உடம்பையும்உதறிக்கொண்டு, மனோ வீரம் உற்று - மனத்தைரியத்தையடைந்து, மீளவும் - மறுபடியும், அருகு ஒரு பால் மேவி நிற்கும் வீமனை - சமீபத்தில் ஒருபக்கத்திற் பொருந்தி நிற்கிற வீமசேனனை, அடு கதையால் - கொல்லுதற்குரிய கதாயுதத்தினால், ஓடி முட்டி மோத - விரைந்து சென்று நெருங்கித் தாக்க, (எ - று.) - 'அமராடினர்' என வருங் கவியோடு முடியும். உகாமே- 'மே' விகுதிபெற்ற எதிர்மறை வினையெச்சம். உதறுதல் - சிதற அசைத்து வீசுதல். மாமேகமொத்தகாயம் - நிறத்தில் உவமம். 'வரட்சி'என்றும், 'அருகொருபார்மேவி' என்றும் பாடம்: பொருள் அதுவே. (177) வேறு. 178-இருவரும் கடும்போர்செய்தல். ஓம வுண்டிகொள் பேரழ லோடட லூதைவெஞ்சம ராடியவாறென ஆம ரங்களி னான்மதி யாதம ராடுகின்றநி சாசர ராமென வீம னுந்துரி யோதன நாமனும் வேகமொன்றிய வீரிய ராயடு சேம வன்கதை யாலம ராடினர் தேறிநின்றவர் வாள்விழி மூடவே. |
(இ -ள்.) ஓமம் உண்டிகொள் - (மந்திரபூர்வகமாக) ஓமஞ் செய்யப்படும்(ஹவிஸ் ஆகிய) உணவை உட்கொண்டு வளருந்தன்மையுள்ள, பேர்அழலோடு - பெரிய நெருப்புடனே, அடல் ஊதை - வலிமையையுடைய காற்று, வெம் சமர் ஆடிய ஆறு என - கொடிய போரைச் செய்தாற்போலவும்,-மதியாது-லட்சியஞ்செய்யாமல் [அலட்சியமாக], ஆ மரங்களினால் அமர் ஆடுகின்ற - ஆச்சாமரங்களைக்கொண்டு போர் செய்கிற,நிசாசரர் ஆம் என - அரக்கர்கள் போலவும்,-வீமனும் துரியோதன நாமனும்-வீமசேனனும் துரியோதனனென்னும் பேரையுடையவனும், வேகம் ஒன்றியவீரியர் ஆய் - உக்கிரம் பொருந்திய பராக்கிரமமுடையவராய், தேறி நின்றவர்வாள் விழி மூட - பார்த்துக்கொண்டுநின்ற வீரர்கள் (காணுதற்குக்கூசி)ஒளியுள்ள தங்கள் கண்களை மூடிக்கொள்ளும்படி, அடு சேமம் வல் கதையால்அமர் ஆடினர் - பகையழிப்பனவும் காவலாகவுள்ளனவுமான வலியகதாயுதங்களாற் போர் செய்தார்கள்; (எ - று.)
நெருப்புங் காற்றும் ஒன்றோடொன்று போர்செய்தாற்போல என்பது, முதலடியின் பொருள். ஓமவுண்டி - நெய்முதலிய தேவருணவுகள். ஓமம் - மந்திரஞ் சொல்லி நெருப்பிலிடப்படுவது. பெரியமரமாதலின், ஆச்சாமரத்தைக்கூறினார். ஆம் மரங்களினால் எனப் பதம் பிரித்து, கிடைத்தமரங்களைக்கொண்டு என்று உரைத்தலும் ஒன்று. நிசாசரர் - இரவில் (வலிமைகொண்டு) சஞ்சரிப்பவர்; அரக்கர்க்குப்பகலினும் இரவில் வலிமைமிகுதியாதலின், இப்பெயர். தேறிநின்றவர் - சாட்சியாகப்பார்த்து நின்றகண்ணன் பலராமன் முதலியோர்.
இதுமுதல் எட்டுக்கவிகள் - முதற்சீர் தேமாச்சீரும், இரண்டு மூன்று நான்காஞ்சீர்கள் கூவிளச்சீர்களுமாய் நேரசை முதலதாதலின் ஒற்றொழித்துப் பதினோரெழுத்துப் பெற்றுவந்தது அரையடி |