தபநன்- உஷ்ணகிரணங்களால் தபிப்பவன். பீமன் - (பகைவர்களுக்குப்) பயங்கரனானவன். தெயித்தியர், செயித்தான் - அகரம் எகரமானது, மோனைத்தொடைக்காக. சேய் - ஆண்பாற் சிறப்புப்பெயர்: செம்மை யென்னும் பண்புப்பெயர், ஈறுபோய் ஆதிநீண்டு முன்நின்றமகரமெய்யகரமாத்திரிந்து, சேய்என நின்றது; இந்த நிறத்தின் பெயர் - முதலில் செந்நிறமுடைய முருகக்கடவுளுக்குப் பண்பாகுபெயராய், அது பின்புஅவன்போலப் பலபராக்கிரமங்களிற் சிறந்த இளவீரனுக்கு (க் குமார னென்றவடசொற் போல) உவமையாகுபெயராய் வழங்கும்: இருமடியாகுபெயர். (12) 13.-சூரியனுதித்தவுடன் வீமன்போர்க்களஞ்சேர்தல். அற்றையிரா விடிவளவுந் தனித்தனியேயாகுலமுற்றனிலன் மைந்தன், மற்றைநால்வரு மாலு மன்னவரும் வரூதினியு மருங்குசூழ, இற்றைநாள் வஞ்சினத்தின் குறைமுடிக்க வேண்டுமெனு மிதயத்தோடும், பிற்றைநாண் முரசதிரவளைமுழங்கக் களம்புகுந்தான்பிதாவைப் போல்வான். |
(இ -ள்.) அற்றை இரா - அந்தப்பதினேழாநாளின் இரவு, விடிவு அளவும் - கழியுமளவும், (பாண்டவர்ஐவரும்), தனித்தனியே ஆகுலம்உற்று - தனித்தனியே விசனமடைந்து, (அதன்பின்),- பிற்றை நாள் - அடுத்த தினமான பதினெட்டாநாளில்,-பிதாவைப் போல்வான் - தன் தந்தையான வாயுவை யொப்பவனான, அனிலன் மைந்தன் - வாயுகுமாரனான வீமன்,- 'வஞ்சினத்தின்குறை-(முன்பு செய்த) சபதத்தின் குறையை, இற்றை நாள் - இன்றைத்தினத்திலே, முடிக்கவேண்டும் - (நான்) முடித்துவிடவேண்டும்', எனும்- என்று எண்ணுகிற, இதயத்தோடும் - மனத்துடனே, மற்றை நால்வரும் -(தன்னுடன் பிறந்தவரான தருமன் முதலிய) மற்றைப்பாண்டவர் நான்குபேரும்,மாலும் - கண்ணபிரானும், மன்னவரும் - மற்றை அரசர்களும், வரூதினியும் -சேனையும், மருங்கு சூழ - பக்கங்களில் சுற்றிலும்வரவும்,-முரசு அதிர -யுத்தபேரிகைகள் ஆரவாரிக்கவும், வளை முழங்க - சங்கங்கள் ஒலிக்கவும்,களம்புகுந்தான் - போர்க்களத்திற் சேர்ந்தான்; (எ - று.)
'உற்று'என்ற செய்தெனெச்சத்தை 'உற' எனச் செயவெனெச்சமாகத் திரித்து, 'புகுந்தான்' என்ற முற்றோடு முடித்தல், இலக்கண நடைக்கு ஒத்ததாம். வஞ்சினமென்றது, திரௌபதியைத் துகிலுரிந்தகாலத்தில் வீமன் 'துரியோதனாதியர் நூற்றுவரையும் யானே கொல்வேன்' என்று பிரதிஜ்ஞைசெய்து போந்தது. அந்தச்சபதத்தின்படி கீழ்ப் பதினேழு போர்நாள்களில் நூற்றுவருள் தன்னாற்கொல்லப்பட்டவ ரொழிந்தமற்றையோரைஇன்று கொன்றுதீர்க்கக் கருதினனென்க. இங்ஙனம் சபதம் முடிக்கவிரைந்தமைபற்றியே, இங்கு இவனைத் தலைமையாக்கிக் கூறினார். அன்று,இன்று என்ற மென்றொடர்க்குற்றியலுகரங்கள் வன்றொடராய் ஐகாரச்சாரியைபெற்று அற்றை, இற்றை என நின்றன. |