பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்169

12.-உபபாண்டவர்கள்அசுவத்தாமனைக் காணுதல்.

பூதலமுழுதுங்கவர்ந்ததந்தையர்கள்  புறத்திடைப்போயதுந்துயின்ற
மாதுலன்முனிவன்மதலைகைப்படையான்மடிந்திடத்தடிந்தது
                                            முணரார்
தாதலரலங்கற்சமரவாண்முனியைத்தழலிடைவருபெருந்தையல்
காதலம்புதல்வர்கண்டுயில்புரிவவோர்கனவுகண்டனரெனக்கண்டார்.

     (இ -ள்.) பூதலம் முழுதும் கவர்ந்த - நிலவுலகமுழுவதையும்
(தங்களுடையதாகக்) கைப்பற்றிய, தந்தையர்கள் - (தங்கள்) தகப்பன் மாரான
பாண்டவர்கள், புறத்திடை போயதும் - (படைவீட்டினுள் இல்லாமல்
கண்ணபிரானுடன்) வெளியிலே சென்றதையும் - துயின்ற மாதுலன் -
தூங்கிக்கொண்டிருந்த (தங்கள்) மாமனான திட்டத்துய்மன், முனிவன் மதலை
கை படையால் மடிந்திட - துரோணபுத்திரனான அசுவத்தாமனது கையிலுள்ள
ஆயுதத்தால் இறக்கும்படி, தடிந்ததும் - (திட்டத்துய்மனை அசுவத்தாமன்)
தலையறுத்திட்டதையும், உணரார் - அறியாதவர்களாய், கண் துயில்
புரிவோர்- கண்மூடித்தூக்கங்கொண்டிருந்தவர்களான, தழலிடை வரு பெரு
தையல்காதல் அம் புதல்வர் - (துருபதராசனது) ஓமாக்கினியிலே தோன்றிய
சிறந்தமகளான திரௌபதியின் அன்புக்குரிய அழகிய பிள்ளைகளான
உபபாண்டவர்கள், தாது அலர் அலங்கல் சமரம் வாள் முனியை -
பூவிதழ்கள்மலர்ந்த போர்மாலையைத் தரித்த போருக்குரிய
வாளாயுதத்தையேந்தியஅந்தணனான அசுவத்தாமனை, கனவு கண்டனர்
என கண்டார் -கனாக்கண்டாற்போலத் தூக்கத்திற்சிறிது கண்டார்கள்;
                                                 (எ - று.)

    பூதலமுழுதுங் கவர்ந்த - பகைவரை முற்றிலும் வென்று
அவர்களுடையஇராச்சிய முழுவதற்கும் உரிமைபூண்ட.  திரௌபதி
பஞ்சகன்னிகைகளுள்ஒருத்தியென்னும்படி அடைந்துள்ள சிறப்புத்
தோன்றவும், அவள் மற்றைச்சாதாரண மனிதர்போல ஒருதாயின்
கருப்பத்தின் வாய்ப்பட்டுப் பிறவாமல்பரிசுத்தமான அக்கினியினின்று
வரமாகத்தோன்றிய உயர்வு விளங்கவும்,'பெருந்தையல்' என்றார்.    (216)

13.-அவர்களைப்பாண்டவர்களென்று கருதி அசுவத்தாமன்
அழித்தல்.

கண்டவர்தத்தம்படையெடுப்பதன்முன்காசினிமுழுவதும்வென்று,
கொண்டவரிவரென்றெண்ணியேசுடரிற்கொளுத்தியசுடரனையாரைத்,
திண்டவர்தமக்குச்சிகாமணியனையான்சினத்துடன்கலங்கிவண்டேறல்,
உண்டவர்தமைப்போன்மதத்தினால்வாளாலொருநொடியினிற்றலை
                                           துணித்தான்.

     (இ -ள்.) கண்டவர் - (இங்ஙனம்) பார்த்த பாண்டவகுமாரர்கள், தம்
தம்படை எடுப்பதன்முன் - (போர்செய்தற்குத்) தம்தமக்கு உரிய ஆயுதத்தை
யெடுத்துக் கொள்வதன்முன், சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை -
ஒருவிளக்கினின்று ஏற்றிய மற்றொரு விளக்குப்போல விளங்குகிற அவர்களை,
திண் தவர் தமக்கு சிகாமணி