(இ -ள்.) (பின்பு), வஞ்சம் இல்லான் - வஞ்சனையில்லாதவனாகிய சகதேவன்,- ஒரு கணை தொடுத்து- ஓரம்பைப் பிரயோகித்து, (அதனால்), பாகன் உயிர் கவர்ந்து- (சகுனியின் தேர்ச்) சாரதியினது உயிரை (உடம்பினின்று) பறித்து [பாகனைக் கொன்று], உயர்த்த கேது-(அவன்தேரில்) உயரக்கட்டிய துவசத்தை, இருகணை தொடுத்து வீழ்த்தி - இரண்டுஅம்புகளைப் பிரயோகித்து (அவற்றால்) அறுத்துத்தள்ளி, இரதம் மா தொலைய - தேரிற்பூட்டிய குதிரைகள் (நான்கும்) அழியும்படி, நான்கு பொரு கணை தொடுத்து - போருக்குரிய நான்கு அம்புகளைப் பிரயோகித்து, வஞ்சன் - வஞ்சனையுடையவனான அச்சகுனியின், பொரு அரு மார்பில் - ஒப்பில்லாத மார்பிலே, வரு ஆறு கணை தொடுத்து - (ஒன்றன்பின் ஒன்றாக) வருகிற ஆறு அம்புகளை பிரயோகித்து, வாகை மலைந்தனன் - வெற்றிமாலை சூடினான்; ( எ -று.) முதலில் இருவர்க்கும் சிறிதுபொழுது சமமாகப் போர்நிகழ பின்பு போரில் இன்னாரை இன்னாரால் வெல்லலாயிற்று என இயல்பை யெடுத்துக் கூறுதல், மரபு. மலைதல் - சூடுதல்: "மலைதலு மிலைதலும் வேய்தலுஞ் சூடுதல்" என்பது, பிங்கலத்தை. வஞ்சன் என்றதை, பாகன் கேது இரதம் என்றவற்றோடுங் கூட்டுக. பாகு - யானை தேர் குதிரைகளைச் செலுத்துந் தொழில்: அதனையுடையான் - பாகன். தொலைய என்னும் செயவெனெச்சம், காரியப்பொருளதாதலால், எதிர்காலம். வாகை யென்னும் மரத்தின் மலர்களாகிய மாலையைப் போர்வெற்றிக்கு அறிகுறியாக வீரர்கள் சூடுதல், முறைமை. வஞ்சகச்சூதில் வல்லவ னாதலால், சகுனியை 'வஞ்சன்' என்றார்; "ஸதமாயன்" என்றார் முதனூலாரும். சகதேவன் வஞ்சமில்லானாதலை, கீழ்ப் பழம்பொருந்து சருக்கத்திலும் கிருஷ்ணன் தூதுசருக்கத்திலும் கண்ணனுக்கும் இவனுக்கும் நடந்த சம்பாஷணைகளாலும், (முகூர்த்தங்கேள்விச் சருக்கத்தில்) அடுத்துக்கேட்ட துரியோதனனுக்குச் சிறிதும் வஞ்சனையின்றி நல் முகூர்த்தம் வைத்துக்கொடுத்ததனாலும் அறிக. பி -ம் : மிலைந்தனன். (9) 10.-சகதேவன் கதாயுதப்போரிலும் சகுனியை வெல்லுதல். உகுநிணச்சேற்றிலூன்றியோடுதற்குன்னுவான்போற் சகுனியத்தேரினின்றுமிழிந்துகைத்தண்டமேந்த நகுலனுக்கிளையோன்றானுநகுமணிவலயத்தோண்மேன் மிகுதிறற்றண்டுகொண்டேவென்னிடப்பொருதுமீண்டான். |
( இ -ள்.) உகு - (போர்க்களத்தில் இறந்த பிராணிகளின் உடம்பினின்று) வெளிப்படுகிற, நிணம்- கொழுப்பாகிய, சேற்றில் - சேற்றிலே, ஊன்றி -(ஆதாரமாக) ஊன்றிக்கொண்டு, ஓடுதற்கு-(தான்) ஓடிப்போவதற்கு, உன்னுவான் போல் - எண்ணுபவன் போல, சகுனி-, அ தேரினின்றும் இழிந்து - அந்த(த் தனது) இரதத்தினின்றும் இறங்கி, கை தண்டம் ஏந்த - கையிற் கதாயுதத்தை எடுத்துக்கொள்ள,- (அப்பொழுது), நகுலனுக்கு இளையோன் |