பக்கம் எண் :

4பாரதம்துரோண பருவம்

ணன் தலைமைபூண்டு நடத்தின ஐந்துநாட் போரில் கொல்லப்பட்ட அவனுடைய
பகைவர் பக்கத்தார் மிகப்பலராதலின், இதனை 'புகலரும்' என விசேடித்தது.   (2)

3.-பாண்டவர் போர்க்களங் குறுகுதல்.

சென்றனன்கங்கைமைந்தன்றினகரன்மைந்தன்செல்வான்
நின்றனன்றுரோணன்மைந்தனீடமர்முனைந்துசெய்யான்
வென்றனமினிநாமென்றுமெய்ம்முகில்வண்ணன்சொல்லக்
குன்றனகுவவுத்தோளார்வெங்களங்குறுகினாரே.

     (இ - ள்.) 'கங்கை மைந்தன் - வீடுமன், சென்றனன் - வலியடங்கிப்
போய்விட்டான் ; தினகரன் மைந்தன் - சூரியனுக்கு மகனான கர்ணன், செல்வான்
நின்றனன் - இறந்துசெல்பவனாய் நின்றான் ; துரோணன் மைந்தன் -
துரோணாசாரியன்மகனான அசுவத்தாமனோ, நீடு அமர் - பெரிய போரை,
முனைந்து செய்யான் - உக்கிரங்கொண்டு செய்யமாட்டான் ; (ஆதலால்), இனி-,
நாம்-, வென்றனம் - (பகைவரைச்) சயித்தேவிட்டோம்,' என்று-, மெய் முகில்
வண்ணன் - சத்தியத்தையுடைய மேகம்போலும் (கரியதிருமேனி) நிறத்தையுடைய
கண்ணபிரான், சொல்ல-,(மகிழ்வோடு), குன்று அன குவவு தோளார் -
மலையையொத்த திரண்ட தோள்களையுடைய பாண்டவர்கள், வெம் களம்-கொடிய
போர்க்களத்தை, குறுகினார் - அடைந்தார்கள்;  (எ - று.)

     'தினகரன்மைந்தன் செல்வான் நின்றனன்' என்றது-கற்ற கல்வியெல்லாம்
தக்கசமயத்தில் உதவாமல் மறந்துபோய்விடக்கடவதென்று குருவாகிய
பரசுராமனிடத்தும், போர்க்களத்தில் உடம்பு பகைவரம்பாற் சிதைந்து தேர்ச்சக்கரமும்
நிலத்திலழுந்திவிடக்கடவதென்று ஒரு முனிவனிடத்தும் கர்ணண் சாபங்கள்
பெற்றிருத்தலும், உயிர்நிலையாகிய கவசகுண்டலங்களை இந்திரனுக்குக்கொடுத்து
இழந்ததும், நாகாஸ்திரத்தை அருச்சுனன்மேல் இரண்டாம்முறை விடுவதில்லை
யென்றும் மற்றைப்பாண்டவர் நால்வரையும் கொல்வதில்லையென்றும் குந்திக்கு
வரமளித்ததும்முதலிய தக்ககாரணங்கள் பற்றியும், திருமாலின் இயல்பான
திரிகாலஞானத்தாலுமாகும். 'தினகரன்மைந்தன்' என்ற விவரம் :- பாண்டவர்கள்
தாயான குந்திதேவி கன்னிகையாயிருக்கும்பொழுது தனக்குத்
துருவாசமுனிவருபதேசித்த மந்திரத்தைப் பரீட்சித்தறியும் பொருட்டுச் சூரியனை
நினைத்து அம்மந்திரத்தை உச்சரிக்க, உடனே அத்தேவன் வந்து அவளுக்கு
அநுக்கிரகித்ததனால், அவளிடம் பிறந்த புத்திரன், கர்ணன்; இவனை,
பிறந்தபொழுதே குந்தி பழிக்கு அஞ்சி ஒருமிதக்கும் மரப்பெட்டியில் வைத்துப்
பூட்டிக் கங்கையாற்றில் விட்டிட, அதனைத் திருதராட்டிரனது தேர்ப்பாகனான
அதிரதனென்பவன் கண்டு எடுத்துத் திறந்து பார்த்துக் கொண்டுபோய்த் தன்
மனைவியாகிய ராதையும் தானுமாக வசுசேனனென்று பெயரிட்டு வளர்த்தான்:
இவனுக்குக் கர்ணன் என்ற பெயர் ஆகாசவாணி யிட்டது. இவன் பின்பு
துரியோதனனுக்குப் பிராணசினேகிதனாகி அவனருளால் அங்கதேசத்துக்கு
அரசனாயினான்.