இனிமேல் அம்பொன்றையும் (உன்மீது யாம் ) செலுத்தோம்: அஞ்சல் - பயப்படாதே; இளைப்பு அற - சோர்வு நீங்க, ஏகு - செல்வாய்,' என - என்றுசொல்ல,-(எ - று.)- 'முனி போயினன் என அடுத்த கவியில் முடியும் இங்ஙனம் ஏகென விடுத்தது - தழிஞ்சி என்னும் புறப்பொருள் துறையின்பாற்படும்; அது-சாய்ந்தவர்மேல் செல்லாமல் தழுவுது. இப்படித் தருமன் பெருமைதோன்றக் கூறினதால், அப்பொழுது துரோணனுயிர் தருமன் வசத்ததாயிருந்தது என்பது போதரும். ஏழு தீவுகள் - சம்பூ, பிலட்சம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்பன. அனத்தம்=அநர்த்தம். துணியுண்டது, உண்- செயப்பாட்டுவினைப் பொருளுணர்த்தும் விகுதி. ஆஹவம் - வட சொல் முன் - ஏழுனுருபு. பி - ம்: ஆகவமும். இளைப்புற. (69) 25. | அறத்தின் மகன்ற னாண்மையினை யழித்துயி ரெஞ்சி டாவகைதன், மறத்தொடு கொண்டு போவலென மதித்தெதிர் வந்த சாபமுனி, திறத்தினிவன்கை யேவுகணை செயித்தது நாணிமெலி, வுறத்தளர் சிந்தை யோடுதனதுடற்சுமை கொண்டு போயினனே. |
(இ-ள்.) அறத்தின் மகன்தன் - தருமபுத்திரனது, ஆண்மையினை - பராக்கிரமத்தை, அழித்து - அழியச்செய்து, உயிர் எஞ்சிடா வகை -(அவனது) உயிர் ஒழியாதபடி [உயிருடன் என்றபடி], தன் மறத்தொடு- தனது வலிமையால், கொண்டுபோவல் என - (அவனைப்) பிடித்துக்கொண்டுபோவேனென்று, மதித்து - எண்ணி, எதிர் வந்த - (அவனெதிரிற் போருக்கு) வந்த, சாபம் முனி - வில்லில் வல்லதுரோணன், திறத்தின் - போர்த்திறமையை யுடைய, இவன்- இத்தருமனது, கை -கையினால், ஏவு - எய்யப்பட்ட, கணை - அம்புகள் , செயித்தது - (தன்னை) வென்றதை, கண்டு-, நாணி- வெட்கப்பட்டு, மெலிவுஉற- வாட்டமுண்டாக, தளர் சிந்தையோடு- சோர்ந்த மனத்துடனே, தனது உடல் சுமை கொண்டு - தனது உடம்பாகிய பாரத்தைச் சுமந்துகொண்டு, போயினன் - (மீண்டு) சென்றான்; (எ -று.) போரில் தன்மாணாக்கனாற் பரிபவப்பட்ட துரோணாசாரியன் உயிர் நீங்காது உடம்போடிருத்தலை ஒரபாரமாகக்கருதின னென்பதும், அவனுக்கு அப்பொழுது உடம்பும் ஒருபாரமாகும்படி சோர்வு உளதாயிற்று என்பதும் தோன்ற, 'உடற்சுமைகொண்டு' என்றார். மறத்தொடு, ஓடு- கருவிப்பொருளது. பி-ம்: ஏவு பல. வேறு. 26.-தோற்றோடிய துரோணன் வேறொருதேரி லேறுதல். தருமன் மைந்த னுடன்ம லைந்து சமரி லஞ்சி யோடியுங் கரும நன்று படநி னைந்த கலச யோனி பின்னையு முரண்மி குந்து டற்ற வேகொன் முந்த வோட வேகொலாம் விரைவு டன்சி னங்க டாவ வேறொர் தேரி லேறினான். |
|