இதுமுதல் ஏழுகவிகள்- குளகம்;அவற்றில், முதல் மூன்றரைச் செய்யுள் ஒருதொடரும், மற்றவை ஒருதொடருமாம். (இ-ள்.) 'அதி தவளம்- மிக வெண்ணிறமான, மத்த வாரணம்உம்- மதம்பிடித்த(இவனது) யானையும், முதல் - பூர்வ காலத்தில், அமுத மதனத்தில் - தேவாமிருதத்துக்காகக் கடைகையில், ஆழிமிசை- திருப்பாற்கடலின்மேல், சுத்தம் ஆகவரும் - வெண்ணிறமாகத் தோன்றிய, மதம் களிறு- (ஐராவதமென்னும் இந்திரனது) மதயானையேபோலும்; இவன்உம்-, அ மகபதி - அந்த இந்திரனே போல்வான் ; எடுத்த கார்முகம்உம்- (இவன்கையில்) ஏந்திய வில்லும், அவன்- அவ்விந்திரன், எதிர்தர- (பகைவர்) எதிர்க்கையில், எடுத்த - (கையில்) எடுத்த சாபம்-வில்லேபோலும்; இவனுடன் இகல்செய நினைக்க - இவனொடு (எதிர்த்துப்) போர்செய்தற்கு நினைக்கவும், யாவர்உளர் - எந்தவீரர் தகுதியுள்ளார்?' என - என்று, விருது உதவ - (துதிபாடகர்) பிருதாவளிகளைக்கூற, - விதம் உற வகுத்த - பலவகையாகப் பகுக்கப்பட்ட, யானை அணியுடன்- யானைச்சேனையுடனே,- பகதத்தராசன்-,- (எ-று.)-"களத்திலானபொழுதிலே" என 47 - ஆங் கவியோடு தொடரும். இவன் ஏறிவரும் பட்டத்துயானைக்கு 'சுப்பிரதீகம்' என்று பெயர்; இது தேவயானையென்றும், இந்திரனால் இவனுக்கு அளிக்கப்பட்ட தென்றுங் கூறப்படும்; இது நூறாயிரம்யானை பலமுடைய தென்று பெருந்தேவனார் பாரதத்து உரைநடையால் தெரிகிறது. இவனதுவில்லைப் பெருந்தேவனார் "கடவுட்சிலை" என்றதையும் இங்கே யறிக. மத்தவாரணம், அம்ருதமதநம், சுத்தம்- வடசொற்கள். விருது- பிரதாபத்தை வெளியிடும் வாக்கியங்கள்; வெற்றி யென்று கூறினாருமுளர். அம்மகபதியென்பது, சந்தவின்பத்துக்காகத் தொக்கது. பி-ம்: - உயர்மகபதி. இதுமுதற் பத்துக்கவிகள்- பெரும்பாலும் ஒன்று ஐந்தாஞ்சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களும், இரண்டுமூன்று ஆறுஏழாஞ்சீர்கள் தேமாச்சீர்களும், நான்குஎட்டாஞ்சீர்கள் கருவிளச்சீர்களும் ஆகிய கழிநெடிலடி நான்குகொண்ட எண்சீராசிரியச்சந்த விருத்தங்கள். 'தனதனன தத்த தான தனதன தனதனன தத்ததான தனதன' எனச் சந்தக்குழிப்புக் காண்க. (90) 46. | இருபத்திற்றுநூறுகளிறுள விவனினுமிகுத்தவீரர்கடவுவ. ரொருபதுபதிற்று றுவமையெனமிக்கவாகுவலியினன். நூறுமழகளிமுருகனெனவெற்றிநேமிமுகிலென முரணவுணருக்கு வாழ்வுகெடவுயர், சுரபதிதனக்குவாழ்வுவரும்வகை சுரருலகளித்த தோழனிவனரோ. |
(இ-ள்.) இருபது பதிற்று நூறு களிறு - இருபதினாயிரம் யானைகள், உள- (இவனுக்கு) உள்ளன; (அவற்றை), இவனின்உம் மிகுத்த வீரர் - இவனைக்காட்டிலுஞ் செருக்கிய வீரர்கள், கடவுவர்- செலுத்துவார்கள்; இவன்-, ஒருபது பதிற்றுநூறுமழ களிறு உவமைஎன- பதினாயிரம் இளையஆண்யானைகள் ஒப்பு என்று சொல்லும் படி, மிக்க- மிகுந்த, வாகு வலியினன் - தோள்வலிமையையுடையான்; |