வுடைமைகூறினார், அது பாரந்தீர்ந்து இன்பமுறுஞ் சமயமாதலின், இங்ஙனம்கண்ணபிரான் கூறியருளிய குறிப்பைக்கொண் டன்றி வீமனால் நேரிற்கொல்லலாகாத துரியோதனனது ஆற்றலை விளக்க 'வீரன்' என்றார். (185) வேறு. 186.-வீமன் துரியோதனனை நெருக்கி மார்பில் குத்தல். அரிப்பதாகனுரகப்பதாகனையதிர்த்துமேலுறவடர்த்துநீடு உருப்பினோடதிசயிக்கவூருவையொடிக்கவேயவனுடற்றலும் நெருப்புறாவிழிசிவத்துவார்கடைநிமிர்ப்புறாதபுருவத்தனாய் மருப்புநாலுறுமதத்தமாவெனமதத்துமார்பின்மிசைகுத்தினான். |
(இ -ள்.) அரி பதாகன் - சிங்கக்கொடியுடையவனான வீமன், உரகம் பதாகனை - பாம்புக்கொடியுடையவனான துரியோதனனை, அதிர்த்து - அதட்டி, மேல் உற அடர்த்து - மேற்கொண்டு நெருக்கி, நீடு உருப்பினோடு -மிக்க கோபத்துடனே, அதிசயிக்க - (கண்டவர்) வியக்கும்படி, ஊருவைஒடிக்கவே - தொடையை முறிக்கவே,- அவன் - அத்துரியோதனன்,உடற்றலும் - பெருங்கோபங்கொண்டு மீட்டும் போர்தொடங்கியவளவில்,-(வீமன்), விழி சிவத்து நெருப்புஉறா - கண்கள்சிவந்து நெருப்பின்தன்மையடையப்பெற்று, வார் கடை நிமிர்ப்பு உறாத புருவத்தன் ஆய் - நீண்டகோடிகள் வளைவுமாறாத புருவங்களையுடையவனாய், மருப்பு நால் உறு மதத்தமா என - நான்கு தந்தங்கள் பொருந்திய மதம்பிடித்த ஐராவதயானை போல,மதத்து - கோபாவேசங்கொண்டு, மார்பின்மிசை குத்தினான் - (துரியோதனனது) மார்பின்மேற் குத்தினான்; (எ - று.) அதிசயிக்க - அதிசயமென்னும் சொல்லினடியாப் பிறந்த செயவெனெச்சம். சிவத்து - சிவந்து என்பதன் வலித்தல். கடை நிமிர்ப்புறாதபுருவத்தனாய் - புருவத்தை நெறிவுபட வளைத்தவனாய். 'மருப்புநாலுறுமதத்தமா வென மதத்து' என்றது, வீமனுக்குச் சேரும்; அன்றி, ஐராவதயானை போலும் வலிமையுடைய மார்பின் மேல் என்று மார்புக்கு அடைமொழியாக்கலும்ஒன்று; "மதவேமடனும் வலியு மாகும்" என்ற தொல்காப்பியத்தால், மதவென்பது - வலிமை யுணர்த்துவதோர் உரிச்சொல்லாதலறிக; அதன்மேல் அத்துச்சாரியைவருகையில், நிலைமொழியீற்றுஅகரத்தின்முன் சாரியைமுதல் அகரம் கெட்டது; [நன் - உருபு - 13.] இதுமுதல் ஐந்துகவிகள் - பெரும்பாலும் முதற்சீர் புளிமாச்சீரும், மூன்றுஐந்தாஞ் சீர்கள் தேமாச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள் கூவிளங்காய்ச்சீர்களும், ஏழாஞ்சீர் கூவிளச்சீருமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட எழுசீராசிரியச்சந்த விருத்தங்கள். தனத்ததானனன தத்த தானனன தத்த தானனன தத்தனா - என்பது, இவற்றிற்குச் சந்தக்குழிப்பாம். (186) |