அழகிய, துளபம் மாலை - திருத்துழாய்மாலையையுடைய, மாதவனை - இலக்குமிக்குக் கணவனும், வழிபடுமவர்க்கு - (தன்னை) வணங்கும் அடியார்களுக்கு, வான் துணையை - சிறந்த துணைவனுமாகிய கண்ணனை, தன் தடகண்ணோடு - தனது பெரிய கண்களும், இதயம் - மனமும், முத்து அரும்ப - ஆனந்தக்கண்ணீர்விட்டுப் புளகிக்கும்படி, தாள் இணை - (அவனது) உபயதிருவடிகள், முடி உற - (தன்) தலையின்மேற் பொருந்துமாறு, வணங்கி - நமஸ்கரித்து, 'இன்றை வேம் சமரில் - இன்றைக்குச்செய்யுங் கொடிய யுத்தத்தில், இரவி தன் சேய் - சூரியகுமாரனானகர்ணன், வான்எய்தும்ஓ - சுவர்க்கத்தை அடைவானோ? இயம்புதி - சொல்வாயாக,' என்றான் - என்று வினவினான்;(எ-று.) தன் அடியார்க்கு மற்றைத்துன்பங்களைப்போக்கி இன்பமளித்துத் துணைசெய்தல்மாத்திரமே யன்றிப் பிறவித்துன்பங்களையும் ஒழித்து வீட்டுலகத்துப் பேரின்பத்தையும் அருளுஞ் சிறப்புத்தோன்ற, 'வான்துணை' என்றார். கண் முத்தரும்புதல் - ஆனந்தத்தாற் கண்ணீர்துளித்தல். இதயம்முத்தரும்புதல் - ஆனந்தத்தால் மனஞ்சிலிர்த்தல். (97) 7.- ஸ்ரீகிருஷ்ணன், கர்ணசுயோதனரின் இறுதிநாள்களைத் தெரிவித்தல். இத்தினமிரவிசிறுவனும்விசயனேவினாலிறந்திடுநாளைத் தத்தினபுரவித்தேர்ச்சுயோதனனுஞ்சமீரணன்றனயனான்மடியும் அத்தினபுரியுமீரிருகடல்சூழவனியுநின்னவாமென்றான் சித்தினதுருவாயகண்டமுந்தானாஞ்செய்யகட்கருணையந்திருமால், |
(இ-ள்.) சித்தினது உரு ஆய் - ஞானசொரூபியாய், அகண்டஉம் தான் ஆம் -எல்லாப்பொருள்களுந் தானாகிய, செய்ய கண் - சிவந்த திருக்கண்களையும், கருணை - திருவருளையும், அம் - அழகையுமுடைய, திரு மால் - இலக்கமிக்குநாயகனான கண்ணன், 'இ தினம் - இன்றைக்கு, இரவி சிறுவன்உம் - சூரியகுமாரனும், விசயன் ஏவினால் - அருச்சுனன் பாணங்களால், இறந்திடும் - இறப்பான்; நாளை - நாளைக்கு, தத்தின புரவி - பாய்கிற குதிரைகளைப் பூட்டிய, தேர் - தேரையுடைய , சுயோதனன்உம் - துரியோதனனும், சமீரணன் தனயனால் - வாயுகுமாரனான வீமனால், மடியும் - இறப்பான்; (பின்பு), அத்தினபுரியும்-, ஈர் இரு கடல்சூழ் அவனிஉம் - நான்கு திக்குக்களிலுள்ள கடல்களாற் சூழப்பட்ட பூமிமுழுவதும், நின்ன ஆம் - உன்னுடையவையேயாய்விடும்,' என்றான் - என்று உத்தரஞ் சொல்லினான்; (எ -று.) (சந்திரகுலத்துத்தோன்றிய) ஹஸ்தி என்னும் அரசனால் உண்டாக்கப்பட்டமை பற்றியும், யானைகளை மிகுதியாக உடைமைபற்றியும், இவர்கள் இராஜதானிக்கு 'ஹஸ்திநாபுரீ' என்று பெயர். (98) 8.- எட்டுக்கவிகள் - யுதிஷ்டிரன் ஸ்ரீகிருஷ்ணன் செயலைப் பாராட்டுதலை்க்கூறும். செங்கண்மாலுரைத்தவின்சொலாரமுதஞ் செவிப்படச்சிந்தனை தெளிவுற, றெங்கண்மானமுந்தொல்லாண்மையும்புகழும் நீயலால்யார் |
|