உரை பட - புகழுண்டாக, உந்து-செலுத்துகிற, பாகர் - சாரதிகள், இலர்- இல்லை; உகைத்த-செலுத்தப்படுகிற, துரங்க ராசி-குதிரைகளின் கூட்டங்கள், இல-இல்லை; இரைத்து-ஆரவாரித்துக்கொண்டு, விரைந்து உலாவல்-வேகமாகச்செல்லுந்தொழில்கள், இல-இல்லை, என-என்று சொல்லும்படி, செரு மண்டு - அப்போரிற் பொருந்திய, தேர் -தேர்கள், பல -அநேகங்களாம்; ( எ-று.) வலிமை பருமை உயர்ச்சிகளில் ஒப்பனவாயினும், சக்கரம் முதலியன இல்லாமையால் மலைகளுந் தேர்கலுக்கு ஒப்பாகா என்பதாம். இப்பாட்டில் உபமானமாகிய மலையினும் உபமேயமாகிய தேருக்கு நேமி முதலியன உண்மையாகிய விசேடங் கூறியதனால், வேற்றுமையணி. கொடிஞ்சி - கொடிஞ்சு என்றும் வழங்கும். உரை பட- (குதிரைகளை அதட்டுஞ்) சொல் உண்டாக என்றுமாம். பி -ம் : பாகரில. (64) 20.- குதிரை வருணனை. உகத்தின்முடிந்தநாளலையோடொலித்தெழுசங்கவேலையென மிகப்புகைகொண்டுவானுலகும்வெடித்திடமண்டுதேயுவென நகச்சிகரங்கள்சாயவெதிர்நடப்பனசண்டைவாயுவென விகற்செய்துசெம்பராகமிசையெழுப்பினதுங்கவாசிகளே. |
(இ-ள்.) உகத்தின் முடிந்த நாள் - கல்பத்தின் முடிவுகாலத்தில், அலையோடு ஒலித்து எழு - அலைகளோடு ஆரவாரித்துப் பொங்குகிற, சங்கம் வேலை என - சங்குகளையுடைய கடல்போலவும்,- (அக்காலத்தில்), மிக புகை கொண்டு - புகையைமிகுதியாகக்கொண்டு, வான்உலகுஉம் வெடித்திட - மேலுள்ள தேவலோகமும்வெடிக்கும் படி, மண்டு - மூண்டுஎரிகிற, தேயு என - காலாக்கினி போலவும்,(அக்காலத்தில்),- நகம் சிகரங்கள் சாய - மலைகளின் உச்சிகள் சரியும்படி, எதிர்நடப்பன - எதிர்த்துச்செல்வனவான, சண்டம் வாயு என - கொடியகாற்றுக்கள்போலவும்,- துங்கம் வாசிகள் - உயர்ந்த குதிரைகள் இகல் செய்து -போரைச்செய்து, செம் பராகம் - சிவந்த புழுதிகளை, மிசை எழுப்பின - மேலே(கால்களால்) கிளப்பின; ஆரவாரத்துக்கும் அணிபடவருதற்கும் கடலும், அஞ்சத்தக்க கொடுமைக்குத் தீயும், வேகத்துக்கு வாயுவும் என ஏற்றபடி ஒப்புமை கண்டுகொள்க. உவமையணி. கல்பாந்தகாலத்தில் உலகையழிக்கக் கடல்பொங்கியெழுதலும், பொருந்தீப் பற்றியெரிதலும், பெருங்காற்று விசையோடுஅடித்தலும், இயல்பு, சப்தமருத்துக்களென வாயு எழுவகைப்படுதலால், 'நடப்பன' என அதனைப் பன்மையால் விசேடித்தார். (65) 21.- காலாள் வருணனை. விளைத்தனர்தொந்தமாகவமர்மிகைத்தனர்தந்தம்வீரமுட னுளைத்தனர்சிங்கசாபமெனவுறுக்கினர்சென்றுமேன்முடுகி வளைத்தனர்கொண்டவார்சிலைகள்வடித்தசரங்களாலுழுது திளைத்தனர்வென்றிகூரும்வகைசெருக்களமெங்குமாடவரே. |
|