பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்175

     (இ -ள்.) ஓதும் வேந்துக்கு - (இவ்வாறு உண்மையை எடுத்துக்) கூறின
துரியோதனராசனுக்கு, ஒரு மொழியும் சொலான் - யாதோர் எதிர்மொழியுஞ்
சொல்லமாட்டாதவனாய், வேதபண்டிதன் நிற்க - வேதங்களில் வல்லவனான
அசுவத்தாமன் மௌனமாய்நிற்க, அ வீரனை - அந்தவீரனான
அசுவத்தாமனைப் பார்த்து, 'பாதகம் செய்கை - தீவினைசெய்தல்,
பார்ப்பனமாக்களுக்கு - அந்தணர்களுக்கு, ஏதம் ஏதம் - மிக்ககுற்றமாம்;
(அங்ஙனமாக), இது செய்த ஆறு என் - (நீ) இதனைச் செய்தவிதம்
என்னே?'எனா - என்று சொல்லி, - (எ - று.) - 'எனா' என்றது, மேல்
230-ஆம்கவியில் 'என்று பன்மொழி கூறி' என்று முடியும்: ஆதலால்; இவை
குளகம்.'என் செய்தவாறே' என்றும் பாடம்.

    பார்ப்பனமாக்கள் - பார்ப்பாராகிய மனிதரென இருபெயரொட்டு. 
ஏதம்ஏதம் - அடுக்கு, மிகுதிவிளக்கும் இது - குமாரரைக் கொன்றது. 
தூங்கிக்கொண்டிருக்கையில் கொன்றிட்ட வீரமிலாதானை வீரனென்றது,
இகழ்ச்சியென்னலாம்.  வீரனை எனா என்று இயையும்.            (225)

22.

துன்னுபாரதந்தோன்றியநாண்முதன்
மன்னரோடமலைந்தனைவாளியால்
சொன்னபாலர்மகுடந்துணித்ததின்று
என்னவீரியமென்னினைந்தென்செய்தாய்.

     (இ -ள்.) துன்னு - நெருங்கிய, பாரதம் - பாரதயுத்தம், தோன்றிய
நாள்முதல் - தொடங்கியநாள் முதலாக [பதினெட்டு நாள்களிலும்], மன்னர்
- (பலவகை) அரசர்கள், ஓட - தோற்று ஓடும்படி, வாளியால் -
அம்புகளால்,மலைந்தனை - போர்செய்தாய்; (அப்படிப்பட்ட நீ), இன்று -
இன்றைத்தினத்தில், சொன்ன - கீழ்க்குறிக்கப்பட்ட, பாலர் -பாண்டவகுமாரர்களின், மகுடம் - தலையை, துணித்தது - அறுத்திட்டது,
என்ன வீரியம் - என்ன பராக்கிரமம்? என்நினைந்து என் செய்தாய் -
என்னஎண்ணம் எண்ணி என்ன காரியஞ் செய்தாய்? (எ - று.)

    அசுவத்தாமனது பலபராக்கிரமங்களை யெடுத்துக் கூறி அவனைப்
புகழ்ந்து நீ செய்த காரியம் பாலஹத்திதோஷமாக முடிந்ததேயென்றவாறு.
என் நினைந்து என்செய்தாய் - தொன்றுதொட்டுத் தீராப்பகைவராயுள்ள
பாண்டவரைக் கொல்வதாகக் கருதி யாதொரு களங்கமுமில்லாத
அவர்மக்களைக் கொன்றிட்டாயே! என்று இரங்கினான்.  மகுடம் -
தானியாகுபெயராய்த் தலையைக் குறித்தது.                     (226)

23.

இருகுலத்திலெமக்குமவர்க்குமிங்கு
ஒருகுலத்தினுமுண்டெனவில்லையாற்
குருகுலத்தின்கொழுந்தினைக்கிள்ளினை
வருகுலத்தொருமாசறுமைந்தனே.

     (இ -ள்.) இரு குலத்தில் - (திருதராட்டிரகுமாரர் பாண்டுகுமாரர்
என்கிற)இரண்டு மரபுகளுள், எமக்கும் - (திருதராட்டிர குமாரராகிய)