பக்கம் எண் :

பதினாறாம் போர்ச்சருக்கம்7

மிக்க உயர்ச்சி பெற, எழு முழம் உடையது - ஏழுமுழம் உயரமுடையது;
தெவ்வர்அஞ்சும் - பகைவர்கள் (கண்டு) அஞ்சும்படியான, அ வேழம் - அந்த
(வீமனேறிய)யானை; (எ -று.)-தொழில்நான்கு- நடனம், துரிதகதி, மந்தகதி, ஓட்டம்
என்பன. பி -ம்: நிரந்த. நீணடை முதலிய தொழில்களி யாவு நிரம்பி, சேணுயர்
பேரளவுடையதிறத்தது.                                         (10)

11.- மூன்றுகவிகள் - வீமனும் கேமதூர்த்தியும்
யானைமீதிருந்து பொருதலைக் கூறும்.

ஆசில ருந்திற லாசுகன் மைந்தனு மாண்மைக் கெண்ணு
                                   மடல் வீரன்,
காசிந ரேசனு மேழுயர் வெம்மத மாரி சிந்துங்
                                  கரிமேலோர்,
தூசியின் முந்தமுனைந்துமு னைந்திரு தோலுந் தோலும்
                                  போர்செய்ய,
வாசவ ரோரிரு வோரிருகாரிமிசை மலைவ தென்ன
                                 மலைவுற்றார்.

     (இ-ள்.) ஆசு இல் - குற்றம் இல்லாத, அருந் திறல் - அருமையான
வலிமையையுடைய, ஆசுகன் மைந்தன்உம் - வாயுகுமாரனான வீமனும்,
ஆண்மைக்கு எண்ணும் - பராக்கிரமத்தில் மதிக்கப்படுகின்ற, அடல் வீரன் -
வலியவீரத்தன்மையுடையவனாகிய, காசிநரேசன்உம் - காசீநகரத்தரசனான
கேமதூர்த்தியும்,- ஏழ் உயர் வெம் மதம் மாரி சிந்தும் கரி மேலோர் - ஏழுமுழம்
உயர்ந்ததும் வெவ்விய மதநீர்மழையைச் சொரிகின்றதுமான (தம்தம்)
யானையின்மேலேறியவர்களாய்,- தூசியின் - முற்சேனையிலே, முந்த - முன்னே,
முனைந்து - விரைந்துசென்று, இருதோல்உம் தோல்உம் - (தங்கள்)
யானைகளிரண்டும், முனைந்து - கோபங்கொண்டு, போர் வெய்ய-
(ஒன்றோடொன்று) யுத்தஞ்செய்யாநிற்க,- வாசவர் ஓர் இருவோர் - இரண்டு
இந்திரர்,இரு கார்மிசை- (தம்வாகனமாகிய) மேகம் இரண்டன்மேல் (ஏறிக்கொண்டு),
மலைவதுஎன்ன - (தம்மிற்) போர் செய்துபோல, மலைவு உற்றார்-
(ஒருவரோடொருவர்),போர்செய்யத் தொடங்கினர்; (எ-று.)

     இந்திரர் - வீமசேனனுக்கும் கேமதூர்த்திக்கும், இந்திரனுக்கு வாகனமாகிய
மேகம் - அவரேறிய கரியயானைக்கும் உவமை. வாசவரிருவர் தம்மில்மலைதல்,
இல்பொருளுவமை. திறலுக்கு ஆசு - தோல்வி. ஏழ் - ஏழுமுழத்துக்கு
எண்ணலளவையாகுபேயர். பி -ம்: ஏழுயரேழ் மதமாரி.              (11)

வேறு.

12. அங்குசம் வார்த்தை வன்றா ளடைவினிற் பயிற்றியேனை
வெங்கதி நடையோ டோட்டம் விதமுற விரைவிற் காட்டி
யங்கசா ரியினா னன்னூ லறிஞர்கொண் டாட வூர்ந்து
செங்கையிற் சிலையுங் கோலித் தீவிழித் துடன்று சேர்ந்தார்.

     (இ - ள்.) (அவ்விருவரும்),- அங்குசம் - மாவெட்டியும், வார்த்தை -
வாய்ச்சொல்லும், வல் தாள் - வலிய கால்வைப்புக்களும் (ஆகிய இவற்றால்),
அடைவினில் பயிற்றி - முறைப்படி பழக்கி,- ஏனை - பின்னும், வெம் கதி -
துரிதமானநடையையும், நடையோடு -