பக்கம் எண் :

120பாரதம்கன்ன பருவம்

136.- துச்சாதனனைக்கண்டு வீமன் சில கூறலுறல்.

உருத்தின்றரசரைவரையுமுடனேகொல்வனெனவெண்ணிக்
கருத்தின்படியேவிரைந்தோடுங்கவனப்புரவிக்காற்றேரிற்
செருத்திண்பணைகண்முழங்கவருசெங்கோன்மன்னற்கிளையோனை
மருத்தின்புதல்வன்கண்டுமழைமுகில்போலெதிர்வாய்மலர்ந்தானே.

     (இ - ள்,) உருத்து - கோபித்து, 'இன்று - இன்றைக்கு, அரசர்
ஐவரைஉம் -பஞ்சபாண்டவர்களையும், உடனே - விரைவிலே, கொல்வன் -
கொல்வேன்,' என -என்று, எண்ணி - நினைத்து, கருத்தின் படிஏ விரைந்து
ஓடும்-(தன்)எண்ணத்தின்படியே வேகமாயோடுகிற, கவனம் புரவி - கதிகளையுடைய
குதிரைகளைப் பூட்டிய, கால்-சக்கரங்களையுடைய, தேரில் - தேரின்மேல் (ஏறி),
செரு - திண் பணைகள் - போருக்குரிய வலிய வாச்சியங்கள் முழங்க-
பேரொலிசெய்யும்படி, வரு-வருகிற, செங்கோல் மன்னற்கு - நீதிதவறாத
அரசாட்சியையுடைய துரியோதனனுக்கு, இளையோனை - அடுத்த தம்பியாகிய
துச்சாதனனை, மருத்தின் புதல்வன் - வாயுகுமாரனான வீமன், கண்டு - நோக்கி,
மழை முகில் போல்-மழைபொழிகின்ற  மேகம் (இடிமுழங்குவது) போல, எதிர் -
எதிரில், வாய் மலர்ந்தான் - வாய் திறந்து (சிலவார்த்தைகளைச்) சொல்வானானான்;
(எ - று.)-அவற்றை மேல் மூன்று கவிகளிற் காண்க.

     கருத்தின்படி - மனோவேகமாக வென்றுமாம். கொடுங்கோன் மன்னனாகிய
துரியோதனனை 'செங்கோன்மன்னன்' என்றது, இகழ்ச்சி.                (227)

137.-மூன்றுகவிகள்-ஒருதொடர்:வீமன் துச்சாதனனையழிக்கப்
போவதாகவீரவாதங்கூறியதைத் தெரிவிக்கும்.

துச்சாதனனேயுனைப்போலுஞ்சூரருளரோசூரரெலா
மெச்சாநின்றார்வேத்தவையின்மேனாணீசெய்விறலாண்மை
யச்சாரிரதப்போர்க்குமுனக்கார்வேறெதிருண்டம்மவிரைந்
திச்சாபோகமாவிருந்தின்றோமறலிக்கிடுநாளே.

     (இ-ள்.) துச்சாதனனே-! அம்ம- கேட்பாயாக: உனைபோலும் சூரர் உளர்ஓ -
உன்னை யொக்கும் வீரர்கள் வேறு உண்டோ? மேல் நாள் - முற்காலத்தில்,
வேந்துஅவையில் - இராசசபையில், நீ-, செய்-செய்த, விறல் ஆண்மை -
வெற்றியோடுகூடிய பராக்கிரமத்தை, சூரர் எலாம் - வீரர்கள்யாவரும்,
மெச்சாநின்றார் -(இப்பொழுதுங்) கொண்டாடுகிறார்கள்; அச்சு ஆர் இரதம்
போர்க்குஉம் - இரிசுகள்பொருந்திய தேரின்மேல் ஏறிச்செய்கிற போரிலும்,
உனக்கு-, எதிர் - ஒப்பு, வேறுஆர் உண்டு-வேறே யாவர் இருக்கிறார்கள்?
விரைந்து - சீக்கிரமாக, இச்சா போகம்ஆக - இஷ்டப்படியே புசிக்கும்படி,
மறலிக்கு - யமனுக்கு, விருந்து இடும் நாள் -(உன்னை) விருந்துணவாக
அமைக்கிறநாள், இன்றோ - இன்றைக்குத்தானோ? (எ-று.)