பக்கம் எண் :

பதினேழாம் போர்ச்சருக்கம்73

38.ஒருவரையொருவரொவ்வாவுரனுடைவீரர்நீங்கள்
இருவரும்பொரும்போர்தோறும்யாங்களும்பாங்காய்நின்றோம்
வெருவரன்மறந்துமில்லாவிசயனையொருபோதத்துந்
திருவரும்வண்மையோய்நீ செயித்திடக்கண்டிலேமால்.

     (இ-ள்.) திரு வரும் வண்மைபோய் - செல்வம் பொருந்திய
தானத்தையுடையவனே! ஒருவரை ஒருவர் ஒவ்வா - ஒருத்தரை யொருத்தர்
ஒத்திராத, உரன் உடை - வலிமையையுடைய, வீரர் - வீரர்களாகிய, நீங்கள்
இருவரும்,-, பொரும் போர் தோறுஉம் - போர் செய்யும்பொழுதெல்லாம்,
யாங்கள்உம்-, பாங்கு ஆய்நின்றோம் - பக்கத்திற் பொருந்தியிருந்தோம்:
வெகுவரல்மறந்துஉம் இல்லா - மறந்துஉம் இல்லா - மறந்தும் அஞ்சுதலில்லாத,
விசயனை - அருச்சுனனை,  ஒருபோதத்துஉம் - ஒருபொழுதிலும், நீ -,
செயித்திட - வெல்ல,கண்டிலேம் - பார்த்தோமில்லை; (எ -று.)

     முதலடி - இருவருஞ் சிறந்தவீர ரென்னும் பொருளோடு, அருச்சுனனுக்குக்
கன்னன் ஒப்பாகானென்னுங் கருத்துந் தோன்ற நின்றது.               (129)

39.வயிர்த்திருவோருஞ்சொன்னவஞ்சினமுடிக்குமாறு
செயிர்த்திடுமிற்றைப்பூசறெரியுமோதெரிந்ததில்லை
அயிர்த்தனமென்றுதேரூராண்டகையுரைப்பநீட
வுயிர்தனனாகிமீளவுத்தரமுரைக்கலுற்றான்.

     (இ-ள்.)இருவோர்உம் -(நீங்கள்) இருவரும், வயிர்த்து - விரோதங்
கொண்டு,சொன்ன-, வஞ்சினம் - சபதத்தை, முடிக்கும் ஆறு - நிறைவேற்றும்படி,
செயிர்த்திடும் - கோபித்துச்செய்யப் போகிற. இற்றை பூசல் -
இன்றைப்போரின்முடிவு, தெரியும்ஓ -(இப்பொழுது) அறியப்படுமோ? தெரிந்தது
இல்லை-; அயிர்த்தனம் - சந்தேகித்தோம், என்று -, தேர் ஊர் ஆண்தகை -
தேரோட்டுகிற ஆண்மைக்குணமுடைய சல்லியன், உரைப்ப - சொல்ல, (கன்னன்),
நீட உயிர்த்தனன் ஆகி -(கோபத்தால்) மிகப் பெருமூச்சுவிட்டவனாய், மீள -
திரும்பவும், உத்தரம் உரைக்கல்உற்றான் - மறுமொழி சொல்லத்தொடங்கினான்;
(எ -று.)- அது மேற்கவியிற் காண்க.

     பாண்டவருங் கௌரவருங் கிருபரிடத்துந் துரோணனிடத்துந் தாம் தாம்
கற்றபடைத்தொழிலைப் பலபெரியோர் முன்னிலையில் அரங்கேற்றுகிற பொழுது,
கன்னன்எழுந்து தன்திறமையைக்காட்டி, அருச்சுனனைப் போருக்கு அழைக்க,
அவன்'அரசகுமாரனாகிய எனக்குத் தேர்ப்பாகனது அபிமானபுத்திரனாகிய
உன்னோடுபோர்செய்தல் பொருந்தாது' என்று தோன்றுமாறுசொல்ல, அப்பொழுது
கன்னன்மிகக்கோபித்து 'என்னைப்பழுதுசொன்ன உன்முகத்தைக் கொய்து
அரங்கபூசைசெய்கிறேன்' என்று சபதஞ்செய்தான்; திரௌபதியைத் துகிலுரிந்த
காலத்துஅருச்சுனன் 'யான் கர்ணனைக் கொல்வேன்' என்று சபதஞ்செய்தான். (130)