வேறு. 144.-வீமனை நோக்கித்துரியோதனன் 'எந்த ஆயுதத்தாற் போர்செய்யவேண்டும்?' என்றல். கொண்டனிகர் திருமேனிக்கோபால னிவையுரைப்ப வண்டுபடி வலம்புரித்தார்வயவேந்தன் மனங்களித்துத் திண்டிறல்வீ மனைநோக்கிச்சிலைமுதலாம் படைகொண்டோ தண்டெனுநின் படைகொண்டோசமர்விளைப்பாய் சாற்றென்றான். |
(இ -ள்.) கொண்டல்-நீர்கொண்ட காளமேகத்தை, நிகர்-போன்ற, திருமேனி - திருவடிவத்தையுடைய, கோபாலன் - கண்ணபிரான், இவை உரைப்ப -இவ்வார்த்தைகளைச் சொல்ல,-வண்டு படி - வண்டுகள் படிந்து மொய்க்கிற,வலம்புரி தார் - நஞ்சாவட்டை மலர்மாலையையுடைய, வயவேந்தன் -வலிமையுள்ள துரியோதனராசன், மனம் களித்து - மனத்தில் உற்சாகங்கொண்டு, திண் திறல் வீமனை நோக்கி, மிக்கவல்லமையுடைய வீமனைப்பார்த்து, 'சிலை முதல் ஆம் படை கொண்டோ - வில்முதலான ஆயுதங்களினாலோ, தண்டு எனும் நின் படை கொண்டோ - உனக்குரிய கதையென்னும் ஆயுதத்தினாலோ, சமர்விளைப்பாய் - (இப்பொழுது) போர் செய்வாய்? சாற்று - சொல்,' என்றான் - என்று வினவினான்; (எ - று.) திண்திறல் - ஒருபொருட்பன்மொழி, வீமன் எல்லாவாயுதங்களினும் கதாயுதத்தில் மிகப்பயின்றவனாதலால், 'தண்டெனும் நின் படைகொண்டு' என்றான். இதுமுதல் இருபத்திரண்டுகவிகள் - பெரும்பாலும் நாற்சீர்களும் காய்ச்சீர்களாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்; இவற்றை நாற்சீர் நாலடித்தரவு கொச்சகமென்றலு மொன்று. (144) 145.-வீமன் கதாயுதத்தால்போர்செய்ய வேண்டுமென்றல். நினகரத்தின்மிசையேந்திநின்றதுநீள்கதையாகில் எனகரத்திற்றண்டுகொண்டேயானுமுடற்றுவனென்றான் தனகரற்குங்குமரற்குந்தண்டுழாய்முடியவற்கும் தினகரற்குமேலானசிந்தையுடன்செருச்செய்வோன். |
(இ -ள்) தனகரற்கும்-குபேரனுக்கும், குமரற்கும் - முருகக் கடவுளுக்கும்,தண் துழாய் முடியவற்கும் - குளிர்ந்த திருத்துழாய் மாலையைச் சூடியதிருமுடியையுடைய கண்ணனுக்கும், தினகரற்கும் - சூரியனுக்கும், மேலான -நன்குமதிக்கத்தக்க, சிந்தையுடன் - மனவுறுதியுடனே, செருசெய்வோன் - போர்செய்பவனாகிய வீமன், (துரியோதனனை நோக்கி), 'நின கரத்தின் மிசை -உன்னுடைய கையிலே, ஏந்தி நின்றது - தரிக்கப்பட்டுள்ளது, நீள் கதை ஆகில்- நீண்ட கதாயுதமேயாதலால், என கரத்தில் தண்டு கொண்டே - என்னுடைய கையிலுள்ள கதாயுதத்தைக்கொண்டே, யானும் உடற்றுவன் - நானும் போர் செய்வேன்,' என்றான் - என்று விடை கூறினான்; (எ - று.) |