வஞ்சினமுரைத்துவந்தனமின்னம்வன்குறட்பாரிடந்தன்னால் துஞ்சினமெனினுமமையுமென்றெண்ணந்துணிந்தனன்றுயிலறு கண்ணான். |
(இ -ள்.) 'இ இரவு அகல்வதன் முன்னர் - இந்த இராத்திரி கழிவதன் முன், வெம் சினம் உற சென்று - கொடிய கோபம் மிகப்போய், உன் பகை துணித்து - உனதுபகைவர்களை யொழித்து, மீளுதும் - திரும்பிவருவோம்,' என - என்று, பல படியும் - பலவகைகளாலும், வஞ்சினம் உரைத்து - சபதவார்த்தைகளைக்கூறி, எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி - வலியொடுங்கிய துரியோதனராசனது உயிரை ஒழியாதுநிற்கச்செய்து, வந்தனம் -வந்தோம்; (ஆதலால்), இன்னம் - இனி, வல் குறள் பாரிடந்தன்னால் - வலியகுறுகிய வடிவமுடைய பூதத்தால், துஞ்சினம் எனினும் - நாம்இறந்துவிட்டோமாயினும், அமையும் - தகுதியாம், என்று-, துயில் அறுகண்ணான் - தூக்கமொழிந்த கண்களையுடையவனாய், (அசுவத்தாமன்),எண்ணம் துணிந்தனன் - மனத்தில் நிச்சயித்தான்; (எ-று.) பொழுதுவிடிவதற்குள் பகையழித்து மீள்வதாகத் துரியோதனனெதிரிற் பலசபதங்களைச்சொல்லி அவனுக்கு ஆசையைமூட்டி அதனால் அவன் அரிதில் உயிர்தரித்திருக்குமாறு செய்துவந்த நாம் சும்மாவிருத்தல் சிறிதுந் தகுதியன்றாதலின், மீண்டுஞ்சென்று பாசறையுள் நுழையமுயல்வோம்: அங்கு அப்பூதத்தால் முன்போல ஊறுபட்டுமீளாமல் இனி இறக்க நேரினும் நேர்க என்று அசுவத்தாமன் இரவிற் கண்ணுறக்கமின்றிச் சிந்தித்தன னென்பதாம். செய்த சபதத்தை நிறைவேற்றாது உயிர்வாழ்தலினும் இறத்தலே தகுதியென்று கருதின னென்க. (209) 6.-அசுவத்தாமன் சிவபூசைசெய்தல். எண்ணியகருமமுடியினுமுடியாதொழியுனுமீசனைத்தொழுதல் புண்ணியமெனுமாறுன்னியாங்கொருதண்பொய்கையிற்புனல் படிந்தேறிப் பண்ணியலிசையின்படிவமாந்தெரிவைபங்களைப்பற்பலமலர் கொண்டு அண்ணியகருத்திலிருத்தியஞ்செழுத்தாலாகமப்படியடி பணிந்தான். |
(இ -ள்.) எண்ணிய கருமம் முடியினும் - நினைத்த காரியம் (நினைத்தபடியே) முடிவதனாலும், முடியாது ஒழியினும் - (அது அப்படி) முடியாமற் போவதானாலும், ஈசனை தொழுதல் புண்ணியம் - சிவபிரானைப் பூசித்தல் நற்றொழிலேயாம், எனும் ஆறு உன்னி - என்ற விதத்தை ஆலோசித்து, ஆங்கு ஒரு தண் பொய்கையில் புனல் படிந்து ஏறி - அவ்விடத்திலுள்ளதொரு குளிர்ந்த தடாகத்தில் நீராடிக் கரையேறி, பண் இயல்இசையின் படிவம் ஆம் தெரிவை பங்கனை - சுவரங்களின் வடிவமாயமைந்தசங்கீதத்தின் சொரூபமாகிய உமாதேவியை இடப்பக்கத்தில் உடையவனானசிவபிரானை, அண்ணிய கருத்தில் இருத்தி - பொருந்திய தன்மனத்திலேநாட்டி, பற்பலமலர்கொண்டு - பலவகைமலர்களை (அருச்சனைப்பொருளாக)க்கொண்டு, அஞ்சு எழுத்தால் - பஞ்சாக்ஷர மகாமந்திரத்தைச்சொல்லிக்கொண்டு, ஆகமம்படி - சைவாகமப்படி, அடி பணிந்தான் -திருவடிகளில் விழுந்து வணங்கினான்; (எ - று.) |