பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்103

97.- இரண்டுகவிகள்-வீமன் கர்ணனோடு பொருது அவனை
மூர்ச்சித்துவிழச்செய்தலைக் கூறும்.

என்னுமுன்மருத்தின்மைந்தனிரதமேல்வரிவில்வாங்கிக்
கன்னனதுரையும்வில்லுங்கணத்திடைச்சிதைந்துவீழ
முன்னொருவாளிதொட்டானெதிரியுமுரண்விலொன்றாற்
பன்னிருவாளிமீளிமார்பிடைப்பரப்பினானே.

     (இ-ள்.) என்னும் முன்-என்று (கர்ணன்) சொல்லுவதற்கு முன்னே, மருத்தின்
மைந்தன் - வாயுபுத்திரனான வீமன், இரதம் மேல் - தேரின்மேலே, வரி வில்
வாங்கி-கட்டமைந்த வில்லைவளைத்து, கன்னனது உரைஉம் - கர்ணனது பேச்சும்,
வில்லும்-,கணத்திடை - க்ஷணப்பொழுதினுள்ளே, சிதைந்து வீழ-கெட்டழியும்படி,
முன்-முன்னே,ஒரு வாளி - ஓரம்பை, தொட்டான் - தொடுத்தான்; எதிரிஉம் -
பகைவனானகர்ணனும், முரண்வில் ஒன்றால் - வலிமையையுடைய வேறொரு
வில்லினால்,பன்னிருவாளி - பன்னிரண்டு அம்புகளை, மீளி மார்பிடை - வலிய
வீமன் மார்பிலே,பரப்பினான் - பரவச்செய்தான்;(எ - று.)-உரை சிதைந்துவீழ்தல்-
கீழ்ச் சல்லியனோடுசொல்லிய வார்த்தை பயன்படாமற்போதல்.
உரையும்வில்லுஞ்சிதைந்துவீழ -உடனவிற்சியணி.                     (188)

98.பாய்ந்தவப்பாணந்தன்னைப்பாணியாற்றிமிர்ந்துவீமன்
காய்ந்தவாளனையதாரைக்கடுங்கொடும்பகழியொன்றா
லேய்ந்ததேரருக்கன்மைந்தனிதயத்துமூழ்குவித்தான்
வேய்ந்ததாரவனுந்தேரின்மிசையயர்வுற்றுவீழ்ந்தான்.

     (இ-ள்.) வீமன்,-,பாய்ந்த அ பாணம்தன்னை -(தன் மார்பிற்) பாய்ந்த
அப்பன்னிரண்டுபாணத்தை, பாணியால் திமிர்ந்து - கையாற் பொடியாக்கிவிட்டு,
காய்ந்த வாள் அனைய - (பகைவரைக்) கொல்லுகிற, வாள்போன்ற, தாரை -
நுனியையுடைய, கடு கொடு பகழி ஒன்றால் - விரைந்து செல்லுகிற
கொடியதொருபாணத்தால், தேர் ஏய்ந்த அருக்கன் மைந்தன் - தேரிற் பொருந்திய
சூரியகுமாரனது,இதயத்து - நெஞ்சில், மூழ்குவித்தான் - அழுந்தச்செய்தான்;
வேய்ந்த தாரவன்உம் - அணிந்த மாலையையுடைய கர்ணனும், தேரின்மிசை -
தேரின்மேல், அயர்வு உற்று- மூர்ச்சையடைந்து, வீழ்ந்தான் - விழுந்தான்; (எ - று.)
                                                                (189)

99.-சல்லியனாற்றேறிய கர்ணன் சூழ்ந்த படைவீரரைத்
துணித்திடல்.

வீழ்தலுமன்னர்மன்னன்வெம்படைவென்னிட்டோட
வாழ்வறவீழ்ந்தோன்றன்னைமத்திரத்தலைவன்றேற்ற
வேழ்பரித்தேரோன்மைந்தனெழுந்துபின்சாபம்வாங்கி
சூழ்படைவீரர்யாருந்துஞ்சிடத்துணித்திட்டானே.

     (இ-ள்.) வீழ்தலும் - (கர்ணன்) விழுந்தவளவில், மன்னர் மன்னன் -
ராஜராஜனான துரியோதனனது, வெம் படை - கொடிய சேனை, வென் இட்டு
ஓட -புறங்கொடுத்து ஓடிப்போக, வாழ்வு அறவீழ்ந்தோன் தன்னை - ஜீவித்தல்
அறும்படி (மூர்ச்சித்து) விழுந்த