(இ - ள்.) பல மன்னர்உம் - பலதேசத்து அரசர்களும், யாது ஏவல் என்று - (எங்களுக்குக் கட்டளையிடுங்) குற்றேவல் என்ன வென்று வினவி, ஆண்ட - திரளும்படி, இ பார்மீது - இந்தப்பூமியில், ஏவல் கொள்ளும் - ஆணை செலுத்துகிற, விறல் - வெற்றியையுடைய, சென்னி - சோழனது, கை வில்லின் - கையிற்பிடித்த வில்லினது, வன்பால் - வலிமையால், மோது - எய்யப்பட்ட, ஏவு - அம்பு, பட்டு - தைத்தலினால், மகதர் கோமான் சாதேவன் - மகததேசத்தார்க்கு அரசனாகிய சகதேவனென்பவன், முகம் மாறி - தலை துணிக்கப்பட்டு, வீழ - கீழேவிழ, தானை வெள்ளம் - (துரியோதனாதியரின்) சேனைக்கூட்டம், முதுகிட்டது - புறங்கொடுத்தது; (எ -று.) எல்லார்க்குந்தலைவனாதலால், சென்னியென்றுபெயர்போலும்; சென்னி தலை சாதேவன் - வடசொற்றிரிபு; இவன், சராசந்தன்மகன். இதுமுதற் பதினாறு கவிகள் - பெரும்பாலும் வெண்டளை பெற்ற ஐஞ்சீரால் வந்த கொச்சகக்கலிப்பாக்கள். (160) 70.- இதுவும் மேலைக்கவியும்- ஒரு தொடர்: அருச்சுனன் கனன்று பொருது அசுவத்தாமனைவென்று பதாதியாக்கிப்போக்கல். புறமிட்டதானைநிலைகண்டுபொறாதுசோதி நிறமிட்டவிற்கைத்துரோணன்மகனெஞ்சுகன்றி மறமிட்டவாளிபலதூவிவருதனோக்கி யறமிட்டசிந்தையரசன்றனனுசர்தம்மில். |
(இ - ள்.) புறம் இட்ட - முதுகுகொடுத்த, தானை - (தமது) சேனையின், நிலைகண்டு - நிலைமையைப்பார்த்து, சோதி நிறம் இட்ட - ஒளியின் தன்மை பொருந்திய,வில் - வில்லேந்திய, கை - கையையுடைய, துரோணன் மகன் - அசுவத்தாமன்,பொறாது - பொறுக்காமல், நெஞ்சு கன்றி - மனம் வெதும்பி, மறம் இட்ட -வலிமைபொருந்திய, வாளி பல - பல அம்புகளை, தூவி வருதல் - சிந்திவருதலை,நோக்கி - பார்த்து,- அறம் இட்ட சிந்தை- தருமம் பொருந்திய மனத்தையுடைய,அரசன்தன் - யுதிட்டிரனது, அனுசர்தம்மில் - தம்பிமார்களுள்,- (எ -று.)- "நிற்பான்" என மேற்கவியோடு இயையும். (161) 71. | இன்றேமுடிப்பன்வினையென்றிரண்டிந்திரநீலக் குன்றேநிகர்ப்பத்திருமாலொடுங்கூடிநிற்பான் சென்றேயதிரப்பரித்தாமனைச்செங்கையம்பால் வென்றேயிமைப்பின்வெறுங்காலினின்மீளவிட்டான். |
(இ - ள்.) 'இன்றே - இன்றைக்கே, வினை - போர்த்தொழிலை, முடிப்பன் - முடிப்பேன்', என்று - என்று எண்ணி, இரண்டு இந்திரநீலம் குன்றுஏ நிகர்ப்ப - இந்திரநீலரத்தினமயமான இரண்டுமலைகளையே ஒக்கும்படி, திருமாலொடுஉம் கூடிநிற்பான் - கண்ணனுடன் கூடி நிற்பவனாகிய அருச்சுனன்,- அதிர - ஆரவாரமுண்டாகும்படி, |