17.- வீமன் கேமதூர்த்தியைக் கொல்லுதல். தணடொடுதண்டமேந்திச்சாரிகைபலவுங்காட்டிக் கொண்டலின்முழக்கீதென்னக்குரைகடலொலியீதென்னக் கண்டவர்க்கன்றிக்கேட்டார்க்குரைப்பருங்கணக்கிற்றாக்கிக் கொண்டுவன்காயமொன்றாற்கேமனைவீமன்கொன்றான். |
(இ-ள்.) (அவ்வீரரிருவரும்),- தண்டொடு தண்டம் ஏந்தி - (தம் தம்) கதாயுதத்தையெடுத்துக்கொண்டு, சாரிகை பலஉம் காட்டி - (வலதுசாரி இடசாரிமுதலிய) பலவகை நடைவிகற்பங்களையுஞ் செய்து காண்பித்து, கொண்டலின்முழக்கு ஈது என்ன - மேகத்தின் இடி யோசை இதுவென்று சொல்லவும், குரைகடல் ஒலி ஈது என்ன - ஒலிக்கின்ற கடலின் ஓசை இது வென்னவும்,(பெருமுழக்கமுண்டாக), கண்டவர்க்கு அன்றி கேட்டார்க்குஉரைப்பு அருங்கணக்கின் - (பிரதியக்ஷமாகப்) பார்த்தவர்கட்கேயல்லாமல் (புறத்திருந்து) கேட்டவர்கட்கும் (இத்தன்மையதென்று) சொல்லுதற்கு அரிய தன்மையாக, தாக்கிக்கொண்டு - தாக்கிப்போர்செய்துகொண்டிருந்து,- (பின்பு அப்போரில்), வீமன்-,வல் காயம் ஒன்றால் - வலிய கதையின் வீச்சு ஒன்றினால், கேமனை கொன்றான்,-(எ -று.)-காயம், காய் - பகுதி. (17) 18.- கர்ணன், கேமனிறந்ததனால் நிலைகுலைந்த சேனையை ஒழுங்குபடுத்துதல் எறிந்ததண்டமரிற்கேமனிறந்தனனென்றபோழ்தின் முறிந்ததுவேலைஞாலமுழுதுடைநிருபன்சேனை யறிந்தெதிரூன்றிவென்றியாண்டகைக்கன்னன்மீளப் பிறிந்தபல்லணியுமொன்றைப்பேரணியாக்கிநின்றான். |
(இ-ள்.) எறிந்த தண்டு அமரில் - வீசியடித்துச் செய்த கதாயுத்தத்தில், கேமன்இறந்தனன்-, என்ற போழ்தில் - என்ற மாத்திரத்திலே,- வேலை ஞாலம் முழுதுஉடை - கடல்சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும் (தனதாக) உடைய, நிருபன் -துரியோதனராசனது, சேனை-, முறிந்தது - வலிகெட்டு நிலைகெட்டது வென்றி -வெற்றியையும், ஆண் தகை - ஆண்மைக்குணத்தையுமுடைய, கன்னன் - கர்ணன்- அறிந்து - (அதனை) அறிந்து, எதிர் ஊன்றி - எதிரிற் சென்று தைரியப்படுத்தி,-பிறிந்த - (சிதறுண்டு தனித்தனி) பிரிந்துபோன, பல் அணிஉம் - பலவகைச்சேனைகளும், மீள - திரும்பவும், ஒன்ற - ஒருங்குதிரள, பேர் அணி ஆக்கிநின்றான் - பெரியவகுப்பாகப் படைவகுத்து நின்றான்; (எ-று.) (18) 19.- பாண்டவசேனை கௌரவவேனையை எதிர்த்தல். பேரணி கலஞ்சேர் மார்பன் பேரணி யாக்கி நின்ற போரணி மிக்க சேனைப் பொலிவுகண் டொலிகொள் வண்டார் தாரணி யலங்கன் மௌலித் தருமன்மா மதலை சேனை யோரணி யாகக் கூடி யுடன்றெதிர் நடந்த தன்றே. |
|