முருகன் என- (தேவசேனாபதியான) சுப்பிரமணியமூர்த்திபோலவும், வெற்றி நேமி முகில் என - சயத்தைத்தருகிற சக்கராயுதத்தையுடைய மேகம்போன்ற திருமால்போலவும், முரண் அவுணருக்கு வாழ்வு கெட- வலிமையையுடைய அசுரர்களுக்கு வாழ்க்கையொழிய, உயர் சுரபதிதனக்கு - சிறந்த தேவேந்திரனுக்கு, வாழ்வு வரும் வகை - நல்வாழ்க்கையுண்டாகும்படி, சுரர் உலகு அளித்த - தேவ லோகத்தை (மீட்டு)க்கொடுத்த, தோழன் - சினோகிதன்; (எ - று.) அரோ- ஈற்றசை. கீழ்ச்செய்யுளில் 'பகதத்தராசன்' எனப் பெயரைப் குறித்த ஆசிரியர், இப்பாட்டால், அவனது சிறப்புக்களைத் தெரிவித்தார்; ஆதலின், இது - குளகத்தில் இடைப்பிறவரலாக நின்றது. பி - ம் :- கடவுவ. 'பதினாயிரம்யானைப் பலமுடையான் நூறாயிரம்யானையின் பல முடையதோர் சுப்பிரதீபமென்னும் மதஹஸ்தியை மேற்கொண்டு' என்றார், பெருந்தேவனாரும். முருகு- தெய்வத்தன்மை, இளமை, வலிமை; அவற்றையுடையவன்- முருகன்: சூரபதுமன் முதலிய அசுரர்களைச் சங்கரித்தற்காகவே அவதரித்தவ னாதலால் முருகனையும். பற்பலசமயங்களில் பகைவரை யொழித்து அமரரைக் காத்ததனால் திருமாலையும், பகதத்தனுக்கு அசுரசங்காரத்திலும் தேவபரிபாலனத்திலும் உவமைகூறினார். முகில்- உவமையாகுபெயர். 'சுரபதிதனக்கு' என்பதை 'வாழ்வுவரும்வகை' என்றதோடும், 'சுரருலகளித்த' என்றதோடும், 'தோழன்' என்றதோடும் கூட்டுக. பாற்கடலைக் கடைந்தகாலத்து அதினின்று உண்டானதொரு சுரையை [வாருணியென்னும் ஒருவகை மதுவை] ப் பானஞ்செய்தது பற்றித் தேவர்க்குச் சுரர் என்றும், அதனைப்பானஞ்செய்யாதது பற்றி மற்றொரு திறத்தார்க்குஅசுரர் என்றும் பெயர். (91) 47. | எழிலணிதடக்கைமேருகிரிநிக ரிபசிரமதைக்கமோதியுருமென, மொழியுறவதிர்த்துநீடுபுயகிரிமுறைமுறைதடிக்கவேகமொடுபுகை, பொழிசினமனத்தின்மூளவவிரொளிபுனைநுதல்வெயர்க்க வாயுகதியென, விழிவழிநெருப்புவீழவிரைவுடன் விறன்மிகு களத்திலான பொழுதிலே. |
(இ-ள்.) எழில் அணி- அழகுபெற்ற, தட கை - பெரியதுதிக்கையையுடைய, மேரு கிரி நிகர் இபம் - மகாமேருமலையையொத்த (தான் ஏறிய) யானையினது, சிரம்- தலையை, அதைக்க- அழுந்தும் படி, மோதி - (கையால்) அடித்து,- உரும் என - இடியோசை போல, மொழி உற - சொற்கள் வெளிப்படும்படி, அதிர்த்து - ஆரவாரித்து,- நீடு புய கிரி- உயர்ந்த மலைகள்போன்ற தோள்கள், முறை முறை தடிக்க - மேல்மேல் பூரிக்க, - புகை பொழி சினம்- புகையைச்சொரிகிற கோபத்தீ, வேகமொடு- உக்கிரமாக, மனத்தில் மூள - நெஞ்சிற்பற்றியெழ,- (அதனால்), அவிர் ஒளி புனை நுதல்- விளங்குகிற ஒளியைக்கொண்ட நெற்றி, வெயர்க்க- வேர்வையடையவும்-, விழிவழி- கண்களின்வழியாய், நெருப்பு வீழ - தீச்சிந்தவும், - வாயு கதி என - காற்றின் ஓட்டம்போல், விரைவுடன் - வேகத்தோடு, விறல் மிகு களத்தில் - வெற்றிமிக்க போர்க்களத்திலே, |