(இ -ள்.) கிடந்த உடல் - (போர்க்களத்திலே) விழுந்துகிடந்த உடம்பு, வானவர்தம் கிளை சொரிந்த பூ மழையால் - தேவர்களுடைய கூட்டம் பொழிந்த புஷ்பவர்ஷத்தால், கெழுமுற்று ஓங்க - நிறைந்து உயரவும்,- நடந்த உயிர் - மேற்சென்ற உயிர், புத்தேளிர் அரமகளிர் விழிமலரால் - தேவசாதியரான அப்ஸரஸ்ஸ்திரீகளின் மலர்போன்ற கண்களின் நோக்கத்தால், நலன் உற்று ஓங்க - இன்பமடைந்து சிறக்கவும்,- அளிகள் அடர்ந்து மொகுமொகு எனும் ஆமோதம் வலம்புரி தார் அண்ணல் - வண்டுகள் நெருங்கி மொய்த்து மொகுமொகென்று ஒலிக்கப்பெற்ற மிகுமணமுள்ள நஞ்சாவட்டைப் பூமாலையையுடைய துரியோதனன்,- யாரும் மிடைந்து மிடைந்து எதிர்கொள்ள - (தேவர்களும் தேவமாதர்களுமாகிய) எல்லோரும் நெருங்கி நெருங்கி வந்து எதிர்கொண்டுஉபசரிக்க, வீரர்உறை பேர் உலகம் மேவினான் - (போரிற்பின்னிடாது இறந்த) வீரர்கள் வசிக்குமிடமான பெரிய வீரசுவர்க்கலோகத்தை யடைந்தான்; (எ - று.) முதலிரண்டடிகளில் உடல் உயிர் என்ற இரண்டுக்கும் ஒருங்கே மலர் மேல்விழப்பெறுதல் கூறினார். ஆமோதம் - மிக்கவாசனை. இதுமுதல் நூல்முடியுமளவும் பதினைந்து கவிகள் - இச்சருக்கத்தின் பதினோராங்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள். (236) 33.-அசுவத்தாமன் முதலியோர்வியாசரைக் கண்டு செய்தி கூறல். கேள்வியுடை வரிசிலைக்கைம்முனிமகனு மாதுலனுங் கிருதனென்னும், வாள்விறல்கூர் நரபதியுங் குருபதிதன்வாய்மையினான் மாழ்கி யேகி, வேள்வியருங் கனன்மூன்றுமொருவடிவாய்ப் பிறந்தனைய வியாதற் கைவர், தோள்வலியுந்தஞ்செயலுந் தொழாமுடியோன் றுஞ்சியதுந் தொழுது சொன்னார். |
(இ -ள்.) கேள்வி உடை - நூற்கேள்விகளையுடையவனும், வரிசிலை கை- கட்டமைந்த வில்லை யேந்திய கைகையுடையவனுமான, முனி மகனும்- துரோணனது புத்திரனான அசுவத்தாமனும், மாதுலனும் - அவன் மாமனாகிய கிருபனும், கிருதன் என்னும் - கிருதவர்மா என்ற, வாள் விறல் கூர் நரபதியும் - ஆயுத வலிமை மிக்க அரசனும், - குருபதி தன் வாய்மையினால் - குருகுலத்தலைவனான துரியோனனது வார்த்தையால், மாழ்கி ஏகி - வருத்தப்பட்டுக்கொண்டு சென்று,- வேள்வி அரு கனல் மூன்றும் ஒரு வடிவு ஆய் பிறந்து அனைய வியாதற்கு - யாகத்துக்குரிய அருமையான மூவகை அக்கினிகளும் ஒரு முனி வடிவங்கொண்டு பிறந்தாற்போன்ற வேதவியாச முனிவனுக்கு,- ஐவர் தோள் வலியும் - பாண்டவர்களுடைய புயபலத்தையும், தம் செயலும் - தங்கள் செய்கையையும், தொழா முடியோன் துஞ்சியதும் - (எவரையும் எக்காலத்தும்) வணங்காத முடியையுடைய மன்னனான துரியோதனன்இறந்ததையும், தொழுது சொன்னார் - வணங்கிக் கூறினார்கள்; (எ - று.) |