அக்குளத்தினின்று வெளியெழுந்ததற்கு, காளமேகம் கடலினின்று வெளியெழுதலை உவமை கூறினார். உவமையணி. மெய்ச்சுருதி மறை - பயன்தவறாத வேதமந்திர மென்க. இங்கே அண்டகோளமென்றது, உலக வுருண்டையின் மேலிடத்தை, உரகம் - (காலின்றி) மார்பினாற் செல்வதென்று காரணப் பொருள்படும்; உரஸ் - மார்பு. () 140-இதுமுதல் நான்குகவிகள் -ஒருதொடர்: இப்பொழுது போர்செய்யும்விதம் எப்படியென்று துரியோதனன் வினாவுதலும், கண்ணன் மறுமொழி கூறுதலும். தோன்றி நெடுங்கரையேறிக்கரைமுழுதுநெருக்கமுறச் சூழ்ந்துநின்ற, தேன்றிகழ்தா ரைவரையுஞ் செந்திருமாலையு நோக்கிச் சேனையோடு, மான்றிகழ்தேர் முதலான வாகனங்களொடு நின்றீர் வலிகூரென்கை, ஊன்றிய தண்டுடனின்றேனொருதமியே னெப்படியே யுடற்றுமாறே. |
(இ -ள்.) (துரியோதனன்), தோன்றி - (நீரினின்று) வெளித்தோன்றி, நெடுகரை ஏறி - பெரிய அக்குளத்தின்கரைமேல் ஏறி, கரை முழுதும் நெருக்கம்உற சூழ்ந்து நின்ற - அந்தக் கரைமுழுவதிலும் நெருக்கமாகச் சூழ்ந்து நின்ற,தேன் திகழ் தார் ஐவரையும் - தேன்விளங்கும் மாலையையுடைய பஞ்சபாண்டவரையும், செம் திருமாலையும் - செந்நிறமுடைய திருமகளிடத்துஆசைப் பெருக்கமுடையவனான கண்ணபிரானையும், நோக்கி - பார்த்து,-(நீங்கள்), சேனையோடும் - சேனைகளுடனும், மான் திகழ் தேர் முதலானவாகனங்களொடும் - குதிரைகள் விளங்கப்பெற்ற தேர் முதலியவாகனங்களுடன், நின்றீர் - நின்றுள்ளீர்; ஒரு தமியேன் - (வேறுதுணையில்லாத) தனிப்பட்ட யானொருவனே,-வலி கூர் - வலிமை மிக்க, என்கை ஊன்றிய தண்டுடன்- எனது கையிற்கொண்ட கதையுடனே, நின்றேன் -நின்றுள்ளேன்; உடற்றும் ஆறு எப்படி - (இப்பொழுது நாம்)போர்செய்யவேண்டும் விதம் எவ்வாறு? (எ - று.) பலவகைவாகனங்களுடனும் பலவகைச் சேனையுடனும் பலவகையாயுதங்களுடனும் பலராய்த் திரண்டுநின்ற உங்களோடுவாகன மொன்றுமின்றித் துணை யாவருமின்றி வேறுபடைக்கலமு மின்றிக் கதாயுதமொன்றோடு தனியே நிற்கும் நான் போர் செய்யவேண்டும் வகை எப்படி? என்று வினாவின னென்க. இக்கவியில் 'நோக்கி' என்பது, அடுத்தகவியில் 'என' என்பதைக் கொண்டு முடிந்து, குளகமாம். (140) 141. | ஐவரினுமிப்பொழுதிங்காரென்னோடமர்மலைவாரறுகான் மொய்க்குங், கொய்வருதார்ப்புயவீரர்கூறுமெனத் திருநெடுமால் கூறலுற்றான், செய்வருசேலிளம்பூகமடலொடிக்குந் திருநாடாசெருச் செய்வானிம், மெய்வருசொற்றவறாதவீமசேனனை யொழிந்தால் வேறுமுண்டோ. |
|