போருக்குஅஞ்சிப் பாதத்தில் விழுதல் அரசர்க்குப்பெரும்பழிப்பாதலால் நீவெளிப்பட்டு வந்து என்னோடு போர்செய்து பழிப்புக்கிடமின்றி வீரசுவர்க்கம்பெறுவாயென்றான். நிலவுலகத்து அரசாட்சியையிழந்து ஒழிந்துவிடுகிறோமேயென்று கலங்காதே; இதனினுஞ் சிறந்த விண்ணுலகத்திற் செலுத்துவேனென்பான், 'கலங்கல்' என்றான்: இது, செருக்குமொழி. அரமகளிர்கைப்பிடிக்க - தேவமாதர்களை அங்கு நீ மணஞ்செய்துகொள்ள என்றபடி. விவாக காலத்தில் கணவன் தனதுவலக்கையால் மனைவியின் இடக்கையைப்பிடித்தல் மரபு; அதனால், விவாகத்துக்கு, 'பாணிக்கிரகணம்' என்று ஒருபெயர் வழங்கும். இனி, 'கைபிடிக்க' என்றும் பாடமுண்டு. தேவமாதர்கள் வேட்கைமிகுதியோடு வந்து உன்கையை வலியப்பற்ற வென்று உரைத்தலுமொன்று. கற்பகநீழலில் வைப்பன் - வீரசுவர்க்கத்திற் செலுத்துவேன் என்றபடி. கற்பகம் - வேண்டுவார்க்கு வேண்டினவற்றைக் கற்பித்தலால், வந்த பெயர்: கல்பித்தல் - உண்டாக்கிக் கொடுத்தல். சந்தாநம்,பாரிஜாதம், மந்தாரம், கல்பகம், அரிசந்தநமெனக் கற்பகவிருட்சம் ஐந்தாம். தேவலோகத்தில் கற்பகவிருட்சத்தின் நிழல் இந்திரன் அரசாட்சிசெய்யுமிடமாதலை "கற்பக நறுந்தேனிடைதுளிக்கு நிழலிருக்கை" என்ற கம்பராமாயணத்தாலும் அறிக. அரமகளிர் - அமரமகளிர், அல்லது அரம்பைமகளிர் என்பதன் விகாரம். காதம் - இங்கு, நெடுந்தூரமென்றபடி. ஓதம்- வெள்ளமுமாம். பசுமையையுங் கருமையையும் சிறிது வேறுபாடுகருதாதுஅபேதமாகக்கூறுதல் கவிசமயமாதலால், கருங்கடல் பைங்கடலெனப்பட்டது: இனி, பசுமை குளிர்ச்சியுமாம். உறு - உரிச்சொல். "அம்ம கேட்பிக்கும்" என்ற தொல்காப்பியத்தின்படி யான் கூறுகின்றதனைக் கேளென்று பொருள்பட்டு உரையசையாய் நிற்கும். (134) 135. | களந்தனிலெத்தனைகவந்தங்கண்களிக்கக்கண்டனைநீ கைத்தண்டோடிக், குளந்தனிலிக்கவந்த முங்கண்டேகுதற்குப்புகுந்தனையோ கொற்றவேந்தே, வளந்தனிலிக்கோபமுமென்வஞ்சினமும் போகாது வந்துன்பாவி, உளந்தனிலிக்கவலையைவிட்டுடற்றுதலல்லது மற்றோருறுதியுண்டோ. |
(இ -ள்.) கொற்றம் வேந்தே - வெற்றியையுடைய அரசனே! களந்தனில் - போர்க்களத்தில், எத்தனை கவந்தம் - எத்தனை கவந்தங்களை [தலையற்ற உடற்குறைகளை], நீ -, கண் களிக்க கண்டனை - கண்களிக்கப்பார்த்தாய்: இ குளந்தனில் - இக்குளத்திலேயுள்ள, இ கவந்தமும் - இந்தக் கவந்தத்தையும் [நீரையும்], கண்டு ஏகுதற்கு - பார்த்துச்செல்லுதற்கு, கை தண்டோடு புகுந்தனைஓ - கையிலுள்ள கதாயுதத்தோடு இதனுட் பிரவேசித்தாயோ? வளந்தனில் - மிகுதியாகவுள்ள, இ கோபமும் - இந்த (எனது) கோபமும், என்வஞ்சினமும் - எனது சபதமும், போகாது - வீண்போகாது: உன் - உனது ,பாவி உளந்தனில் - தீவினைக்கிடமான மனத்திலுள்ள, இ கவலையை -இந்தக்கவலையை, விட்டு - ஒழித்து, (நீ), வந்து - வெளிப்பட்டு வந்து, |