மூவரையும்வீடுமன் வலியத் தேரேற்றிக் கொண்டு செல்லுகையில், அரசர்கள் பலர் வந்து பொருது தோல்வியடைய, அவர்களுள் சிறிது போரில் முன்னிட்ட சாலுவனிடத்து அம்பையென்பவள் மனத்தைச் செலுத்தி வீடுமனினின்று நீங்கிச் சாலுவனிடம் சென்று சேர அவன் 'பகைவர் கவர்ந்துபோன உன்னை யான் தொடேன்' என்று மணம் மறுத்துவிட்டதனால், அவள் வனஞ்சென்று தவஞ்செய்து வரம்பெற்று அவ்வீடுமனைக் கொல்லுமாறு சிகண்டி யென்னும் அலிவடிவாகத் துருபதனிடத்துப் பிறந்து அங்ஙனமே பத்தாநாட்போரில் வீடுமன் அழிதற்குக் காரணமாய் முன் நின்றமை அறிக. (214) 11.-அசுவத்தாமன் பலரையுங்கொன்று உபபாண்டவரை யடுத்தல். உத்தமோசாவுமுதாமனுமுதலிட்டுள்ளவர்யாவரும்பிறரும் தத்தமோகையினால்வந்தெதிர்மலைந்தோர்தலைகளாற்பல மலையாக்கி மெத்தமோகரித்துப்பாரதமுடித்தவீரரைத்தேடிமேல்வெகுளும் சித்தமோடெங்குந்திரிந்துளானவர்தஞ்சிறுவரைவரையுமுன் சேர்ந்தான். |
(இ -ள்.) உத்தமோசாவும் - உத்தமௌஜஸ் என்பவனும், உதாமனும் - யுதாமந்யு என்பவனும், முதல் இட்டு - முதலாக, உள்ளவர் யாவரும் - உள்ளபாஞ்சாலராசர்க ளெல்லோரும், பிறரும் மற்றும் பலவீரர்களும், தத்தம்ஓகையினால் வந்து எதிர்மலைந்தோர் - தம் தமது ஊக்கத்தோடு வந்து எதிரிற்போர் செய்தனராக அவர்களுடைய, தலைகளால் - தலைகளைத் துணித்துத்தள்ளி அவற்றால், பல மலை ஆக்கி - அநேக மலைகளை உண்டாக்கி, மெத்தமோகரித்து - மிகவும் வீராவேசங்கொண்டு,- பாரதம் முடித்த வீரரை தேடி -பாரதப்போரை முடித்த வீரர்களான பாண்டவர்களைத் தேடிக் கொண்டு, மேல்வெகுளும் சித்தமோடு - மேன்மேற் கோபங் கொள்ளும் மனத்துடனே, எங்கும்திரிந்துளான் - அப்படைவீடு முழுவதிலும் திரிந்து வருபவனானஅசுவத்தாமன், (அங்கொருபக்கத்தில் படுத்துள்ள), அவர்தம் சிறுவர்ஐவரையும் முன் சேர்ந்தான் - அப்பாண்டவர்களுடைய புத்திரர்கள் ஐந்துபேரையும் எதிரிற்கண்டு சமீபித்தான்; (எ - று.) உத்தமோஜா - உத்தம ஓஜஸ் எனப்பிரிந்து, மேலான ஒளியுடையா னெனப் பொருள்படும். இவன்பெயர் உத்தமபானுவென்று வழங்குதலும் உண்டு; பொருள் இதுவே. உதாமன் - போரிற்கோபமுடையானென்று பொருள். இவ்விருவரும், துருபதனுக்கு உறவினரான பாஞ்சாலராசர்: பாஞ்சாலவீரரிற்சிறந்தவர். பஞ்சபாண்டவர்க்குத் திரௌபதியினிடம் பிறந்த குமாரரைவரும்உபபாண்டவரெனப்படுவர். இவர்கள் பெயர் - முறையே விந்தன், சோமன்,வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன் என்பன; பிரதிவிந்தியன், சுதசோமன்,சுருதகீர்த்தி, சதாநீகன், சுருதசேனன் என்று பெயர் வழங்குதலும் உண்டு. இவர்கள் வடிவத்தில் தம்தம் தந்தையை முற்றிலும் ஒத்திருப்பர். (215) |