16.-அசுவத்தாமன் தனியேஅனைவரையும் அழித்த திறமை. புகலரும்பதினெண்பூமிமுற்றுடையபூபதிகளுமவர்படைத்த இகலருந்தந்திதேர்பரிகாலாளென்பனயாவையுஞ்சேரப் பகலருஞ்சமரிற்பதின்மடங்காகப் பாதிநாளிரவினிற்படுத்தான் தகலருங்கேள்வித்தாமனேதாமச் சடையவன்றனயனாதலினால். |
(இ -ள்.) தகல் அரு கேள்வி - தகுதியான அரிய நூற்கேள்விகளையுடைய, தாமனே - அசுவத்தாமனொருவனே,-(தான்), தாமம் சடையவன் தனயன் ஆதலினால் - (கொன்றை) மாலையைத் தரித்த சடையையுடைய சிவபிரானது குமாரனாதலால்,-புகல் அரு பதினெண் பூமி முற்று உடைய பூபதிகளும் - வருணித்துச் சொல்லுதற்கரிய பதினெட்டுவகை நாடுகள் முழுவதையுந் தமதாகவுடைய அரசர்களையும், அவர் படைத்த - அவர்கள் (தமதாகப்) பெற்றுள்ள, இகல் அரு தந்தி தேர் பரி காலாள் என்பனயாவையும் - எதிர்த்தற்கு அரிய யானைகள் தேர்கள் குதிரைகள் பதாதிகள்என்னும் நால்வகைச் சேனைகளெல்லாவற்றையும், சேர-ஒருசேர, பகல் அருசமரில் பதின்மடங்கு ஆக - பகற்பொழுதில் நடந்த அரியபோரினும்பத்துமடங்கு அதிகமாக, பாதிநாள் இரவினில் - அந்நாளின் நடுராத்திரியிலே,படுத்தான் - அழித்திட்டான்; (எ - று.) அழித்தற்றொழிற்கடவுளான சிவபிரானது குமாரனாதலால், அசுவத்தாமனொருவன்தானே மிகப் பலவீரர்களையும் அவர்களுடைய அளவிறந்த சேனைகளையும் அழித்திட்டன னென்பதாம். கீழ்நடந்த பதினெட்டுநாட் பகற்போர்களிலும் பலபகைவர் திரண்டு கூடிப்பொருதும் அழித்திடப்படாதவரை அன்றையொருநாளிரவின் ஒருபகுதியில் ஒருவன் அழித்த திறத்தை மூன்றாமடியாற் குறித்தார். பதினெண்பூமி - சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுவம் குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் கடாரம் கௌடம் கோசலம் திரவிடம் என்பன. (220) 17.-அசுவத்தாமன்உபபாண்டவர் தலைகளுடன் துரியோதனனை யடைதல். உள்ளியபடியேகடுஞ்சினங்கன்றி யுள்ளவர்யாரையுமுருக்கித், துள்ளியவிடைபோற்செருக்கியப்புரத்தின்றுவாரநின்றவரையுங் கூட்டித், தெள்ளியகுமரர்சென்னியைந்தினையுந்தேவருந்திகைத்திடத் தூக்கி, வெள்ளியங்குருவந்தெழுமுனேகுருவின்மிகுகுலவேந்தை வந்தடைந்தான். |
(இ -ள்.) (அசுவத்தாமன்), உள்ளியபடியே - தான் நினைத்தபடியே, கடுசினம் கன்றி - மிக்க கோபம் வெதும்பப்பெற்று, உள்ளவர் யாரையும் முருக்கி - (அப்படைவீட்டில்) உள்ளாரெல்லாரையும் அழித்து, துள்ளிய விடைபோல் செருக்கி - துள்ளிக் குதிக்குந்தன்மையுள்ள காளையெருது போலக்களிப்புக்கொண்டு, அ புரத்தின் துவாரம் நின்றவரையும் கூட்டி - அந்தப்படைவீட்டின் வாயிலிற்காத்து |