பக்கம் எண் :

பதினெட்டாம்போர்ச் சருக்கம்19

     இற்றைநாள்- இன்றாகியநாளென இருபெயரொட்டு.  பிற்றை - பின்
என்ற இடைச்சொல்லின்மேல், து ஐ - சாரியைகள்.  வளை -
உட்சுழிவுடையது.  வேண்டும் - ஒருவகை வியங்கோள்.            (13)

14.-யாவரும் போர்க்களஞ்சேர்ந்துதருமனை யடுத்தல்.

விம்முபெரும் பணையொலியால் விண்டதுகொலண்டமென
                                  விண்ணோரஞ்சக்,
கைம்முகமாமுதலான கடுஞ்சேனைப் பாஞ்சாலன் காதன்
                                        மைந்தன்,
எம்முகமுந்தானாகி யிரதமூர்ந்தணிவகுக்க விளையோர்யாருந்,
தம்முனை வந்தடி வணங்கிப் புடைசூழ்ந்தார் சிறிது மனஞ்
                                     சலிப்பிலாதார்.

     (இ -ள்.) விம்மு - ஆரவாரஞ்செய்கிற, பெரு பணை ஒலியால் -
பெரியவாத்தியங்களின் ஓசையால், அண்டம் விண்டதுகொல் என -
அண்டமுகடுஅதிர்ந்து பிளந்திட்டதோவென்று, விண்ணோர் அஞ்ச -
தேவர்கள் பயப்பட,கை முகம் மா முதல் ஆன - துதிக்கையையுடைய
முகத்தையுடைய யானைமுதலிய, கடு சேனை - கொடிய
சேனைக்குத்தலைவனான, பாஞ்சாலன்காதல்மைந்தன் - பாஞ்சால
தேசத்தரசனாகிய துருபதனது அன்புள்ள புத்திரனானதிட்டத்துய்மன், எ
முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து - எல்லாப்பக்கங்களிலும்
தானேயாகும்படி நாற்புறமும் விரைந்து தேரைநடத்தி,அணிவகுக்க -
(தன்சேனையைப்) படைவகுக்க,-சிறிதும் மனம் சலிப்பு இலாதார்
-சற்றும் மனந்தளர்தலில்லாதவர்களான, இளையோர் யாரும் - தம்பியரான
(வீமன் முதலியோர்) எல்லாரும், வந்து - (அருகில்) வந்து, தம் முனை -
தங்கள் தமையனான தருமனை, அடி வணங்கி - பாதங்களில் விழுந்து
நமஸ்கரித்து, புடை சூழ்ந்தார் - பக்கங்களிற் சூழ்ந்துநின்றார்கள்; (எ - று.)

     முதலடி- அதிசயோக்தி: வாத்தியகோஷத்தின் மிகுதியை விளக்கும்.
துதிக்கையுள்ள முகமுடைய விலங்கு எனவே, யானையாயிற்று.  ஆகி - ஆக
என எச்சத்தைத் திரிக்க.  தம்முன் என்பதில், முன் என்றது-முன்னே
பிறந்தவனுக்குக் காலவாகுபெயர்.                              (14)

15.-சல்லியன் அத்திரயூகம்வகுத்தமையும், தருமன்
கண்ணனை வினாவலும்.

அத்திரயூகமதாக வரும்பெருஞ் சேனையைவகுத்தாங்கதிபனாகி,
மத்திரபூபதி நின்றவலியினைக்கண் டதிசயித்துமாலைநோக்கி,
இத்திறமாகிய படையொ டெப்படிநாஞ்சிலபடைகொண்
                                 டெதிர்ப்பதென்றான்,
குத்திரமாகிய வினைகளொருகாலுந்திருவுளத்திற் குடிபுகாதான்.

     (இ -ள்.) ஆங்கு - எதிர்ப்பக்கத்தில், மத்திர பூபதி - மத்திர தேசத்து
அரசனான சல்லியன், வரும் பெரு சேனையை - (தன்னிடம்) வந்த பெரிய
சேனையை, அத்திரயூகமது ஆக வகுத்து - அஸ்திரமெனும் வியூகமாக
அணிவகுத்து, அதிபன் ஆகி நின்ற - சேனைத்தலைவனாய்நின்ற, வலியினை
-வலிய நிலைமையை, கண்டு - பார்த்து,