கொல்லப்படும் பிராணிகளையும் தின்ன விரும்பி வந்தவை. இனி, கொடியினிடத்து வேலின் வடிவத்தையுடைய எனவும் பொருள்படும். இனி, 'தடித்தலைவேல்' என்று பாடங்கொண்டு, தடி தலை வேல் எனப் பிரித்து - தசை பொருந்திய நுனியையுடைய வேலென்றாவது, தடித்து அலைவேல் எனப் பிரித்து - மின்னல் போல் அசைந்து விளங்குகிற வேலென்றாவது பொருள் கொள்ளுதல் பொருந்தும். தடி- வில் என்பாரு முளர். ஸௌபலன் - வடசொல் : சுபலனது மகனென்று பொருள்: தத்திதாந்தநாமம். ஸூபலன் - நல்ல வலிமையுடையான்; இவன் - காந்தாரதேசத்து அரசன்: திருதராட்டிரன் மனைவிக்கும், சகுனிக்குந் தந்தை. பி - ம்;இடித்தலைமாமுகிலனையவிபதுரகம் புடைசூழ. (54) 10. அப்போது திருஷ்டத்யும்நன் துரோணனுக்கு எதிரிற்செல்லுதல். வந்தகுருக்குருகுலமாமன்னுடன்போர்புரிவதன்முன் பந்தமுறப்பாஞ்சாலர் பற்பதினாயிரர்சூழ முந்தவயப்பணைமுழங்கமுழங்கொலிநீர்கொதிப்பதுபோல். அந்தமுனிக்கெதிர்நடந்தானைவர்சேனாபதியே. |
(இ -ள்.) வந்த குரு - (அவ்வாறுவந்த) துரோணண், குருகுலம் மா மன்னுடன் - குருகுலத்துச் சிறந்த அரசனான தருமனுடன், போர் புரிவதன் முன் - போர்செய்வதன்முன்னே, ஐவர் சேனாபதி - பாண்டவர்சேனைத் தலைவனான திட்டத்துய்மன்,- பந்தம் உற - நெருக்கம் மிக, பாஞ்சாலர் பல்பதினாயிரர் - அநேகம்பதினாயிரக்கணக்காவுள்ள பாஞ்சாலதேசத்துவீரர்கள், சூழ - சூழ்ந்து வரவும்,- முழங்குஒலி நீர் கொதிப்பது போல் - ஆரவாரிக்கிற ஓசையையுடைய நீரையுடைய கடல்பொங்குவதுபோல (ச் சினம்பொங்க),- வயம் பணை- வெற்றிக்கு அறிகுறியானவாத்தியங்கள், முந்த- முன்னே, முழங்க- மிக ஒலிக்கவும், அந்த முனிக்கு எதிர்நடந்தான் - அந்தத் துரோணனெதிரிற்சென்றான்; ( எ -று.) குருக்குருகுலமெனச் சந்தவின்ப நோக்கியிரட்டித்தது. பி-ம்: ஒலிப்பதுபோல். (55) 11.- திருஷ்டத்யும்நன் பலரை அம்பெய்து மாய்த்தல் இருவர்பெருஞ்சேனையுமுற்றெதிரெதிராயுதமேந்தி ஒருவரொருவரைவேறற்கொண்ணாதவமருடற்றச் |
|