பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்49

     (இ - ள்.) (இவ்வாறு), தருமன் மைந்தனுடன் - தருமபுத்திரனுடனே,
மலைந்து- போர்செய்து, சமரில் - அப்போரில், அஞ்சி - பயந்து, ஓடிஉம்-
(தோற்றுமுதுகுகொடுத்து) ஓடியும்,- கருமம்- (தான் வெல்லவேண்டுந்) தொழிலை,
நன்று பட - நன்றாக, நினைந்த- ஆலோசித்த, கலச யோனி- பாத்திரத்தை (த்
தனக்கு)ப் பிறப்பிடமாகவுடைய துரோணன், பின்னைஉம் - மறுபடியும், முரண்
மிகுந்து உடற்றஏ கொல் - வலிமை மிக்குப் போர்செய்தற்காகவேயா? முந்த ஓடஏ
கொல் ஆம் - விரைவாக ஒடிப்போவதற்காகவேயோ? விரைவுடன் - துரிதத்தோடு,
சினம் கடாவ - கோபந் தூண்ட, வேறு ஓர் தேரில் ஏறினான் - மற்றொருதேரின்
மீதுஏறினான்;

     துரோணன் முன்புதோற்றதற்கு நாணி மற்றொருதரத்திலாயினும்
வெல்லும்பொருட்டு வேறொருதேரின்மே லேறியதை, இதுவும் முன்போலத்
தோல்வியாகவே முடிதலால், கவி சமத்காரமாக 'முரண்மிகுந்துடற்றவேகொல்
முந்தஓடவேகொல்' என்று கூறினார். அவன் இவ்விரண்டாந் தரத்திலும்
புறங்கொடுத்தலை, மேல் 43-ஆங் கவியிற் காண்க. 'கருமநன்று பட நினைந்த'
என்பதற்கு- செய்தொழில்களை நன்றாக ஆராய்ந்தறிந்த என்று இயற்கை குறிப்பதாக்
கொள்ளினுமாம். கலசயோநி- வடசொற்றொடர்; வேற்றுமைத்தொகையன்மொழி;
இப்பெயர்- பெரும்பாலும் அகத்தியனுக்கும், சிறுபான்மை வசிட்டனுக்கும் வழங்கும்.
பி - ம் : நினைந்து-கதாவ.

     இதுமுதல் பத்தொன்பது கவிகள் - பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்று
விளச்சீரும்மற்றையாறும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட
எழுசீராசிரியவிருத்தங்கள்.                                      (71)

27.- இதுமுதல் நான்குகவிகள் - குளகம்: பாண்டவர்பக்கத்து வீரர்
கனன்றுவளைய, துரியோதனன்பக்கத்துச் சேனைவீரர்களும் திரள முனைந்த
போர் நிகழ்ந்தது கூறும்.

தங்கண்மன்னனம்முனைத்தனித்துவென்றவின்மையுந்
துங்கவென்றியின்றியேதுரோணனாரழிந்ததும்
அங்குளங்கனன்றுமீளவணிகொடேரினானதுஞ்
சிங்கமென்னவருகுநின்றசிறுவர்கண்டுசீறியே.

     (இ-ள்.) தங்கள் மன்னன்- தங்கள் அரசனான யுதிட்டிரன், அ முனை -
அப்போரிலே, தனித்து வென்ற - தனியாய்நின்று சயித்த, வின்மைஉம்- வில்
வன்மையையும், துங்கம் வென்றி இன்றிஏ - சிறந்த வெற்றியில்லாமலே,
துரோணனார்அழிந்ததுஉம் - துரோணாசாரியர் தோற்றதையும், மீள - பின்பு,
உளம் கனன்று -(அந்தத் துரோணர்) மனங்கொதித்து, அங்கு - அவ்விடத்தில்,
அணி கொள் தேரின்ஆனதுஉம் - அலங்காரங்கொண்ட மற்றொருதேரில்
ஏறியதையும், சிங்கம் என்னஅருகு நின்ற சிறுவர் - சிங்கங்கள் போலத்
தருமனருகில் நின்ற இளவீரர்கள், கண்டு-, சீறி- (துரோணர்மீது) கோபித்து,-
(எ - று.)-"முனியை வளைய" எனஅடுத்தகவியோடு தொடரும்.        (72)