பக்கம் எண் :

88பாரதம்கன்ன பருவம்

அம்மகதரர்சனது உயிரைக் கவர்ந்து கொண்டு [அவனைக் கொன்று], திருகினன் -
மீண்டான்; (எ -று.)

     சேரநாட்டுக்கு வஞ்சியும், பாண்டியநாட்டுக்கு மதுரையும், சோழ நாட்டுக்குப்
புகாரும் இராசதானி யென்க. இத்தமிழ்நாடு மூன்றும் முன் ஒருகாலத்துச்
சோழனாளுகைக்கு உட்பட்டிருந்தனபோலும். நேரியன் - நேரியென்னும்
மலையையுடையவன்.                                            (158)

68.- சோழன் சிறப்பு.

அண்டர் குலபதி யாம்விடை வாகன னம்பொ னடிமலர்
                                 நாறிடு சேகர,
னெண்டி சையுமனு நீதிசெய் கோலின னெங்கு மொருகுடை
                               யாலிடு நீழலன்,
மண்டு கிரணசி காமனி மோலியன் வண்டு மதுநுகர் தாதகி
                                   மாலையன்,
மிண்டுமுதுபுலி யேறுப தாகையன் வென்றி வளவனை
                              யார்நிகர் வீரரே.

     (இ-ள்.) அண்டர்குல பதி ஆம் - தேவர்கூட்டத்துக்குத் தலைவனாகிய,
விடைவாகனன் - விருஷபத்தை வாகனமாகவுடைய பரமசிவனது, அம் பொன்
அடி மலர்- அழகிய பொன்போல அரிய திரு வடித்தாமரை மலர்கள், நாறிடு -
மணக்கப்பெற்ற, சேகரன் - முடியை யுடையவனும், எண்திசைஉம் -
எட்டுத்திக்குகளிலும், மனு நீதி செய் - மநுதரும சாஸ்திர நீதியின்படி நடத்துகின்ற,
கோலினன் - செங்கோலையுடையவனும், எங்குஉம் - எவ்விடத்திலும், ஒரு
குடையால் - ஒற்றைக்குடையினால், இடும் - செய்கிற, நீழலன - நிழலை
யுடையவனும், மண்டு கிரணம் - மிகுந்த  ஒளியையுடைய சிகாமணி -
முடியிலணியும்மணியையணிந்த, மோலியன் - தலையையுடையவனும், வண்டுமது
நுகர் - வண்டுகள்தேனுண்ணப்பெற்ற, தாதகி மாலையன் -
ஆத்திப்பூமாலையையுடையவனும், மிண்டு முது புலி ஏறு - வலி மிகுந்த, வென்றி
புலிபொருந்திய, பதாகையன் - கொடியை யுடையவனுமாகிய, வென்றி வளவனை -
வெற்றியையுடைய சோழனை, நிகர்வீரர் - ஒக்கின்ற வீரர், யார் -? (எ -று.)

     பரமசிவனது திருவடிகளில் தன்முடிபடும்படி காலந்தோறுஞ் சாஷ்டாங்கமாக
விழுந்து தண்டனிடுபவ னென்பது, முதலடிக்குக் கருத்து. இனி, முதலடிக்கு
அண்டர்குலபதி ஆம் - இந்திரனாகிய, விடை - இடபத்தை, வாகனன் -
வாகனமாகக் கொண்டவன் எனினுமாம். சூரியவமிசத்தரசனொருவனுக்குத்
தேவேந்திரன் விடப வாகனமாகி யிருந்தானென்பது கதை; அவ்வரசன்பெயர்
ககுத்ஸ்த னென்பது. அம் பொன் - அழகியமாற்றரசர் பொன்முடியிலேயுள்ள,
மலர் -, அடியில் நாறுகின்ற, சேகரன் - குலசேகர னெனினுமாம். பி - ம்:
அன்பொன்முடிமலர் நாறிடுதாளினன்.                               (159)

வேறு.

69.- மாகதன் விழவே, சேனை முதுகிடல்.

யாதேவ லென்று பலமன் னருமீண்ட விப்பார்
மீதேவல் கொள்ளும் விறற்சென் னிகைவில்லின் வன்பான்
மோதேவு பட்டு முகமா றிமகதர் கோமான்
சாதேவன் வீழ முதுகிட் டதுதானை வெள்ளம்.