இருதிறத்து அரசர்களிலும் எவரும் புகழாதவரில்லை: எல்லோரும் புகழ்ந்தனரென்பதாம். உபமேயமாகிய யானையின் மேல்தவிசைக் கருதி, உபமானமாகிய மலையை ' சிகரக்கிரி' என விசேடித்துக் கூறினார். கார் - இருவர்க்கும் உவமை; சிலைக்கு ஒப்பெனினுமாம். மனமொழிமெய்களுக்கு எட்டாதமாயவனாதலால், ' புகழ்தற்கரிய பாகன்' என்றார் இதனால், பகவானதுவாசாமகோசரத்வம் வெளியாம். பி -ம்: புகழாதில்லை. இதுமுதற் பதினாறுகவிகள்- கீழ்ச்சருக்கத்தின் முப்பத்துநான்காங்கவி போன்றஅறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள். (112) 68.- அப்போது காந்தாரர் கொல்வதாக அருச்சுனனைப் புடைசூழ்தல் விருதுஞ்சஞ்பல்லியமுமேன்மேலதிரவிற்போரில் பொருதின்றிவனைக்கொன்றன்றிப்போகோமென்னப்புடை சூழ்ந்தார் மருதுஞ்சகடும்விழவுதைத்ததவலவன்கடவவாயுவெனக் கருதும்புரவித்தேரூருங்கழற்காவலன்மேற்காந்தாரர் |
(இ-ள்.) (அதன்பின்பு), காந்தாரார் - காந்தாரதேசத்து அரசர்கள், விருதுஉம்- பிருதாவளிகளும், சங்குஉம்-, பல் இயம்உம் -அநேக வாத்தியங்களும், மேல்மேல் அதிர - மிக அதிகமாகமுழங்க, 'வில் போரில் - வில்லினாற் செய்யும் யுத்தத்தில், இன்று - இன்றைக்கு, பொருது- போர்செய்து, இவனை - இவ்வருச்சுனனை, கொன்றுஅன்றி- கொன்றாலல்லாமல், போகோம்- விட்டுப்போகமாட்டோம்', என்ன - என்று(வீரவாதஞ்) சொல்லிக்கொண்டு,- மருதுஉம் சகடுஉம் விழ உதைத்த -மருதமரங்களும் வண்டியுங் கீழ்விழும்படி (திருவடியால்) உதைத்திட்ட, வலவன் -பாகனான கண்ணன், கடவ - செலுத்த,- வாயு என கருதும் - (விசையால்)காற்றென்று எண்ணத்தக்க, புரவி- குதிரைகளைப் பூட்டிய, தேர் - தேரின்மேல்,ஊரும் - ஏறிவருகிற, கழல் காவலன்மேல்- வீரக்கழலையுடைய அருச்சனராசன்மேல், புடைசூழ்ந்தார்- நாற்புறத்துஞ் சூழ்ந்துகொண்டார்கள்; (எ -று.)- விருது - வெற்றியைக்குறிக்கும் சின்னம் முதலிய ஊதுகருவிகளுமாம். பி -ம்:விறற்போரில். (113) 69.- அருச்சுனனம்பால் சகுனிதனயரிருவர் இறத்தல். காந்துந்தறுகட்காந்தாரர்கடுவெங்கனல்போற்கண்சிவந்தங் கேந்துஞ்சிலையாற்கணைமழைபெய்தெழிலிக்கணம்போரெல திரூன்றிச் சாந்தும்புழுகுங்கமழ்வாகுச்சகுனிதனயர்தலைபோரிற் சேர்ந்தன்றிறந்தார்விடசெயனுஞ்செயனுமெனும்போர்ச்செயவீரர். |
(இ-ள்.) காந்தும்- கோபித்துவந்த, தறுகண்-அஞ்சாமையையுடைய, காந்தாரர்- காந்தாரதேசத்து அரசருள், சாந்துஉம் புழுகுஉம் கமழ் வாகு சகுனி தனயர்- சந்தனமும் கஸ்தூரிப்புழுகும் வாசனைவீசுகிற தோள்களையுடைய சகுனியின் புத்திரர்களான, விடசெயன்உம் செயன்எம் எனும் - வ்ருஷஜயன் ஜயன் என்னும் பெயருடைய, போர் செய வீரர் - போரில் வெற்றியையுடைய வீரர்கள், அன்று - அப்போது, கடு வெம் கனல்போல் - மிகக்கொடிய |