தேவேந்திரனது ஐராவதயானைபோல, களி ஊறியது - மதக்களிப்புப் பொருந்தியது; அங்குலம் ஒத்து - (உத்தம கஜலக்ஷணத்தின் படி) அங்குலங்கள் அமைந்து, குலவிய- விளங்குகின்ற, மத்தகம் - தலையானது, ஒத்த கழுத்தில் - (அதற்குத்) தக்ககழுத்தில், அம் பொன் குவடுஎன்ன - அழகிய பொன்மயமான (மேருமலையின்)சிகரம் போல, உயர்ந்தது - உயர்ந்திருக்கப்பெற்றது; (எ - று.) ஆலவட்டம் - தாலவ்ருந்தமென்பதன் சிதைவு. ஆல் ஈற்றசை. பி - ம்: அவனிது. (8) 9. | உரத்தினின்முச்சுழியுடையதுதாள்வலிகற்றூணொப்பென்றுரை செய்யுந், தரத்ததுவெண்ணெய்நிறத்தநகத்ததுதண்ணந்துளவனிலை யொத்த, திரத்தினதாமைகிடந்தவெனும்புறவடியதங்கந்திண்ணென்றே, யுரத்ததுநல்லுதரத்ததிளங்கமுகொத்ததம்மவாலதி. |
(இ-ள்.) உரத்தினில் - மார்பில், முச்சுழி உடையது - (உத்தம இலக்கணமாகிய)மூன்று சுழிகளையுடையது; தாள் - கால்கள், வலி - வலிமையினால் , கல் தூண்ஒப்பு என்று - கற்கம்பத்துக்கு ஒப்பானவை யென்று, உரை செய்யும்-சொல்லத்தக்க,தரத்தது - தன்மையையுடையது; வெண்ணெய் நிறத்த - வெண்ணெய் போலும்வெண்ணிறத்தையுடைய, நகத்தது - நகங்களையுடையது; தண் அம்துளவன் -குளிர்ந்த அழகிய திருத்துழாய்மாலையையுடைய திருமாலினது, நிலை - வடிவத்தை,ஒத்த - போன்ற, திரத்தினது - (கருநிறத்) தன்மையையுடையது; ஆமைகிடந்தஎனும் - ஆமைகள் கீழே கிடந்தன வெனத்தக்க, புறம் அடியது -புறங்கால்களையுடையது; அங்கம் திண்ணென்று உரத்தது - உடம்பு திண்ணென்றுவலிமையையுடையது; நல்உதரத்தது - அழகிய வயிற்றையுடையது; வாலதி - வால்,இளங் கமுகுஒத்தது - இளமையான பாக்குமரத்தை ஒத்திருக்கப்பெற்றது; (எ-று.)- அம்ம - அசை; சிறப்புப் பற்றிய வியப்பிடைச்சொல்லுமாம். (9) 10. | தூணும்விலங்குமுறிப்பதுபாகுபரிக்கோல்யாவுந்தூரத்தே, காணினும்நின்றுகொதிப்பதுதன்னிழல்கண்டுசீறுங்கருத்தது, நீணடமுதலியதொழிலொருநாலுநிரந்ததுமேருநிகரென்னச், சேணுயர்போதரவெகுமுழமுடையதுதெவ்வரஞ்சுமவ்வேழம். |
(இ-ள்.) தூண்உம் விலங்குஉம் முறிப்பது - கட்டுத்தறியை ஒடித்து (க் கட்டிய)இருப்புச்சங்கிலியை அறுத்துவிடத்தக்கது; பாகு - பாகனும், பரிக்கோல் - அங்குசமும்(முதலிய), யாஉம்-எல்லாவற்றையும், தூரத்து காணின்உம் - வெகுதூரத்திற்கண்டாலும், நின்று - (அஞ்சாமல்) நின்று, கொதிப்பது - மனம்வெதும்புந்தன்மையையுடையது; தன் நிழல் கண்டு - தனதுநிழலைப் பார்த்து,சீறும் - (வேறொருயானை யென்றெண்ணிக்) கோபிக்கின்ற, கருத்தது - எண்ணமுடையது; நீள் - நீண்ட [மேன்மையான], நடம் முதலிய - நடனம் முதலான,தொழில் ஒருநால்உம் - நான்குதொழில்களும், நிரந்தது - நிரம்பப் பெற்றது; மேருநிகர் என்ன - மகாமேருமலைக்குச் சமமென்னும்படி, சேண் உயர் போதர - |