பக்கம் எண் :

116பாரதம்சல்லிய பருவம்

அக்கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்றுவிடவே, அவனது குமாரர்கள்
பழிக்குப்பழி வாங்க வேண்டுமென்று நிச்சயித்துப் பரசுராமன் இல்லாத
சமயம்பார்த்துப் பர்ணசாலையினுட்சென்று சமதக்நிமுனிவனைத்
தலைதுணித்துப்போக, பின்பு வந்த பரசுராமன் பெருஞ்சினங்கொண்டுசென்று
அவ்வருச்சுனகுமாரர்களையும் உலகத்திலுள்ள செருக்குக்கொண்ட
அரசர்கள்பலரையும் அழித்தொழித்துச் சகலக்ஷத்திரியவம்ச விநாசகாரண
னாயினன்.  ஜமதக்நி முனிவனது தலையைக் கார்த்தவீரியார்ச்சுனகுமாரர்
துணித்திட்டபோது, அவனது மனைவியான ரேணுகாதேவி இருபத்தொருமுறை
தன் மார்பில் அடித்துக்கொண்டு புலம்பினதுபற்றி அரசர்களை இருபத்தொரு
தலைமுறைபரசுராமன் ஒழித்திட்டா னென்றும், பரசுராமன் தான் முதலில்
வீரவாதமாகப் பிரதிஜ்ஞைசெய்தபடி  அவ்வரசர்களது இரத்தவெள்ளத்தால்
ஸ்யமந்தபஞ்சகமென்ற ஐந்து தடாகங்களை யேற்படுத்தி அவற்றில் தந்தைக்கு
ஜலதர்ப்பணஞ் செய்திட்டானென்றும், தன்னாற் கொல்லப்பட்ட
அரசர்களதுதலைகளை ஆகுதியாக நெருப்பிற்பெய்து ஒரு வேள்விச்சடங்கை
முடித்து அவ்யாகத்தின் முடிவில் தனக்குச் சுவாதீனமாகவுள்ள
பூமிமுழுவதையுங் காசியபமுனிவனுக்குத் தானஞ்செய்துவிட்டு
மகேந்திரமலைக்குச் சென்றிட்டானென்றும் வரலாறு உணர்க.  நரமேதம் -
மனிதரைக் கொன்று செய்யும் யாகம்.  அக்கினிக்கு உள்ள ஏழுசுவாலைகளை
ஏழுநாக்குகளாகக் கூறுதல் மரபாதலின், 'நா வெழுபான்மையினுடையோன்'
என்றார்.

    'தபனனிகர்' என்ற அடைமொழி - மழுவுக்கும், பரசுராமனுக்கும்
பொருந்தும்.  மூவெழுகால் - பண்புத்தொகை.  ஏழுதீவு - ஜம்பூ, பிலட்சம்,
குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்பன.  பொன்னுலகு -
பொன்மயமாயுள்ள உலகம்.                                    (153)

154.

அந்நிலமேயிருவருக்குமமர்புரியலானவிடம்
மன்னவர்தம்முடற்சோரிவழிந்துசமந்தபஞ்சகமாம்
என்னநிலைபெற்றதடங்களுமங்கேயங்கேயுண்டு
உன்னிலெதிரில்லதனுக்கொலிகடல்சூழ்நிலத்தென்றான்.

     (இ -ள்.) அ நிலமே - (பரசுராமன் நரமேதஞ்செய்த) அந்த இடமே,
இருவருக்கும் - இவ்விரண்டுபேருக்கும், அமர் புரியல் ஆன இடம் -
போர்செய்தற்குத் தக்க இடமாம்:  மன்னவர்தம் - (பரசுராமனாற்
கொல்லப்பட்ட)அரசர்களுடைய, உடல் சோரி-உடம்பின் இரத்தம், வழிந்து -
பெருகியதனால்,சமந்த பஞ்சகம் ஆம் என்ன நிலைபெற்ற -
ஸ்யமந்தபஞ்சகமென்றுபிரசித்தமாக நிலைபெற்றுள்ள, தடங்களும்-(ஐந்து)
தடாகங்களும், அங்கேஅங்கே உண்டு - அவ்விடத்தில் அடுத்தடுத்து
உள்ளன; உன்னில் -ஆலோசிக்குமிடத்து, ஒலி கடல் சூழ்நிலத்து -
ஒலிக்கின்ற கடல்சூழ்ந்தநிலவுலகத்தில், அதனுக்கு - அந்த இடத்துக்கு,
எதிர் இல் - ஒப்பான இடம்வேறில்லை, என்றான்-என்று (கண்ணன்)
கூறியருளினான்; (எ - று.)

    வழிந்து - வழிய என்னும் எச்சத்தின் திரிபு.                  (154)