(இ -ள்.) 'ஐவரினும் - பாண்டவர் ஐந்துபேருள்ளும், இப்பொழுது-, இங்கு - இவ்விடத்தில், என்னோடு அமர் மலைவார் - என்னுடன் போர் செய்பவர், ஆர் - எவர்? அறுகால் மொய்க்கும் - வண்டுகள் மொய்க்கின்ற, கொய்வரு தார்-மலர்களைப் பறித்துவந்து தொடுத்ததனாலாகிய (போர்) மாலையைத் தரித்த, புயம் - தோள்களையுடைய, வீரர் - வீரர்களே! கூறும் - சொல்வீராக', என - என்று (துரியோதனன்) வினாவ,-திரு நெடு மால் - சிறந்தபெரிய கண்ணபிரான், கூறல் உற்றான் - (அதற்குவிடை) கூறத்தொடங்கினான்;(எங்ஙனமெனில்) - செய் வரு - கழனிகளிற் பொருந்திய, சேல் - சேல்மீன்கள்,இளம் பூகம் மடல் ஒடிக்கும் - இளம் பாக்குமரங்களின் பாளைகளை (த்தாம்துள்ளி யெழுந்து பாய்தலால்) ஒடிக்கிற, திரு நாடா - அழகிய குருநாட்டையுடையவனே! செரு செய்வான் - (உன்னோடு) போர்செய்வதற்கு உரியவன்,மெய்வரு சொல் தவறாத - உண்மைமொழியில் தவறுதலில்லாத, இவீமசேனனை ஒழிந்தால் - இந்த வீமசேனனையன்றி, வேறும் உண்டோ -மற்றுமொருவன் உளனோ? [இல்லையென்றபடி]: (எ - று.) ஒருதொடராகிய நான்கு கவிகளில், கீழ்க்கவியும், இக்கவியின் முன்னிரண்டடியும் - துரியோதனன் வினா வென்றும், இக்கவியின் பின்னிரண்டடியும் அடுத்த இரண்டுகவிகளும் - கண்ணபிரான் விடையென்றுங்காண்க. 'நானேஉன்னைக் கொல்வேன்' என்று சபதஞ்செய்துள்ள வீமன் தானேஅச்சபதத்தை நிறைவேற்றும்பொருட்டு இப்பொழுது உன்னோடு போர் செய்வானென்றான். கழனியை 'செய்' என்பது - அருவாநாட்டில் வழங்குந் திசைச்சொல். நீர்வளமிகுதியால் கழனிகளிலுள்ள மீன்கள் அந்நீர்ச் செழுமையாலாகிய கொழுமையால் துள்ளி நெடுந்தூரந்தாவிப் பாக்குமரத்தின் மடலை ஒடிக்கின்றனவென நாட்டுவளத்தை வருணித்தார். (141) 142. | இளம்பருவமுதலுனக்குமிவனுக்கும்வயிர்ப்பெண்ணி லெண்ணொணாதால், உளம்புகலவரசவையில்வஞ்சினமும்பற்பலவன்றுரைத்தே நின்றான், களம்புகுதுநின்னொழிந்ததுணைவரையுந்தனதுதடக்கையாற் கொன்றான், விளம்புவதோவேறொருவர்நின்னுடன்போர்மலைவரோவேந்தர் வேந்தே. |
(இ -ள்.) வேந்தர் வேந்தே - அரசர்க்கு அரசனே! இள பருவம் முதல்- இளமைப்பிராயம் முதலாக, உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு - உனக்கும்இவனுக்கும்உள்ள வயிரச்செயல், எண்ணில் - ஆலோசிக்குமிடத்து, எண்ஒணாது - கணக்கிட முடியாததாம்;(அன்றியும்) அன்று - திரௌபதியை மானபங்கஞ் செய்யக்கருதிய அக்காலத்து, உளம்புகல-மனம் ஊக்கந்தூண்ட, அரசு அவையில் - இராச சபையில், பற்பலவஞ்சினமும் - பலவான சபதங்களையும், உரைத்தே நின்றான் - கூறி நின்றான்; (மேலும்), களம் புகுதும்- போர்க்களத்துக்கு வந்த, நின் ஒழிந்த துணைவரைஉம் - நின்னையொருவனை யொழிய மற்றுமுள்ள (உனது) தம்பிமா ரெல்லோரையும், தனது தட கையால் - |